cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

கரிகாலன் கவிதைகள்


பிறனில்

என் பறவை பேராசை பிடித்தது
கடலை நாவல் பழமென
நினைத்துத் தூக்க முயல்கிறது

என் மீன் பாசத்துக்கு ஏங்குகிறது
மீன்கொத்தியின் அலகை
தாய்க்கரமென ஆசையாகப் பற்றுகிறது

என் நிலாவுக்கு உதவும் குணம்
மகவை புதரில் வீசியெறியச் செல்லும்
தாயின் ஒற்றை வழித்தடம்மீது
பூர்ணிமையைப் பொழிகிறது

கருணை மிகுந்ததென் நதி
நள்ளிரவில் கொலைக்கருவியை குழந்தையெனக் கருதி குளியாட்டுகிறது

தன் டிஸ்லெக்ஸியாவை
மகிமையெனக் கருதுமென்
கடவுள் முகவரிமாறி
பிறனில் துயில்கிறார்.


திகில் கதை

 

அது ஒரு திகில் நிறைந்த கதை
அந்தக் கதையில்
அவன் தோற்றபோது
மோசமானவன் என்றார்கள்
வெற்றி பெற்றபோது
வல்லவன் என்றார்கள்
ஆனால் அவனோ
சிலரிடம் கண்ணியமாக இருந்தான்
சிலரிடம் மரியாதையாக இருந்தான்
தன் அனுமதியில்லாமல்
பிறர் தன்னை தாழ்வாக
எண்ணிவிடாத வண்ணம்
கவனமாக இருந்தான்
யாருக்கும் துன்பம் தராத
தவறுகளை செய்தான்
யாருக்கும் பொறாமையூட்டாத
சிறிய சாதனைகளை செய்தான்
யாரும் விலக விரும்பாதபடி
தீங்கற்றவனாக இருந்தான்
சற்றே சிரமமாக இருந்தாலும்கூட
அன்பைப் பயின்றவாறிருந்தான்
இறுதியாக..
தன்னை ஏற்றுக் கொள்வது
அவனுக்கு ஒரு திகில்
கதையாகத் தோன்றியது
இருப்பினும்
அதிலிருக்கும் மர்மத்துக்காக
அவனுக்கு
அந்த திகில் கதை பிடித்திருந்தது.


நான் ஒரு தாவரம்

காற்று கொண்டு வந்த
மகரந்தத் தூளில்
கண்விழித்த தாவரம் நான்

மழையும் கதிரும்
என்னை வளர்த்தன

சில நாடோடிகள்
இவ்வழியாகப் பாடிச்சென்றார்கள்
நான் கைத்தட்டினேன்
காற்றில் அசைவதாக
எண்ணியோ என்னவோ
அலட்சியமாகக் கடந்தார்கள்

பச்சைப் பசேலென வளர்ந்திருந்த
என் சிரசை ஒரு நாள் கடவுள்
மிருதுவாகக் கோதினார்

அடுத்த நொடி
பசியோடு வந்த ஆடொன்று
எனக்கு வலிக்குமா?
என்றெல்லாம் கவலைப்படாமல்
என் பசுமையைத் தின்றது

மீண்டும் மழை பெய்தது
மீண்டும் வெய்யிலடித்தது

சோர்வறியாமல் வளர்ந்தேன்
தூரத்தில் விளக்கு வெளிச்சம்
ஏதோ திருவிழாவென்று
மனிதர்கள் கூட்டமாகப் போனார்கள்

ஒரு மனிதர் பாடினார்
அந்தப் பாட்டில் மலர்ந்து
நான் பூச்சூடிக்கொண்டேன்

இளையராஜாவின்
இந்தப் பாடலைக் கேட்டுதான்
தான் காதல் கொண்டதாகக்
கூட வந்தவளிடம் கூறிய பெண்
என் இலைகளில் சில நனையும்படி
மூத்திரம் பெய்தாள்

நண்பகலில் பதற்றமாக வந்த தாயொருத்தி காம்போடு கிள்ளி
அம்மியிலிட்டு அறைத்து
வீங்கிய மகனின்
முட்டியில் பத்து போட்டாள்

இரண்டு இலைகள்
மிச்சமிருந்தன என்னிடம்

எந்த நோக்கமும் இல்லாத
நடைபயணி ஒருவன்
ஒரு இலையைப் பிய்த்தான்
அம்மா என்ற என் முனகலை
பொருட்படுத்தாமல்
சுருட்டி காதுகுடைந்தான்

பருவத்தைத் தடுமாற வைத்த
சூறாவளிக் காற்றுக்கு
ஒரு நடிகையின் பெயரை
மனிதர்கள் வைத்தார்கள்
வில்லனோடு நடனமாடும்போது
கடைசி ஆடையை
அவிழ்த்து வீசுவதுபோல
அது என் கடைசி இலையையும்
சிதைத்தது

நான் ஒரு தாவரம்
என்ன செய்வேன்?

இன்னொரு சொட்டு மழைக்காக
விடிந்தால் எழப்போகிற
கதிருக்காக காத்திருக்கிறேன்.


ரகஸ்யம்

வெள்ளைத் தீயாக
நந்தியாவட்டை மாலையை
தோளில் சூட்டி
இயற்பியல் தேர்வு எழுதப்போகுமுன்
101 வது ரகசியத்தை
அம்மனின் காதுகளில்
சொல்லிப் போகிறாளொரு
+ 2 மாணவி

சற்று நேரத்துக்குமுன்
பள்ளியிலிருந்து திரும்பியிருந்த
பக்கத்து வீட்டு சிறுவன்
தனது பதினைந்தாவது பொய்யை அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்

குடும்பத்தலைவி ஒருத்தி
பால்பாயிண்ட் பேனாவால்
உள்பாவாடையில்
பத்து இலக்க எண்ணைக்
குறித்து வைத்திருந்தாள்
மதியம் ரசம் வைத்து முடித்த பிறகு
10 இலக்கத்தை அழைத்தாள்
பேனா மை தீர்ந்து
ஒரு இலக்கம்
பாதி அழிந்திருக்க வேண்டும்
யூகித்து டயல் செய்ததில்
அவளது கணக்கில்
ஒரு மர்மம் கூடிப்போனது

யாவரும் பார்க்கிறபடியே
எல்லோருடைய கிளைகளும்
பூத்துச் சொரிகின்றனதாம்

ஆனாலும்,
வேர்கள் அப்படியில்லை
ஈரம் இருக்கிறதே என்று
பக்கத்து வீட்டு குளியலறையில்
சமயங்களில்
சிறிய ஓட்டையையும்
போட்டுவிடுகிறது.


கவிதைகள் வாசித்த குரல்:
அன்புமணிவேல்
Listen On Spotify :

About the author

கரிகாலன்

கரிகாலன்

கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்த கரிகாலன்; தொன்னூறுகளிலிருந்து தமிழிலக்கியத்தில் இயங்கிவருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் எழுதிய சில கவிதைப் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார்.
அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக உயிர் எழுத்து வெளியீடாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவல் உள்பட பல படைப்புகளை எழுதியுள்ளார்.

இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website