Getting your Trinity Audio player ready...
|
கவிஞர் ந. பெரியசாமியின் சமீபத்திய தொகுப்பான ” அகப்பிளவு” பரவலாகக் கவனிக்கப்பட்டது. ஒரு பொருள் சார் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும் இது.
காமத்தை மையமாகக் கொண்டியங்கும் கவிதைகள் அத்தனையும். கொஞ்சம் சிக்கலான விஷயம்தான் இது. காமத்தைப் பாடாதவர் யார்? அறம், பொருள் வழியாக வீடுபேறு நோக்கிச் செல்வதற்கான வழிகாட்டிய வள்ளுவருக்கே காமத்தைப் பாட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கிறது.
ந.பெரியசாமி தன்னளவில் முயற்சி செய்திருக்கிறார் – வார்த்தைகள் வாயிலாக, படிமங்கள் வாயிலாக, படங்கள் வாயிலாக.காமத்தை நெருக்கடி என்றுதான் கூற வேண்டும். ஏன் இந்த நெருக்கடி ஏற்பட வேண்டும்? காமத்தில் ஏற்படுவதுதான் என்ன? இது வரமா? சாபமா? காமம் உடலளவிலும் மனதளவிலும் சிக்கலாகக் காரணம் என்ன? நீண்டு கொண்டே செல்லும் கேள்விகள் இவை.
உண்மையில், ஒரு கவி மனத்திற்குக் காமம் என்ற பாடுபொருள் கைத்தடிதான். . எங்கே எப்படி அதைப் பயன்படுத்துவது என்பதுதான் சுவாரசியமானது. ‘அகப் பிளவு’ என்ற தலைப்பு கவர்ச்சிகரமாக உள்ளது. ‘வாயிலெறு ஊறிய நீர்’, ‘ ஓ ஓ இனிதே எமக்கிந்த நோய்’, ‘ கள்ளம் பிறவோ பசப்பபு’, ‘பொல்லா வறு முலை’, ‘ எலுமிச்சை மாயக்காரி’, ‘ஊடல் மரமேறும் வேதாளம்’ என்ற தலைப்புகளிலெல்லாம் கவிதைகள் உள்ளன.
ஒவ்வொரு கவிதைக்கும் சித்திரம் சரியாகப் பொருந்தி வந்துள்ளது. இது தொகுப்புக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. தரமான அச்சாக்கமும் பாராட்டுக்குரியது.
காமம் என்றாலே சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையுடனும் பாக்யராஜ் முருங்கைக்காய் சமாசாரத்துடனும் சேர்த்துப் பார்க்கும் நம்மவர்களுக்கு காமத்தின் இயல்பையும், அழகையும், எழுச்சியையும் பாடிப் புரிய வைப்பது சற்று சிரமம் தான். காமத்துப் பாலின் சாராம்சத்தை நவீன மொழியில் பாடுகிறார் கவிஞர். கவிதைப் பெருவெளியில் இது புதுமையான முயற்சி. அகப் பிளவில் காமம் நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காம நதி கடலில் கலந்து கருணைக் கடலாக உருமாற்றமடைய வேண்டுமென்பதே நம் அவா.
நூல்: அகப்பிளவு
ஆசிரியர் : ந.பெரியசாமி
வெளியீடு : சொற்கள் பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2023
பக்கங்கள்: –
விலை: ₹
நூலைப் பெற தொடர்பு எண் : 95666 51567