என் ஆசை
எப்போதும் ஒரே போல இருக்கிறது;
வாழ்வு என்னைக் கொண்டு சேர்க்கிற எந்தவொரு இடத்திலும்:
என் கால் விரல்களையும்
பின் விரைவில் என் முழு உடலையும்
நீரினுள் அமிழ்த்த விரும்புகிறேன்.
ஒரு தடித்த விளக்குமாற்றை உதறித் தட்டி,
உலர்ந்த இலைகள்
வதங்கிய மலர்கள்
மரித்த பூச்சிகள்
மற்றும் தூசியைப் பெருக்க விரும்புகிறேன்.
நான் ஏதாகிலும் ஒன்றை
வளர்க்க விரும்புகிறேன்
ஆசை சில வேளை அர்ப்பணிப்பாக உருமாறுமென்பது
சாத்தியமற்றதாகத் தென்படுகிறது
ஆனால் அது நடந்திருக்கிறது.
மேலும் நான் அப்படித்தான் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன்:
அப்படித்தான்
என் இதயச் சோலையில்
நான் கவனமாய்ப் பேணிய துளை
ஒரு இதயத்தை வளர்த்தது
தன்னை நிரப்ப.
- தமிழில்: மிருணா