நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள் . இந்த இதழில் பங்களித்த கவிஞர்களின் பதில்கள் இதோ..!
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
இருபது வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அந்த வயதில் தனிமை விரும்பியாக, எதனோடும், யாரோடும்.. ஒட்டுதல் இல்லாமல் கூச்ச சுபாவியாகவே இருந்தேன். என்னளவில், அதைக் கடப்பதற்கு அந்தச் சூழலையே… ஏதேதோ வார்த்தைகளால், இட்டு நிரப்பி நோட்டு புக்குகளில் கிறுக்கி வந்தேன்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முதல் கவிதைத் தொகுப்பு “அகாலத்தில் கரையும் காக்கை” கடற்காகம் பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2020 ல் வெளியானது. புத்தக வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது. கொஞ்சம் ஆசுவாசமான மனநிலை ஒரு பக்கமும், கூடுதல் பொறுப்பு உணர்வு ஒரு பக்கமுமாக அதன் பிறகு உண்டாகிக் கொண்டது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
எங்கள் ஊரில் நடக்கும் மாதாந்திர இலக்கியப் படைப்பரங்க நிகழ்வுகளில், கவிதைகள் வாசித்து, விமர்சனமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கின்றன.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
செங்கனி பதிப்பகத்தின் சிறந்த கவிதை நூலுக்கான விருதை, “அகாலத்தில் கரையும் காக்கை” என்ற எனது கவிதை நூல் பெற்றுள்ளது
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
எங்கள் தெருவிலிருந்த ஒரு வீட்டில்,ஆனந்த விகடனும், இன்னுமொரு வீட்டில் செம்மலர் இதழும் வாங்குவார்கள். அங்கிருந்து இரவல் வாங்கிப் படிப்பேன். தொடர்ந்து நூலகத்தில் போய் வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர் அ.வெண்ணிலாவின் “நீரிலலையும் முகம்” தொகுப்பை வாசித்து, அதன் ஈர்ப்பு, என்னளவில் அப்போது ஒரு நேர்த்திக்குத் தள்ளியதாகச் சொல்லலாம்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
கல்லூரி படிக்கும் வயதில், அதாவது 19வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்ததாக ஞாபகம் உள்ளது. ஆனால் அதன் பிறகு அதனை தொடர முடியாமல் போய், 2017ம் ஆண்டுமுதல் தான் மீண்டும் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.
அரசாங்க மருத்துவமனையை பற்றி எழுதிய கவிதையே என்னுடைய முதல் கவிதை. முழு கவிதை ஞாபகம் இல்லாமல் போனாலும், சில வரிகள் ஞாபகத்தில் உள்ளன
மதநல்லிணக்கம் மெய்யாகவே கடைப்பிடிக்கப்படுவது இங்குதான் குமுதம் ஆசிரியர் வந்து பார்த்தால்
மாறாமல் இருப்பது அரசு மருத்துவமனைகள் தான்.
அனைத்து சாதி நோய்களுக்கும்
ஒரே மருந்து…. அதே மருந்து….
குறுகுறுக்க வைத்துவிடுவார்
ஆறு வித்தியாச போட்டி
மருத்துவமனை கழிவறைக்கும்
பிணவறைக்கும்”
என அந்தக் கவிதை தொடரும்
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
முதன்முதலில் என்னுடைய கவிதை ‘படைப்பு’க் குழுமம் நடத்தும் ‘கல்வெட்டு’ எனப்படும் இணைய இதழிலும், அச்சு இதழ்களில் ஆனந்த விகடனிலும் வெளியானது.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
இதுவரை 1) என் மௌனங்களின் மொழிபெயர்ப்பு , 2) கமர்கட்டு என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் இ-புக் வடிவில் அமேசான் கிண்டிலும், 3) தேநீர் கடைக்காரரின் திரவ ஓவியம் மற்றும் 4) தனிமை நாட்கள் என்ற இரண்டு புத்தகங்கள் அச்சு புத்தகங்களாகவும் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.
முதல் புத்தக வெளியீடு முதல் குழந்தையை பிரசவிப்பதை போன்ற உணர்வை தந்தது. குழந்தையை தூக்குவது போல அந்த முதல் பிரதியை கையில் ஏந்தியது இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
கவிதை எழுதத் தொடங்கிய உடன் எனக்கான முதல் அங்கீகாரம் முகநூல் வாசகர்களிடமிருந்தும், படைப்பு குழம வாசகர்களிடமிருந்தும் கிடைத்தது. ஆனந்தவிகடன், இனிய உதயம், கணையாழி, கல்கி முதலிய இதழ்களில் வெளியான போதெல்லாம் வெவ்வேறான மக்களிடம் அங்கீகாரம் கிடைத்தது. இதை அனைத்தையும் விட தேனீர் கடைக்காரரை பற்றி நான் எழுதிய ஒரு கவிதையை, தர்மபுரியை சேர்ந்த ஒரு முகம் தெரியாத தேநீர் கடைக்காரர், முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்து ஒரு பெரிய பிளக்ஸ் பேனரில் பதிந்து, தன் தேநீர் கடைகள் முன்பு மாட்டி வைத்ததே எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
முதன்முதலில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற விருது படைப்பு குழுமம் மூலம் எனக்கு கிடைத்தது. தொடர்ந்து சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “கவிச்சுடர்” என்ற விருதும் எனக்கு கிடைத்தது
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
முதன்முதலில் ரசித்த கவிதை கண்டிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைதான்.
“காதலித்துப்பார்” என்ற தலைப்பில் “இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல” என்ற புத்தகத்தில் எழுதியிருப்பார்.
காதலித்துப் பார்
உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்… உலகம் அர்த்தப்படும்… ராத்திரியின் நீளம் விளங்கும்…. உனக்கும் கவிதை வரும்… கையெழுத்து அழகாகும்….. தபால்காரன் தெய்வமாவான்… உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்… கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்… காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்… காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்… வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்… காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்… இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்… வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்… இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்… நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்… உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்… காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்… ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்… தாகங்கள் சமுத்திரமாகும்… பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்… காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே… அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே… அதற்காகவேனும்… ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்… வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே… அதற்காக வேணும்… காதலித்துப் பார்!