நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள். இந்த இதழில் பங்களித்த கவிஞர்களின் பதில்கள் இதோ..!
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
பள்ளி முடியும் தருவாயில் என்று நினைக்கிறேன். ஒரு நாள் திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது முதியவர் ஒருவர் வரைந்த சாலை ஓவியத்தின் என் மனவோட்டம் பற்றியது.
மழையினால் அழிந்து விடும் அந்த ஓவியம்.
வயிற்றுச் சுருக்கத்தின்
கதைச் சுருக்கம்
வரைந்தவனுக்கு மட்டுமே தெரியும்
___ அழிகிறது சாலை ஓவியம்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
“கதிர்’ஸ் மின்னிதழ் “
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
ஆரம்பத்தில் டைரிகளில் நிறைய எழுதி தொலைத்து இருக்கிறேன். பின் சுத்தமாக விட்டுப் போனது. சில காலம் ப்ளாக் வைத்து எழுதிக்கொண்டு இருந்தேன்.
படிக்க ஆளில்லை. பிறகு நண்பர்கள், வாட்சப் என்று எழுதிய போது தோழி ஒருவர் மூலம் முகநூல் குழுவான மத்யமரில் இணைந்து எழுதத் துவங்கினேன். தொடர் பாராட்டு, உற்சாகம் இவற்றால் எனக்குக் கவிதைகளைத் தொகுக்கும் எண்ணம் வந்தது. என்னுடைய முகநூல் பக்கத்திலும் நிறைய கவிதைகள் பதிவிட்டு வருகிறேன்.
புத்தகம் போடுவது என் கனவுகளில் ஒன்று. யாருமே வாங்கவில்லை படிக்கவில்லை என்றாலும் எனக்கு நான் தான் முதல் வாசகி. என் எழுத்துக்களை எழுதிய பிறகு திரும்பி திரும்பி வாசித்து மகிழ்வது எனக்குப் பிடிக்கும். என் நினைவாக இந்தப் பூமிக்கு சில புத்தகங்களையேனும் விட்டுச் செல்ல வேண்டும் என்கிற ஆவலில் புத்தகம் போட நினைத்தேன். அது வார்த்தைகள் கொண்டு விவரிக்கவியலாத பரவசம். மனம் பெற்ற குழந்தை. எனக்கே எனக்காக பூத்த ஒரு மலரின் வாசம் போல. அப்படித் தான் உணர்ந்தேன்.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
கணவரிடமிருந்து!!
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
அப்படி எதுவும் பெறவில்லை.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
நிறைய உண்டு. எவ்வளவோ இருக்கிறது பாரதி கவிதைகள் பள்ளி நாளில் படித்தவை.
’தீம்தரிகிட’ அதன் ஓசைக்காக பிடிக்கும். ‘ஆங்கோர் பொந்தினில் வைத்தேன்’ பிடிக்கும்.
பார்த்த இடத்தில் எல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி கண்ணம்மா கவிதை பிடிக்கும்.
கவிஞர் வாலியின் நெடுங் கவிதைகள் பிடிக்கும். கலைஞரின் அடுக்கு மொழி கவிதைகள் பிடிக்கும். மு.மேத்தாவின்”கண்
“என் வாழ்க்கை நாடகத்தில் எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகளில் எழ முடியா வீழ்ச்சிகள்”
இந்த வரிகள் எத்தனை முறை படித்தேன் என்று கூட தெரியாது.
கவிஞர் வைரமுத்துவின் ‘தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம்’ கவிதை பிடிக்கும்.
செழியனின் ‘வந்த நாள் முதல்’ தொகுப்பு, பா.விஜய்யின் ‘உடைந்த நிலாக்கள்’ ,
தபூ சங்கரின் ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’ , ‘கொஞ்சல் வழிக்கல்வி,’
கவிக்கோவின்
“தென்றலைப் பாடியது போதும்
புயலைப்பாட நேரம் வந்துவிட்டது”“புத்தகங்களே குழந்தைகளைக் கிழிக்காதீர்கள்”
பிரமிளின்” சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று” கவிதை பிடிக்கும்.
மனுஷ் கவிதையான
“எனக்கு அழுவது பிரச்சினை இல்லை
உங்கள் முன் அழக்கூடாது”
என்கிற கவிதை பிடிக்கும்.
தற்சமயம் நினைவில் தோன்றியவை மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். இப்படி நிறைய கவிஞர்களின் நிறைய கவிதைகள் நிரம்பப் பிடிக்கும்.கரும்பு தின்னக் கசக்குமா என்ன?.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
எப்பொழுது எழுத துவங்கினேன் என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் சிறு வயதிலேயே கவிதை ஒரு ஆன்மாவை போல முழுமையாக வியாபித்திருந்தது. அப்பொழுதிலிருந்து கவிதைகள் வாசிப்பது அதன் மீதான தேடல் போக்குகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. சிறு பிராயத்தில் வண்ணதாசனின் கவிதைகளை வாசித்து என்னை அம்மா உறங்க வைக்கும் இரவுகள் இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றன. முதன் முதலில் குடும்ப மலர்கள் ஒரு கவிதை ஒன்று பிரசுகரமானது. அதற்காக இருபது ரூபாய் பரிசாக அனுப்பி வைத்தார்கள் இன்னும் ஞாபகமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
கவிதைகளின் பிரதான இயல்பு நம்மை கொஞ்சம் சோம்பல் கொள்ள வைத்து விடும் என்று நினைக்கின்றேன். அவை என் வாழ்வில் அர்த்தப்படுத்துதல்களை துவங்கிய பொழுது படைப்புகளையும் பிரசுகரமாகி இதழ்களில் பார்க்க வேண்டும் என்று ஆசையும் கூடியது. அது கொஞ்சம் சவாலாகவும் இருந்தது. தினத்தந்தியின் குடும்ப மலரில் பள்ளி காலங்களில் எழுதத் துவங்கி, பின்னர் வாரமலரில் எழுதினேன். அப்புறம், ஒரு ஐந்து ஆண்டு காலங்கள் இடைவெளிக்கு பிறகு ‘கல் குதிரை’யில் எழுதத் தொடங்கினேன். விகடனின் ‘தடம்’ நிறைய வாய்ப்புகள் தந்தது.
எதிலும் பெரிதாக எழுதி அனுப்பியதில்லை. இழப்புகளை அல்லது புறக்கணிப்புகளை தாங்க இயலாத ஒரு சூழ்நிலையோடு இருக்க நான் கட்டப்பட்டுள்ளதாக உணர்வதும் ஒரு காரணம்.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முதல் கவிதை தொகுப்பு அகநியின் வெளியீட்டில் மு. முருகேஷ் அவர்கள் “இரவின் விழிப்பு” என்ற பெயரில் கவிதை தொகுப்பாக தொகுத்து தந்தார். அதன் வெளியீடும் வந்தவாசியில் அவரது வீட்டில் ஒரு இலக்கிய கூட்டத்தோடு இதையும் நடத்தித் தந்தார். அதை அந்த மலை நாளில் ஒரு பெரு மழையோடு ஊருக்கு திரும்பி வந்தேன். அந்த பொழுதும் அந்த கவிதைகளும் ஒரு இயல்பான காலகட்டங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு அவ்வப் பொழுது பேசி செல்கின்றன.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
மறைந்த கவிஞர் வைகறையை கவிதை தொகுப்பு வந்தபோது சந்திக்க நேர்ந்தது. பொள்ளாச்சியில் இலக்கிய கூட்டத்தில் சந்தித்த ஞாபகம். ஒரு புதிய திசையை அவர் தான் திறந்து விட்டார். இன்னொரு உலகத்தை வேறொரு தளத்தை அணுக நிறைய புத்தகங்களை வாங்கி அனுப்பி தந்தார். அவரை என்றும் நினைக்கும் அளவுக்கு அவரது அன்புக்கு ஒரு தனித்தன்மை உண்டு. காலத்திற்கு ஏற்ற வகையில் நான் மாறி வந்திருந்தாலும், அவர் இழப்பு தந்த துயர் கனம் சேர்த்தாலும், அன்பை இன்னும் கூட்டி வைத்திருக்கிறது.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
கவிதைக்காக முதன் முதலில் பெற்ற விருது ‘தமிழ்நாடு முற்போக்கு இலக்கிய மேடை’ வழங்கிய ‘அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது’.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
ஏன் என தெரியாது. வண்ணதாசன் எழுதிய அத்தனை கவிதைகளும் பால்ய காலம் தொட்டு பிடிக்கும்.
- முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?
எனது r பன்னிரண்டாவது வயதில் எழுதிய என் முதல் கதைதான் நினைவிலுண்டு. கவிதை நான், +2 படிக்கையில் எழுதத் துவங்கினேன். முதல் கவிதை போட்டிக்காக, கன்னல் தமிழ் என்ற தலைப்பில் எழுதியது. இன்னும் என் பழைய “கவிதை நோட்டில்” அந்த கவிதை இருக்கிறது.
- முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?
முதல் முதலில் என் கவிதைகள் எழுத்து.காம் மற்றும் வைகறை.காமில்தான் வெளியாகின. முதல் அச்சு இதழ் ஆனந்த விகடன். வேறு எந்த இதழுக்கும் அனுப்பியதுமில்லை. எழுதுவது மிகக் குறைவு, அதனால் முடிந்தவரை எழுதியவற்றை ஏதாவது ஒரு இதழுக்கு இப்போதெல்லாம் அனுப்பி விடுகிறேன்.
- முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ?
முதல் தொகுப்பான “மணல் மீது வாழும் கடல்” கவிஞர் வைகறை அவர்கள் என் மீதும் எள் எழுத்தின் மீதும் வைத்திருந்த நம்பிக்கையால் அகநாழிகை பொன் வாசுதேவன் சாரின் அகநாழிகை பதிப்பகத்தின் வழியே நடந்தது. அப்போது, எனக்கு கவிதை புத்தகங்களுக்கான விமர்சன கூட்டங்களும் வெளியீட்டு விழாவும் நிகழ்த்தவில்லை. புத்தகத்தின் முதல் விமர்சன கூட்டம் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் நடத்தினார்கள், அன்று கவிஞர் சௌவியின் விமர்சனத்தின் போதுதான் அந்த புத்தகத்தை வெளியிட்ட முதல் மகிழ்வில் நனைந்தேன்.
- கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?
என் முதல் அங்கீகாரம், பள்ளியின் கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றது. அதுதான் நான் முதல் முதலில் வென்ற போட்டியும் கூட. மேலும் கவிதைகள் எழுத அது நல்ல திறப்பாயிருந்தது.
- முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?
இதுவரை விருதென்று ஏதும் பெற்றதில்லை. முதல் தொகுப்பில் கிடைத்த நற்பெயர் இன்னும் நல்ல கவிதைகள் எழுத வேண்டும் என்ற உந்துலைத் தந்தது. அப்போது, கரிகாலன் ஐயா, வண்ணதாசன் ஐயா, நாணற்காடன் அண்ணா, அம்சப்பிரியா சார், ஷான் கருப்புசாமி சார் போன்றவர்கள் நீங்கள் தொடர்ந்து நல்ல கவிதைகளைப் படைக்க வேண்டும் என்று பாராட்டியதுதான் விருதாக காண்கிறேன். ஏனோ! தொடர்ந்து இயங்குவதில் சற்றே இன்னும் சுணங்கியிருப்பதாகவேத் தோன்றுகிறது. இன்னும் நிறைய மெனக்கெட்டு கவிதைகளைத் தேடித் திரியும் முனைப்பை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறேன்.
- முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.
அப்துல் ரகுமான் ஐயாவின் “வேலி” கவிதைதான் என்னை இப்படியெல்லாம் யோசித்து எழுத முடியுமா என்று வியக்க வைத்தது.