cropped-logo-150x150-copy.png
0%
உரையாடல்கள்

கவிதை; சிறந்த வழித்துணையாகவும், ஆழமான நட்பாகவும் விளங்குகிறது. – கவிஞர் ப.காளிமுத்து உடனான நேர்காணல்


”தனித்திருக்கும் அரளிகளின் மதியம்”   கவிதைத்  தொகுப்பிற்காக 2022- ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி -யுவ புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் ப.காளிமுத்துவிடம் கவிதைத் தொகுப்பை முன்வைத்தும், பின்னணி குறித்தும் நுட்பம் – கவிதை இணைய இதழுக்காக பா.சரவணன் எடுத்த  சிறப்பு நேர்காணல் இது.


  • அரளி என்ற சொல்லைதொகுப்பின் தலைப்பில் வைக்கக் காரணம் என்ன ?

அரளி மரம் கிராமங்களில் பரவலாக வளரக்கூடிய ஒரு மரம். இதன் காய்கள் விடமுடையதும்கூட. ஆனால் பார்க்கப் பசுமையாகவும், செழிப்பாகவும் இருக்கக்கூடியது. எங்கள் வீட்டின் முன் பல வருடங்களாக நிழலுக்காக அரளி மரம் இருந்து வந்தது. அதுமாதிரியான மர நிழலில் மதியப் பொழுதைக் கழிக்கும் கிராமத்தில் உள்ள வயதானவர்கள், வேலைக்குச் செல்ல இயலாதவர்களின் நினைவாக இந்த தலைப்பு வைக்கப்பட்டது.

  • தீபாவின் 8 வயது என்ற கவிதை, வாசிக்கும்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஓராண்டுகளாக நிகழும் விரும்பத்தகாத நிகழ்வுகள் இத்தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம். இக்கவிதை எப்போது எழுதப்பட்டது, அது குறித்த உங்கள் நினைவுகள்…

தீபாவின் 8 வயது கவிதை 2018-19 காலகட்டத்தில் எழுதப்பட்டது. தீபா எனது அக்கா பெயர். அவர் இப்போது இல்லை. தீபாவிற்கு 8 வயதில் இறந்து விட்டார். அதுவரையிலான சிறுவயது நினைவுகளைக் கொண்டு இந்தக்கவிதை எழுதப்பட்டது. புகைப்படம் எடுக்க அடம்பிடிக்கையில் கையில் பூவொன்றைக் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே உள்ளது. அப்படியே முதல்வரியையும் துவங்கப்பட்டது. தொடர்ச்சியான நினைவுகள் வரிகளாயின. குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல்கள் இக்கவிதையின் இறுதி வரிகளாயின.

  • தமிழக் கவிதைகளில் டி ட்ரைவ் என்று முதல் முறையாக உங்கள் கவிதையில் தான் வாசிக்கிறேன். “களவு போன கடவுளின் கணினி” கவிதையில். இக்கவிதை உருவாக்கம், எந்த இதழில் வெளியானது, இக்கவிதைக்குக் கிடைத்த feedback எப்படி இருந்தது ?

இக்கவிதை எந்த இதழில் வெளியானது என்று நினைவில் இல்லை. நான் கணினி சார்ந்த துறையிலிருந்ததால் டி நினைவகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று எழுதப்பட்டது. நண்பர்களால் பாராட்டப்பட்ட கவிதைகளில் இதுவும் ஒன்று.

  • இதுவரை அச்சிலும், இணைய இதழ்களிலும் வெளியான உங்களின் அனைத்துக் கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம்பெற்று உள்ளனவா அல்லது வெளியான கவிதைகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மட்டும் இத்தொகுப்பில் இடம் பெற்று உள்ளனவா ?

இதழ்களில் வெளியான கவிதைகளில் ஓரிரு கவிதைகள் மட்டும் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.

  • கவிதை எழுதுவதில் வாசிப்பதன் பங்கு என்ன ? கவிதை எழுதுபவர்கள் பிற இலக்கிய மற்றும் கவிதை நூல்களை வாசிப்பது எந்த அளவுக்குக் கவிதை எழுத , எழுதிய கவிதையைச் செழுமைப்படுத்த, செப்பனிட உதவுகிறது?

கவிதை எழுதுவதற்கு வாசிப்பு முக்கிய பங்கு வகிப்பதாக உணர்கிறேன். நாம் எழுதும் கவிதை எந்த அளவிற்குச் சிறப்பாக வந்துள்ளது, செய்ய வேண்டிய திருத்தங்கள், நடை உள்ளிட்டவைகளைத் தீர்மானிப்பதற்கு நாம் வாசிக்கும் புத்தகங்களே உதவியாக உள்ளன.

  • இருண்மை மிக்க கவிதைகளில் , குறிப்பிடத்தக்கது “வயோதிகனொருவன் மட்டும் வாழ்ந்த ஒற்றை வீட்டில் தான்…”. இதன் உருவாக்கம் குறித்து…

இந்தக்கவிதை எனது தாத்தா நினைவாக எழுதியது. அவர் மறைந்த சில மாதங்களுக்குப் பின் அவர் வீட்டில் நுழைந்தபோது இருந்தவை பற்றி எழுதப்பட்டது.

  • பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துடனான உங்கள் தொடர்பு, அவ்வட்டத்தில் நீங்கள் பங்கேற்ற இலக்கியக் கூட்டங்கள், உங்கள் வாசிப்பு பழக்கத்தில் கவிதையின் உருவாக்கத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்த விவரங்கள், அவர்கள் கொடுத்த வழிகாட்டுதல்கள், விமர்சனங்கள் , பாராட்டுகள் பற்றி சற்றே விளக்கமாகக் கூறுங்களேன்.

க.அம்சப்ரியா 2014 ஆண்டு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தையும் பிற நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். அது முதல் சில கூட்டங்களில் பங்குபெற இயலாத போதும் தொடர் பயணியாக உள்ளேன். இக்கூட்டத்தில் படித்ததில் பிடித்தது, நூல் விமர்சனம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும். கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதைகளைத் தொகுத்து செய்திமடல் தயாரித்து அடுத்த மாத நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பதிப்பகத்தின் சார்பாக இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. புதிதாக எழுத வரும் படைப்பாளிகளைக் கண்டு அவர்களது படைப்புகளை நூலாக்கம் செய்யும் பணியை முனைப்பாகச் செய்து வருகிறது. விரைவில் 100வது நிகழ்ச்சிக்கு தயாராவதில் மகிழ்வு.

பொள்ளாச்சி இலக்கிய வட்ட கவியரங்கத்தில்தான் முதன்முதலாகக் கவிதை வாசித்தேன். அந்த கவிதையை அடுத்த மாத செய்தி மடலில் முதன்முதலாக அச்சில் பார்த்தது நெகிழ்வான தருணம். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் க.அம்சப்ரியா, செயலாளர் இரா.பூபாலன், புன்னகை செ.இரமேஷ்குமார், சோலை மாயவன், ச.தி.செந்தில்குமார், புன்னகை பூ ஜெயக்குமார் மற்றும் பிற நண்பர்கள் ஒவ்வொரு சந்திப்பின் போதும் கவிதைத் தொகுப்புகள், சிறுகதை தொகுப்புகள், வாசிப்பிற்காக வழங்குவார்கள். வாசித்துவிட்டு அடுத்த கூட்டங்களில் உரையாடவும் சொல்வார்கள். இது தொடர்ச்சியான வாசிப்பிற்கு உதவியாக இருந்தது. கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள் பற்றி உரையாடி நிறை, குறைகளைக் கூறுவார்கள். ஒரு சில இடங்களில் மாற்றம் செய்தால் சிறப்பாகக் கவிதை வரும் என சில ஆலோசனைகளை வழங்குவார்கள். பொள்ளாச்சி இலக்கிய வட்டம் எனக்கான ஆகச்சிறந்த களம். பயிற்சிப் பட்டறை.

  • பிற இலக்கியவட்டங்களில் இருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்களுடனான உங்கள் தொடர்புகள், கருத்துப் பரிமாற்றங்கள், உரையாடல்கள் பற்றி…

கோவை இலக்கிய சந்திப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பொள்ளாச்சி, கிணற்றுக்கடவு, கோவை, கம்பன் கலை மன்றம், சேலம் எழுத்துக்களம் உள்ளிட்ட அமைப்பின் படைப்பாளர்கள் அவ்வப்போது நேரிலோ, அலைபேசியிலோ படைப்புகள் குறித்து உரையாடி கவிதை செழுமைக்குத் தூண்டினர்.

  • வழக்கமாகக் கவிதையை ஒரே வீச்சில் எழுதி முடித்து விடுவீர்களா…அல்லது எழுதிய பின் திருத்தம் செய்து எடிட் செய்து ஓர் வடிவத்துக்குக் கொண்டு வருவீர்களா ?

ஒரு சில கவிதைகள் ஒரே வீச்சில் எழுதி விடுவேன். சில கவிதைகள் துவக்க வரி அல்லது அதற்கான கருவை மட்டும் குறித்து விட்டு சில நாட்கள் அல்லது மாதங்கள் காத்திருந்து கவிதையை முடிப்பதும் உண்டு. எழுதிய கவிதைகளை வேறு ஒரு சூழலில் நிதானமாக வாசித்துப்பார்த்து தேவையான மாற்றங்களைச் செய்வேன்.

  • உங்கள் கவிதைகள் சிலவற்றில் மாய எதார்த்த வாதத்தின் சாயல் இருக்கிறது. குறிப்பாக ”சாத்தானிடமிருந்து பெற்ற இலைகளில் வாழும்…”, ”கோயிலில் ஆறாவதாக நின்றுகொண்டிருந்த கடவுள்…”, “காணாமல் போன காகங்கள்…” போன்ற கவிதைகளில் கோணங்கியின் ஆரம்பக் கால சிறுகதைகளின் தாக்கம் இருப்பதைப்போல் தெரிகிறது. இது தற்செயல் நிகழ்வா? கோணங்கியின் கதைகளை வாசித்து இருக்கிறீர்களா?

கோணங்கியின் படைப்புகளின் சில வரிகளை முகநூலில் நண்பர்கள் பதிவிட வாசித்திருக்கிறேன். மற்றபடி முழுமையாக வாசிக்கவில்லை. தற்செயல் நிகழ்வாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

  • மனித மாண்புகளின் வீழ்ச்சி, அதனால் ஏற்படும் வலிகள், வலிகளின் விளைவால் நிகழும் தனிமை பற்றி உங்கள் கவிதைகள் அதிகமாகப் பேசுகின்றன. இதன் பின்னணி குறித்து…

சகோதரி இறந்த பின் எனது சிறுவயது முதலே வீட்டில் ஒரே பையானவே வளர்ந்து வந்தேன். தனிமை உணர்வு தொடர்ந்திருக்கலாம். பதின்ம பருவத்தில் கவிதையை நேசித்த பிறகு சிறந்த வழித்துணையாகவும், ஆழமான நட்பாகவும் விளங்கி வருகிறது. இயல்பாகவே வலிகளை ஏற்றுக்கொள்ளும் ஒருவானாக உணர்கிறேன். நான் சந்தித்த அல்லது சந்தித்திராத ஏதோ ஒரு வகையில் வந்தடைந்த சில மனிதர்களின் வீழ்ச்சி, வலிகள், சில நிராகரிப்புகள், இழப்புகள், அவமானங்கள், நோய்மைகள், ஏமாற்றங்கள், அலைக்கழிப்புகள், பகை போன்றவற்றின் விளைவாகவும் இருக்கலாம்.

  • பறவைகள், விலங்குகள் குறிப்பாகப் பூனைகள் , பூச்சிகள், தாவரங்கள் குறிப்பாக மரங்கள் உங்கள் கவிதைகளில் அதிகமாக இடம்பெறுகின்றன. அது குறித்து….

பொதுவாகவே கிராமம் சார்ந்த வாழ்வு என்பதால் இயற்கையை நேசிக்கும் வாய்ப்பு சற்று அதிகமாகவே கிடைத்தது எனலாம். பறவைகள், தாவரங்களை, பசுமையை நேரடியாகத் தரிசிக்கும் சூழல் உருவானது. நான் பிறந்தது முதல் அதன் முன்னர்கூட வீட்டில் பூனை வளர்ப்பது என்பது தற்செயலாகவே இருந்து வந்தது. பூனைகளை நெருக்கமாகவும், சிறந்த தோழமையாகவும் உணர்கிறேன். பூனைகள் நடமாட்டங்கள் யாரோ ஒருவரின் வருகையின் சிலிர்ப்பாகவும், அதன் ஓசை தனிமையை அடி ஆழத்தில் புதைப்பதாகவும் உணர்கிறேன்.

  • உங்கள் கவிதைகளில் சிறார்கள்  குறித்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அதன் பின்னணி என்ன ?

குழந்தைகள் யாவருக்கும் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு அடுத்தவர்களைப் புண்படுத்தத் தெரியாது. வசை பாடத் தெரியாது, துதி பாடத் தெரியாது. தெருவில் இருக்கும் குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள், பயணங்களில் தென்படும் குழந்தைகள் எனக் குழந்தைகளின் முகங்கள் எப்போதும் கருணை மிக்கவையாகவே எனக்கு தெரிகின்றன. அவர்களின் சிரிப்பை அலசி அலசி அதிலேயே மூழ்கிப்போகவும் பிடிக்கிறது.

  • அச்சில் வெளியான உங்கள் முதல் கவிதை எது ? இணைய இதழில் வெளியாவதற்கும், கவிதையை அச்சில் பார்ப்பதற்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா ?

 “பிச்சைக்காரனுக்குப்
பிச்சையிடாதீர்
தானமிடுங்கள்.”

இந்தக் கவிதை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செய்தி மடலில் வெளியானது. அதைத் தொடர்ந்து அடிக்கடி/பக்கத்து வீட்டுக் குழந்தையின்/விடுமுறைகளில் நோயாளியாகிறேன் என ஆரம்பிக்கும் கவிதை துடிப்பு என்னும் சிறுபத்திரிக்கையில் பிரசுரமானது மகிழ்வான செய்தியானது. இணைய இதழ்கள் எங்கு இருந்தாலும் வாசிக்கக்கூடிய வகையில் நம் எழுத்தை யாரும் அறிந்துகொள்ளும் வகையில் பரவச்செய்ய உதவி வருகின்றன. அதே வகையில் அச்சில் கவிதையைப் பார்ப்பது என்பதும் தனி பரவசம்தான்.

  • உங்கள் இலக்கிய வாசிப்பு கடந்து வந்த பாதை…

நான் சோமந்துரை சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாவது முதல் பன்னிரண்டாவது வரை பயின்றேன். அப்போது கணித ஆசிரியர் பாடங்கள் நடத்திய பிறகு, சிறிது நேரம் கதை, துணுக்குகள் என ஏதேனும் ஒன்றைக் கூறுவார். அப்படித்தான் முதன்முதலாகப் பாடங்கள் தவிர்த்துப் படைப்பு அறிமுகமானது. இயற்கை சார்ந்து, நட்பு சார்ந்து சில வரிகளை நோட்டில் எழுதி வைத்திருப்பேன். அதை யாரிடமும் காண்பித்ததில்லை. வெறுமனே பதிவு மட்டும் செய்த படியிருந்தது. இளங்கலை பயின்ற ந.க.ம கல்லூரி ஆண்டு மலருக்காகக் கவிதைகள் எழுதுவதற்காக எனது சிறுவயது தனிப்பயிற்சி நிலைய ஆசிரியர் க.அம்சப்ரியாவைச் சந்தித்தேன். அதன் பின்னர் தான் வாசிப்பு வெளி உருவானது. கவிதைகள் சார்ந்த புரிதலுக்கும், நடை, தன்மை குறித்த பயிற்சிக்காக அவருடைய புன்னகை கவிதை நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்நூலகம் கவிதைத் தொகுப்புகள் மட்டுமன்றி சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என பலதரப்பட்ட நூல்களால் நிரம்பியிருக்கும். பொள்ளாச்சி இலக்கிய வட்ட அறிமுகத்திற்குப் பின்னர் இரா.பூபாலன், சோலை மாயவன் மற்றபிற இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் போது நிறைய நூல்களைப் பரிசளிப்பார்கள். கல்லூரிக் காலத்தில் முதன்முதலாக வாசித்த நாவல் நக்கீரன் அவர்கள் எழுதிய காடோடி. காடுகளின் அழிப்பு குறித்து விரிவாகக் கதை பின்னப்பட்டிருக்கும். அதில் வரும் அன்னா, தேஜன்ஸ், பிலியவ் கதாபாத்திரங்கள் என்றைக்கும் நினைவிலிருக்கக்கூடியவர்கள். நல்லதொரு பசுமையான வாசிப்பைத் தந்தது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் துணையெழுத்து, ஆதலினால், எழுத்தே வாழ்க்கை கட்டுரைத் தொகுப்பு விரும்பி வாசிக்கப்பட்டவை. நான் மிகவும் நேசிக்கும் கல்யாண்ஜி அவர்களின் மணல் உள்ள ஆறு கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வில் ரசனை பகுதியில் பேசினேன். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் புதிய வாசிப்பனுபவத்தைத் தந்தது. அண்டனூர் சுரா அவர்களின் அப்பல்லோ நாவல் வாசித்துவிட்டு அதன் சாரங்கள் குறித்து பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வில் நூல் அறிமுகம் செய்தேன். வால்காலிருந்து கங்கை வரை, அன்புள்ள ஏவாளுக்கு, லடாக்கிலிருந்து கவிழும் நிழல், புனைபாவை போன்றவை நினைவிலிருக்கும் வாசித்த நாவல்கள். சமகால கவிதைத் தொகுப்புகளையும் தொடர்ச்சியான வாசிப்பிற்கு தயார்ப்படுத்தியபடி இருக்கிறேன்.

  • கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்த உடன் நிகழ்ந்தவை பற்றி …

பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் நண்பர்களின் உதவியால் தனித்திருக்கும் அரளிகளின் மதியம் கவிதைத் தொகுப்பு 2019 ஆம் ஆண்டு இருவாட்சி பதிப்பகத்தின் வெளியீடாகப் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 79 ஆம் சந்திப்பில் வெளியிடப்பட்டது. முதன் முதலாக அட்டைப்பெட்டியிலிருந்து புத்தகத்தைப் பிரித்துப் பார்த்த போது பேரானந்தத்தின் முதல் துளி உள்ளூர பாய்ந்தது. பிறந்த அன்றைக்கு வாரித் தூக்கிக்கொண்ட அக்காவின் குழந்தை நினைவிற்கு வந்தது. விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா வெளியிட எனது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். இந்தத் தொகுப்பு சிறந்ததொரு அடையாளத்தை அப்போதே தந்தது.

  • பெருநகரங்களுக்கு வெளியிலிருந்து நிறையக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உருவாகின்றனர். முன்னரும் அப்படிப் பலர் எழுதினார்கள் என்றாலும், இன்றைய சூழலில் சென்னை , கோவை போன்ற பெருநகரங்களில் வாழ்வதைக் காட்டிலும், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் வாழும் எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் என்ன? சிட்டியில் வாழாததால் இலக்கியம் சார்ந்து இதெல்லாம் கிடைக்கவில்லை என்று எதை நினைக்கிறீர்கள்?

சில சமயங்களின் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் இலக்கியக் கூட்டங்களுக்கு உரையாட வரும்போது சந்திக்கவும், கலந்துரையாடவும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதாயுள்ளது. மற்றபடி இணையம், சமூக ஊடகங்களின் வருகையால் அனைத்து வகையான இலக்கிய நிகழ்வுகளையும் எளிதாகக் காணவும் வாய்க்கின்றது.

  • உங்கள் பொழுதுபோக்குகள் குறித்து…

பாடல்கள், வானொலி கேட்பது, திடீரென ஏதொவதொரு நண்பரை அலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடுவது, தெருக்குழந்தைகளுடன் விளையாடுவது, வயதானவர்களிடம் கதைகள் கேட்பது, எந்தக்காரணமும் இன்றி தெருவைச் சுற்றி வருவது, கோழிகளைக் கவனித்துக்கொள்வது, அவ்வப்போது அருகிலிருக்கும் ஊர்களுக்குச் செல்வது, பேருந்து நிலையத்தில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது.

  • உங்கள் குடும்பப் பின்னணி, பள்ளி கல்லூரிக் கல்வி மற்றும் பின்புலம் குறித்து…

எனது பெற்றோர் பழனிச்சாமி-சரஸ்வதி. அப்பா மாற்றுத்திறனாளி. அம்மா விவசாயம் சார்ந்த கூலி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். நான் வீட்டிற்கு ஒரே மகன்.

துவக்க கல்வியை பில்சின்னாம்பாளையம் ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் பயின்றேன். உயர்நிலைக்கல்ல மற்றும் மேல்நிலைக்கல்வி சோமந்துரை சித்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன். பின்னர் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பயின்றேன். தொடர்ந்து கோவையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். தற்போது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். எங்களது கிராமத்தில் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் என்ற அமைப்பு க.அம்சப்ரியா அவர்களால் துவங்கப்பட்டு இராமகிருஷ்ணன், ஆனந்த், ஜெகன்மோகன், காளிங்கராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து திருக்குறளை ஊரில் உள்ள மாணவர்கள் மத்தியில் பரப்பும் செயலையும் செய்து வருகிறேன். மேலும் சுதந்திர தினவிழா, திருவள்ளுவர் தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பள்ளி குழந்தைகளுக்கு ஓவியம், கவிதை, கதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் பணியையும் செய்து வருகிறோம்.


நேர்கண்டவர் : பா.சரவணன்

About the author

பா.சரவணன்

பா.சரவணன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website