cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 6


ம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன  எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம்.  சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள். இந்த இதழில் பங்களித்த கவிஞர்களின் பதில்கள் இதோ..!

க.சி.அம்பிகாவர்ஷினி :

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

முதன் முதலில் ஆறு அல்லது ஏழு வயதில் எழுதியிருப்பேன். கவிதையென்றால் என்னவென்று தெரியாத வெளியில் எழுதுவதே கவிதைக்கான நுட்பமென்று அறிகிறேன். அந்தச் சின்ன வயது எழுத்துக்கள் “கவிதை கேளுங்கள்” எனத் தலைப்பிட்டு பறவைகளையும் பூக்களையும் அழைத்ததாக சில வரிகள் நினைவில்.

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 
முதன்முதலில் கவிதை வெளியானது கணையாழியில்.
  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

பின்னணியென்றால் ஒன்றுமில்லை. எழுதுகிறவர்கள் எல்லோருக்குமிருக்கும் எளிய உணர்வு மற்றும் ஆசைதான். ஆனால் தாமதமாகிக்கொண்டே வந்தது. பிறகு அதற்கும் ஒருநாள் வாய்ந்த வெளியானது என் முதல் கவிதைத் தொகுப்பான,”தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்”. கவிதைகள் அச்சு இதழ்களில் வெளியானாலோ அல்லது முகநூல் போன்ற வெளியில் எழுதிவருகிறபோதோ கிடைக்கிற சில தருணங்கள் அலாதியானவை. எழுதுகிற எல்லாக் கவிதைகளிலும் தூய்மை இருப்பதில்லை. தூய்மையென்பது கடத்த நினைக்கும் உணர்வு கவிதையாகி நிகழும் விந்தை. அப்படியான கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகத்தில் அச்சுவடிவில் பார்க்கிறபோது தன்னையறியாமல் ஆன்மாவின் விரல்கள் அவ்வெழுத்துக்களை உள்வாங்கிப் பிரகாசிக்கத் தொடங்கியதன் உணர்வு முதன்முதலில் கிடைத்தது. பிறகு ஒவ்வொரு புத்தகமுமே அப்படித்தான்.
புத்தகமாகும் எழுத்து என்றைக்குமே அது எழுதப்பட்டதைவிட ஒருபடி மேலேயுயர்கிறது. ஒரு கவிதையின் தூய்மையைப் போல.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

முதன்முதலென்றால் அப்பாவைத்தான் சொல்லவேண்டும். என் அந்த சின்னவயது வரிகளிலேயே அவருக்குப் பெருமை கூடிவிட்டது. பிறகு என்னைப் பள்ளிகளில் சேர்க்கிறபோதெல்லாம் கவிதை எழுதுவேனென்றே அடையாளத்தையும் சேர்த்துக்கொடுத்தார்.

பிறகு, பொதுவிலென்றால் என் ஏழாம் வகுப்புத் தமிழாசிரியர் கணேஷ் அவர்களிடமிருந்து. அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது அங்கீகாரம் என்பதைவிட அவைப் புலவரைப்போன்ற கௌரவம். கல்லூரி மாணவர்களோடு போட்டியிடும் சிறப்பு அங்கீகாரத்தைக் கூட அவரே வலிந்து ஏற்படுத்தித் தந்தது அந்த வயதில் என் எழுத்திற்கு/கவிதைக்குக் கிடைத்த உச்சமென்றே சொல்லவேண்டும்.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

எழுத்து.காம் (Eluthu.com) இணையதளத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தபோது, கவிதைகளுக்காக “ஈரோடு தமிழன்பன் விருது” பெற்றதே முதல் குறிப்பிடத்தக்க விருது.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

இந்தக் கேள்விக்கான பதில் எங்கு ஒளிந்திருக்கிறதோ தெரியவில்லை.முன்பு குறிப்பிட்டதைப் போலச் சிறிய வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டதால் அந்த வயதுகளில் கூட எனக்குப் பிடித்த கவிதை/கவிதைகளைக் கண்டு வியந்திருப்பேன்.

நினைவில் உள்ளதென்றால் வரிகளில்லை .கல்லூரி மாணவர்களோடு போட்டியிட்ட தருணமென்று குறிப்பிட்டேனில்லையா அப்போது என்னோடு என் வகுப்பிலிருந்த சில மாணவர்களும் பங்கேற்றார்கள். அவர்களில் ஒருவனது கவிதை அப்போது வாசித்துப் பார்த்ததில் உள்ளூர ஜனித்த தொடுகையை உணரச்செய்தது .அவன் பத்தியாகக் கவிதையெழுதியிருந்தான்.

அதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஆன்மாவும் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது

நந்தாகுமாரன் :

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தமிழ் வினாத் தாளில் ஒரு கேள்வியாகவே – கவிதை அல்லது கதை அல்லது கட்டுரை எழுதும்படி இருக்கும். அதற்கான முதல் பயிற்சி / முயற்சி வகுப்பில், ‘கடல்’ என்ற தலைப்பில் வசன கவிதை எழுதியது நினைவிற்கு வருகிறது. தமிழாசிரியை முதற்கொண்டு மொத்த வகுப்பும் பாராட்டியதும் நினைவில் உள்ளது. சில புதிய உவமைகளை, சந்தத்துடன், எதுகை, மோனை, இயைபு எனக் கலந்து கட்டி எழுதியிருந்தேன். வரிகள் நினைவில்லை. ஆனால் அதுவெல்லாம் கவிதைக்குப் பக்கத்தில் தான் கவிதையில்லை எனப் புரியச் சில ஆண்டுகள் ஆனது.

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

மார்ச் 1998, கணையாழி இதழில் கவிஞர் ஞானக்கூத்தன் தேர்வு செய்த ‘Digital மௌனம்’ (என் முதல் புத்தகமான, ‘மைனஸ் ஒன்’ கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது). இந்த பதிலை முதல் கேள்வியின், பதிலின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்.

  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

2012ஆம் ஆண்டு, அதுவரை எழுதிய பொருட்படுத்தத் தக்கக் கவிதைகளை எண்ணிப் பார்த்த போது ஏறக்குறைய எண்பது கவிதைகள் தேறியிருந்தன. அவற்றை என்னிடம் மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என யோசித்த போது, ஒரு தொகுப்பாக வெளியிட்டுவிடலாம் என உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை அணுகினேன். என் பல கவிதைகள் ‘உயிரோசை’ இதழில் வெளியாகி அவருக்கு என் கவிதைகள் குறித்துத் தெரிந்திருந்தது. புத்தகம் வெளியிட ஒப்புக் கொண்டார்.

டிசம்பர் 2012ஆம் ஆண்டு என் முதல் கவிதைத் தொகுப்பு ‘மைனஸ் ஒன்’ உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியானது. சென்னையில் உயிர்மை அந்த ஆண்டு வெளியான மற்ற புத்தகங்களுடன் சேர்த்து வெளியீட்டு விழா ஒன்றை நடத்தியது. முன்னட்டையை நானே சுமாராக வடிவமைத்துக் கொடுத்திருந்தேன். அப்போது காலச்சுவடு இதழில் பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் மண்குதிரை என் வேண்டுகோளுக்கு இணங்கி தொகுப்பு குறித்துப் பேசினார்.

புத்தகம் விற்காது எனத் தெரிந்திருந்ததால் நானே முந்நூறு பிரதிகளை வாங்கித் தூக்கிக் கொண்டு சென்னை ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வந்தடைந்தேன். கவிஞர் நிலாரசிகன் ஒரு முகவரிப் பட்டியலை கொடுத்து பிரியப்பட்டால் இவர்களுக்கு அனுப்புங்கள் என்றார். அனுப்பினேன். நண்பர்களுக்கும் கொடுத்தேன். இன்னும் பிரதிகள் என்னிடம் மீதமிருக்கின்றன.

கவிஞர் நேசமித்ரன் சொல்வது போல ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடுவது என்பது அந்தக் கவிதைகளை disown செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் முயற்சி. ஜ்யோவ்ராம் சுந்தர் அதை ‘உங்கள் விசிட்டிங் கார்ட்’ என்றார். செலவு, அலைச்சல், சோர்வு, சந்தோஷம் எனக் கலந்து கட்டிய உணர்வுகளை அது கொடுத்தது. இதில் சந்தோஷத்தையும் அனுபவத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

என் பள்ளித் தமிழ் பேராசிரியை. நான் எழுதும் ஒவ்வொரு கவிதையையும் வகுப்பில் வாசித்துக் காட்டி மகிழ்வார். பிறகு எழுத்தாளர் சுஜாதா, கணையாழியில் வெளியான என் ‘மழை கேட்டல்’ கவிதையை, மின்னம்பலம் இணைய அரட்டையில் குறிப்பிட்டுப் பேசியது, கவிஞர் லதா ராமகிருஷ்ணன் ‘மலைகள்’ இதழில் எழுதிய முதல் புத்தக மதிப்புரை, கவிஞர் பிரம்மராஜன் என் கவிதைகளை ஆங்கிலத்தில் ‘ம்யூஸ் இந்தியா’ இதழில் வெளியிட்டது எனச் சில சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

இதுவரை எதுவும் இல்லை.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

பள்ளியில் பயின்ற மரபுக் கவிதைகளின் வாசிப்பு அறிமுகத்தில் கவிதையைத் தொடங்கியது குறித்துச் சொல்லலாம். குறிப்பாக முதல் கவிதை எனப் படித்தது எது என நினைவில் இல்லை. ஆனால் தமிழின் நவீன கவிதைகளை நோக்கி எனை நகர்த்தியது கவிஞர் சுகுமாரனின் ‘பயணியின் சங்கீதங்கள்’ மற்றும் கவிஞர் பிரம்மராஜனின் ‘வலி உணரும் மனிதர்கள்’ தொகுப்புகள் தான்.

 

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website