நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள். இந்த இதழில் பங்களித்த கவிஞரின் பதில்கள் இதோ..!
ஆறாவது என்று நினைவு.. தமிழ்ப் பாடத்தில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுத்ததால், பள்ளி மரநடுவிழாவுக்கு அறிவியல் ஆசிரியை டெல்ஃபின் சந்திரா அவர்கள் கவிதை எழுதி வாசிக்கச் சொன்னார்கள். “எங்கிருந்தோ கேட்கின்றதே என்னைக் காப்பாற்று என்றோர் குரல்….. “ எனத்துவங்கும் கவிதையா எனத் தெரியாத ஒன்று நினைவில் நிறைந்து இருக்கிறது. நான் படித்த கூடலூர் (நீலகிரி ) ஃபாத்திமா பள்ளியில் காலைக்கூடுகைகளில் பிரபலமான திரைப்படப் பாடல்களை அதே மெட்டில் உல்ட்டா செய்து நல்ல கருத்துள்ளதாக மாற்றி எழுதிப் பாடும் வழக்கம் இருந்தது. அவ்வகையில் ‘ஒண்ணு ரெண்டு மூணு நாலு ‘ என்ற பழைய தர்ம துரை படப்பாடலை “கல்வி புகட்டி நம்மை உயர்த்தும் ஆசான் வாழ்க.. கற்றுச் சிறக்க முயற்சி எடுக்கும் மாணவி வாழ்க.. “ என்று எழுதிப் பாடிய பாடல் அடையாளம் பெற்றுத்தரத் தொடர்ந்து இப்படிப் பல உல்ட்டா பாடல்களை எழுதியுள்ளேன். அனைத்துமே நினைவில் உள்ளன. அதன்பின் பள்ளி வாயிலாகப் பல கவிதைப் போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைத்து பரிசுகள் பெறச் செய்தார்கள். பள்ளியின் இளம் மாணாக்கர் இயக்கம் நீலகிரி மாவட்டத்தில் வெளியாகி வந்த ஒரு சிற்றிதழில் எனது முதல் படைப்பை அச்சேற்றியது. இதழின் பெயர் இளஞ்சூரியன் என்று நினைவு. “அன்னை என்று அழைத்தார்கள்… ஆனால் “ என்று துவங்கி “உயிர் விட்டுப் போகையிலே விறகிட்டு எரிக்கையிலே என்ன சொல்லி அழைப்பார்களோ எனக்கு இன்னும் எத்தனைப் பெயர்களோ “ என்று முடியும். பெண்மைக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டு எழுதிய சிறுமுயற்சி. இணையவழி ‘சரக்கொன்றை’ ஹைக்கூ இதழில் கொரோனா காலகட்டத்தில் எனது ஹைக்கூ வெளியானது. பள்ளி, கல்லூரி காலத்திற்குப் பிறகு சில சூழ்நிலைகள் காரணமாக எனக்கு நானே ஒரு கோடு போட்டுக்கொ ண்டு கவிதை, இலக்கியம் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாக விலகிக் கிட்டத்தட்டவனவாசம், அஞ்ஞாத வாசம் போல் நகர்வசம் பல ஆண்டுகள் ஒரு வாசகியாக மட்டுமே என்னை நிறுத்திக்கொண்டேன். கோவை அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றத் தொடங்கியபின் அதில் ஒலிபரப்பான எனது கவிதைகளை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு.விஜயகுமார் அவர்கள் பாராட்டித் தொகுப்பாகக் கொண்டு வரலாமே என்று சொன்ன வார்த்தைதான் ‘எமக்கும் தொழில்’ கவிதை நூலின் துவக்கப்புள்ளிக்கான முதல் ஊக்கம். இலக்கிய உலகம், அமைப்புகள், எழுத்தாளர்கள் என யார் அறிமுகமும் எனக்கு இல்லை. குடும்பத்தினரின் நிதியுதவியோடு, நானே முயன்று ஒவ்வொருவராகச் சந்தித்து, நூலாக்கத்தின் அடிப்படைகளை அரைகுறையாய்க் கற்றுக்கொண்டேன். ஆம். அது ஒரு சுயவெளியீடு. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ‘எமக்கும் தொழில்’ கோவையில் வெளியானது. பத்மஸ்ரீ. சிற்பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் அணிந்துரை கொடுத்து ஆசீர்வதித்தார். கோவையில் கலைமாமணி கவிஞர். ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் வெளியிட, திரைப்பட, ஆவண குறும்பட இயக்குநர், பேச்சாளர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நீண்ட பயணத்திற்கான முதல் அடி எடுத்து வைத்த பதட்டம், ஆர்வ மிகுதி, மகிழ்ச்சி, கண்ணீர் என்று கலவையான உணர்வுகளை அந்தப் புகைப்படங்களில் காணலாம். பள்ளிக்காலம் தொடங்கி வெள்ளிவிழாக்கண்ட என் இனிய நட்பு.. திருமதி. நிர்மலா வைரவேல் என் முதல் ரசிகை.. பள்ளியில் காண்போரிடத்தில் எல்லாம் என் அன்புத்தோழி.. நல்ல கவிஞர் என்பாள். அதுவே பள்ளி ஆசிரியர்கள் தவிர்த்து வெளியில் கிடைத்த முதல் அங்கீகாரம். முதல் கவிதைத் தொகுப்பு ‘ எமக்கும் தொழில்’ நெல்லை – ழகரம் அமைப்பின் ‘முதல் படைப்பாளி’ விருது பெற்றது. ஒரு கவிதை என்றால் குறிப்பிட்டுச் சொல்வது சிரமம். பலவுண்டு. நிச்சயம் ஞானத்தகப்பன் பாரதியின் கவிதைகளைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். “அக்கினிக் குஞ்சொன்று வைத்தேன் ” “ஆசைமுகம் மறந்து போச்சே ” இப்படிப் பல. பிறகு நான் மிகவும் ரசித்து ரசித்து வியந்த புலவர் தமிழிலக்கிய இரட்டுற மொழிதலின் மகத்தான ஆளுமை காளமேகம். ‘நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்….” “காரென்று பேர் படைத்தாய் ககனத்து ஊறும் போது…. ” போன்றவை. பரிசாக எனைத்தேடி வந்து கவிதைப்பாதைக்கு தரமான விதையிட்ட ஆளுமைகள் அறிவுமதி, வண்ணதாசன் ஆகியோரது ” கடைசி மழைத்துளி ” கவிதைநூல். “விற்பனையில் வண்ணத்துப் பூச்சி துடிக்கிறது பூச்செடி ” ” கடைசி மனிதன் கடைசி மழைத்துளி நினைக்கவே பயங்கரம் ”