cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 31 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர் ச.மோகனப்ரியா பதில்களும் – ( பகுதி 10)


நம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன   எழுந்த எண்ணத்தின்  உரையாடல் வடிவமே இந்த “முதன் முதலாக – கேள்விகளும் கவிஞர்களும் பதில்களும்” பகுதியாகும்.  இந்த இதழில் நுட்பம் இணைய இதழ் முன் வைத்த கேள்விகளுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர் ச.மோகனப்ரியா அளித்த பதில்கள் இதோ..!

  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

தமிழ் மீது சிறு வயதில் இருந்தே ஒரு ஈர்ப்பும் பற்றும் இருந்தது. தமிழ் வழியில் பயின்றதும் ஒரு முக்கிய காரணம் எனலாம். பாரதியாரும் பாரதிதாசனும் பள்ளி காலத்தில் மிகுந்த பக்கபலமாக இருந்தார்கள். ஆயினும், கல்லூரி முடிந்தபிந்தான் வாசிப்பு தீவிரமடைந்தது. அக்காலகட்டத்தில் ஒரு பெரும் உணர்வெழுச்சியில் பூமகள் என்ற புனைப்பெயரில் திடீரென கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். 2007 இல் தமிழ் மன்றம் என்ற இணையதளத்தில் கவிச்சமர் என்ற பகுதியில்தான் முதலில் எழுத ஆரம்பித்தேன். ஒருவர் எழுதிய கவிதையின் இறுதி வார்த்தையைத் துவக்கமாகக் கொண்டு அடுத்த கவிதையை எழுத வேண்டும். அதுவொரு நல்ல பயிற்சியாக இருந்தது. முழுமுற்றாக ஒரு கவிதையை எனது வலைப்பூவில் சேர்த்த முதல் கவிதை “வாழ்வின் அர்த்தங்கள்” என்ற தலைப்பில் எழுதியது.

வாழ்வின் அர்த்தங்கள்:

வாழ்வின்
அர்த்தங்கள்
அறியும்
வேட்கையில்
நான்

பூவின்
மகரந்தம்
திருடும்
தென்றல்
மெல்ல
எனை
வருடும் போதும்

புதுச்சட்டை
போட்ட
ஏழைச்
சிறுவனின்
சிரிப்பைப் போல
வானம்
மழையால்
நகையாடும் போதும்

மழையில்
நனையும்
குருவிக்குஞ்சை
சுருக்கென
இறகால்
பொத்தும்
தாய்க்குருவியின்
கதகதப்பின் போதும்

நாளைய
விடியலை
நம்பிக்கையோடு
பார்த்திருக்கும்
இரவு
உறங்கும் போதும்

சற்றே
முகம்
வாடினது
காணாமல்
வாஞ்சையாய்
கை பற்றி
அனுசரிக்கும்
ஸ்நேகத்தின் போதும்

துளித்துளியாய்
அறிகின்றேன்..
வாழ்வின்
அர்த்தத்தை!

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ?

கவிதைகள் 2007ஆம் ஆண்டிலேயே எழுத ஆரம்பித்திருந்தாலும், எந்த இதழுக்கும் அனுப்பியதில்லை. தொடர்ந்து எனது வலைப்பூவில் வெளியிட்டு வந்தேன். இலக்கிய இதழ்கள் பற்றிய அதிக பரிச்சயம் இல்லாத காலகட்டம் எனலாம். திருமணமாகி சிங்கப்பூர் வந்தபின்னும், கிட்டத்தட்ட 10 வருடங்கள் இலக்கிய உலகத்திலிருந்து விலகியே இருந்தேன். முதன்முதலாக, 2019 ஆம் ஆண்டு எனது கவிதையொன்றை சிங்கப்பூர் தேசிய தமிழ் நாளிதழான தமிழ்முரசு என்ற தினசரிக்கு அனுப்பி வைத்தேன். மறுப்பு என்ற தலைப்பிட்ட கவிதை நாளிதழில் வெளியானது. இதுதான் முதன்முதலாக அச்சில் வெளியான எனது முதல் கவிதை எனலாம்.

  • முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகம் எது.?  அந்த  முதல்  கவிதைத் தொகுப்பு வெளியானதன் பின்னணி  என்னவாக இருந்தது. ?  அந்த முதல் புத்தக வெளியீட்டை எவ்வாறு உணர்கிறீர்கள் ? 

நிறைய கவிதைகள் எழுதியபின்பு எல்லோருக்கும் தோன்றுவது போல ஒரு சாச்சுரேசன் பாயிண்டை அடைந்துவிட்டதாகத் தோன்றியது. எனது கவிதைகள் அடுத்தகட்ட நகர்விற்கு தொகுப்பாக்கிப் பார்க்கலாம் அதுவே நல்லதெனவும் எனது உள்ளுணர்வுக்குத் தோன்றியது. மேலும், யாருக்குச் சமர்ப்பணம் செய்ய நினைத்திருந்தேனோ, அவர்களின் உடல்நிலையும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அப்பொழுதுதான், கவிஞர் நரன் நடத்திக்கொண்டிருக்கும் சால்ட் பதிப்பகத்திலிருந்து எனது கவிதைகள் தொகுப்பாக்க இசைந்தார்கள். நூலின் வடிவமைப்பு, அட்டைப்படம் என அவர்களின் கலை நேர்த்தி மிகவும் கவரும் வகையில் இருந்தது. எனது மொத்த கவிதைகளையும் படித்து, சால்ட் பதிப்பகத்தினர் அவர்களின் பதிப்பகத்திலேயே வெளியிட ஒப்புக்கொண்டனர். 

முதல் புத்தகம் என்பது முதல் பிரசவம் போல என பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே ஒரு பிரசவத்தைச் சந்தித்தவள் என்ற வகையில், முதல் புத்தகம் அச்சாக்கம் என்பது மிகப்பெரிய தொடர் மராத்தான் பயணம் போன்றுதான் இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். சுயமாய் நிற்கும் தீரத்தையும் அதுவே கற்றுக்கொடுத்தது. நானே முழுதொகுப்புக்கான கவிதைகள் தேர்ந்தெடுத்தல், அடுக்குதல் துவங்கி, வெவ்வேறு பகுப்புகளாகப் பிரிப்பதுவரை செய்தது வாழ்நாளுக்கான பாடம். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்தடுத்த நான் செய்ய வேண்டியதை நினைவூட்டி என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களையும் உதவிய புதிய நண்பர்களையும் என் வாழ்வில் என்றென்றும் மறக்கவே இயலாது.

ஞாபகப் பெருங்களிறு எனும் முதல் கவிதை நூல் வெளியீடு எனும்பொழுது, எனது திறமையை வளர்த்தெடுக்க முதன்முதலில் களம் அமைத்துக்கொடுத்த சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் மாதாந்திர நிகழ்விலேயே வெளியிட நினைத்தேன். அவ்வண்ணமே கடந்த பிப்ரவரி 24.2.2024 அன்று சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள். எனது இப்பயணத்தில் முக்கியமாக எனது இரு தூண்களைப் போல துணையாய் நின்ற எனது தந்தை வெளியிட எனது கணவர் முதல் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். இன்னும் செல்ல வேண்டிய தூரமும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் பெருமலையளவு காத்திருப்பதால், நிறைவுறாத மனநிலையில்தான் இன்னும் இருக்கிறேன். 

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

சிங்கப்பூரில் கவிமாலை அமைப்பு நடத்தி வந்த மாதாந்திர கவிதைப் போட்டிகளிலும், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் நடத்திய மாந்தாதிரக் கவிதைப் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குபெற்று பரிசுகள் வாங்கிவந்தேன்.

சிங்கப்பூரில் நடக்கும் தேசிய அளவுப் போட்டிகளில் பங்குபெற்று வந்தேன். 2020ஆம் ஆண்டு நடந்த தமிழ் மொழி விழாவிற்கான தேசிய அளவுப் போட்டியில் மரபும் புத்தாக்கமும் என்ற கருவில் எழுத கவிதைக்கு முதல் பரிசு கிடைத்ததுதான் தேசிய அளவிளான முதல் அங்கீகாரம் எனலாம்.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

சிங்கப்பூரில் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்பெற்று வரும் தேசிய அளவிலான கவிதைப் போட்டியான தங்கமுனை விருது 2021 ஆம் ஆண்டு பங்கேற்று மூன்றாம் பரிசைப் பெற்றேன். 2023 ஆம் ஆண்டு நடந்த தங்கமுனை கவிதைப் போட்டியிலும் சிறுகதைப் போட்டியிலும் இரண்டாம் பரிசைப் பெற்றேன். 

குறிப்பு: தங்கமுனை விருது போட்டியானது, இதுவரை தனித்தொகுப்பாகப் புத்தகம் போடாத வளரும் கவிஞர்களுக்கான போட்டி.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

பாரதியும் பாரதிதாசனும் மனதில் நீக்கமற நிறைந்திருந்தாலும், நவீன கவிதைகளை நோக்கிய வாசிப்பு நகர்ந்தவுடன், முதன் முதலாக கல்யாண்ஜி அவர்களின் கவிதைகளில் எனக்கு மிகப் பிடித்த கவிதையொன்றை மனனமாக நினைவில் பதித்தேன். அந்த கவிதை, அந்தரப் பூ தொகுப்பில் இருக்கும் கவிதை,

அந்தரப்பூ – கல்யாண்ஜி

 “மரத்தில் கிளையில்
மஞ்சரியில் பார்த்தாயிற்று

கீழ்த் தூரில் மண்ணில்
கிடப்பதையும் ஆயிற்று

வாய்க்கவேண்டும்
காம்பு கழன்றபின்
தரை இறங்குமுன்
காற்றில் நழுவி வருமோர்
அந்தரப்பூ காணல்”

முதன் முதலாக இந்தக் கவிதையை வாசித்தபோது இருந்த மனநிலை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. ஒவ்வொருமுறை இந்தக் கவிதை வாசிக்கையிலும், காற்றில் நழுவி விழும் ஒரு ஊதா மலரை மனம் கற்பனை செய்கிறது. திரும்பத் திரும்ப இந்த கவிதையை வாசித்து, தொடர்ந்து அந்தரப் பூவை அந்தரத்தில் நிற்க வைத்துப் பார்க்கும் மனதை இக்கவிதை கொடுத்ததும் காரணம் எனலாம்.

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website