cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 3 உரையாடல்கள்

முதன் முதலாக | கேள்விகளும் கவிஞர்களின் பதில்களும் – பகுதி 3


ம் எல்லோருக்கும் வாழ்க்கையில்  ஏதேனும் ஒரு  ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத்  திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன  எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழில்  சில கவிஞர்கள் பங்களித்தார்கள் .  இந்த இதழில் பங்களித்த கவிஞர்களின் பதில்கள் இதோ..!

 

மதுரை சத்யா :
  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?. அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

பதினோராம் வகுப்பு படிக்கையில் கவிதை எழுதத் தொடங்கினேன்.. முதல் கவிதை தலைப்பு “புது வசந்தம்” ஆனால் வரிகள் முழுமையாக நினைவில்லை

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

எனது முதல் கவிதை வெளியான  அச்சு இதழ் விகடன் சொல்வனம் பகுதி  2014 ம் வருடம்

அந்த கவிதை:

பூனையைக்கண்டாலே பயந்தும்
வெறுத்தும் ஒதுங்கிக்கொள்ளும்
அம்மா கருவுற்றப் பூனை ஒன்று
நேற்று கொல்லைப்பக்கமாய் ஒதுங்க
சாக்கைப்போட்டு மறைவு செய்துக்கொடுத்தாள்…

  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

எனது முதல் கவிதை தொகுப்பு “பேனா முனைப் பிரபஞ்சம்” என்ற தலைப்பில் 2014ல் வெளியிட்டேன் 300 க்கும் மேற்பட்ட முகநூல் நண்பர்கள் கூட்டம் அரங்கம் நிறைந்து திருவிழா போல் நடந்தேறியது வாழ்வின் மறக்கமுடியா பசுமை நிகழ்வு.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

எனது முதல் கவிதை தொகுப்பு “பேனா முனைப் பிரபஞ்சம்”  கம்பம் பாரதி இலக்கிய அமைப்பு நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்றது ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் பாரதி தலைப்பாகை அணிவித்து பட்டமும் வழங்கப்பட்டது. இதுவே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரமும் விருதும் ஆகும்.

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

நிறைய கவிதைகள் வாசித்தாலும்,  கவிஞர்கள் வண்ணதாசன்,தேவதச்சன் மற்றும் நேசமித்ரன் கவிதைகள் மீது அதிக ஈர்ப்பு உண்டு

நேசமித்ரன் அவர்களின் இந்த கவிதை உயிருக்குள் ஆழப் பதிந்ததவை

மீண்டும் மீண்டும்

அதே கிளையில் அமர்கிறது பறவை

அப்படி என்ன செய்துவிட்டது மரம்?
தாங்கத் தெரிந்திருக்கிறது..!! 

மலர்விழி :
  • முதன் முதலாக எந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? . அது என்ன கவிதை என நினைவிலிருக்கிறதா ?

12 வயதில்… எழுதிய முதல் கவிதை…

“வேராயிருந்தால் நிலைத்திருப்பேன்…

இலையாய் இருந்தால் உதிர்ந்திருப்பேன்…

காயாய் இருந்தால் கனிந்திருப்பேன்…

மலராய் இருப்பதால் தான் வாடுகிறேன்!!”

  • முதன் முதலாக உங்கள் கவிதை படைப்பு வெளியானது எந்த இதழில் ? 

இன்போசிஸ் தீபாவளி நாளிதழில் முதன் முதலில் என் கவிதை இடம்பெற்றது.

  • முதல் கவிதைத் தொகுப்பு வெளியான பின்னணி ? எப்படி இருந்தது அந்த முதல் புத்தக வெளியீடு உணர்வு ? 

என் முதல் கவிதைத் தொகுப்பு “விடாமல் துரத்தும் காதல்” எமரால்ட் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. போன வருடம் பிப்ரவரி மாதம் வெளிவந்தது…. யாரென்றே தெரியாத ஒருவருடன் உரையாடும் ஒரே வழி… புத்தகம் படிப்பது‌ தான்!! அது போல பலரின் இதயங்களைத் தொட்ட வரிகளின்‌ மூலம் என்னையும், அவர்களையும் என் தொகுப்பு இணைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

  • கவிதைக்காக முதன் முதலாக யாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது. ?

யாரைக் காட்டி தமிழ் என்னை கவிதைகளுக்குள் ஈர்த்ததோ… அவரிடமே அணிந்துரை வாங்கித்தரும் வாய்ப்பையும் வழங்கியது!! என நான் என் புத்தகத்தின் முன்னுரையில் சொல்லி இருப்பேன். என் கவிதைகளை முதலில் அங்கீகரித்தது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான்!! அவரின் கையொப்பமிட்ட அணிந்துரையை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்.

  • முதன் முதலாகக் கவிதைக்கு என நீங்கள் பெற்ற விருது ?

இன்போசிஸ் நாளிதழில் வெளிவந்த என் கவிதைக்கு பரிசாக கேடயம் கிடைத்தது( 2009 ).

  • முதன் முதலாக நீங்கள் ரசித்த கவிதை என்ன. ? யார் கவிதை ? நினைவிலிருந்தால் குறிப்பிடவும்.

நான் தமிழ் கற்க ஆரம்பித்ததிலிருந்தே பாரதியாரின் தீவிர ரசிகை. அவருடைய “மனதில் உறுதி வேண்டும்” கவிதையும் “அக்கினிக்குஞ்சொன்று கவிதையும்” என்னை கவிதைகள் பக்கம் முழுதாய் ஈர்த்தது.

அதன்பிறகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடைய “கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை” கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

“போராடுவது ஏன்?
வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே! ஏன்?
வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்

தம்பி!
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்!!”

 


 

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website