அரசுப் பணியிலிருந்த பழக்கத்தால்
ஓய்வு பெற்ற பிறகும் அதிகாலை
ஐந்து மணிக்கே துயில் எழுந்துவிடுகிறார் அப்பா.
எழுந்து சில நிமிடங்கள் ஜன்னலை
வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்
இந்த நாளை எப்படிக் கடத்துவது என ?
இரவுகளை ஜன்னல் விளிம்பில்
கடத்திய பல்லி ஒன்று அவருக்குச்
சாட்சியாய் இருக்கிறது.
காய்கறி வாங்க,
கறிக்கடைக்குப் போய் வர,
சலூனில் தலைக்குச் சாயம் அடிக்க,
தாடியைச் சவரம் செய்ய,
முன்னாள் நண்பர்களைச் சந்திக்க என்று
எங்குமே அவர் இப்போது செல்வதில்லை.
முன்பெல்லாம் மதியம் ஒரு மணிக்குள்
வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரமுள்ள
டாஸ்மாக் கடைக்கு நடந்தே செல்வார்.
அவருக்குப் பிடித்த எம்.சி பிராந்தியை
அளவான தண்ணீருடன் ஊற்றி
அதனுடன் அளவளாவி விட்டுத் திரும்புவார்
இப்போது அங்கும் செல்வதில்லை.
அவருக்கு வரும் அலைபேசி அழைப்புக்களை
வெறித்துப் பார்க்கிறார்
சில நேரம் எடுக்கிறார்
பல நேரம் தவிர்க்கிறார்.
புத்தகங்கள் படிப்பதையும்
தொலைக்காட்சி பார்ப்பதையும் கூட
அடியோடு நிறுத்தி
பலகாலம் ஆகிவிட்டது.
தனது மீதமுள்ள காலத்தைக் கழிக்க
அவர் வேறு எதை எதிர்பார்க்கிறார்? என்று
பலமுறை நாங்கள் கேட்டும்
அவர் பதில் சொல்வதேயில்லை.
அவருக்கு ஒருநாள் என்பது
ஒரு யுகாந்திரமாக மாறிவிட்டது
மட்டும் நன்றாகப் புரிகிறது.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எனது வாப்பாவிடம்
நான் பார்த்த வாழ்க்கை முறையை நினைவூட்டுகிறது இந்த
அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ரஹீமா!
சூப்பர் அண்ணா…. வரிகள் அருமை
நன்றி ராஜ்குமார்!