1 .ஒரு தடுமாற்றம் என்பது
கை கொட்டிச் சிரித்துப்
பார்க்க விழையும்
காலத்தின் நமுட்டு சீண்டல்தான்
சுழற்சியின் தந்திரம்தான்
கால் தடுக்கி விழ வைக்கும்
எள்ளலின் சாமர்த்தியம்தான்
உதறி நடக்க
சரித்திர நிகழ்வாக
சாத்தியம் உண்டுதான்
உருகி வீழ்ந்து
சாக்காடு சேரும் வரையில்
விடேன் என இடறும்
விஷ முள்ளாக்காத வரையில்
ஒரு தடுமாற்றம் என்பது
சாதாரண நிகழ்வுதான்.
2 .கவிதை….
பொங்கும் உணர்வுகளை
வெளிப்படுத்தாது
கோப்பையில்
ஊற்றி நிரப்புகிறேன்
ஒர் ஆகச்சிறு மிடறு உள்ளிரங்க
அத்திரவம்
பருகுபவரின் மனநிலைக்கேற்ப
தன்னை மாற்றிக் கொள்கிறது
சுவையறியாதவர்க்கு
தண்ணீர் போலவேனும்
எப்படியோ ஒரு வகையில்
தாகம் தீர்ப்பதாக…
3
சரி செய்ய முடியாத
இழப்புகளும் துன்பங்களும்
சமவிகிதமென்பதே வாழ்வு
சுமந்து செல்வதே தீர்வு
காலப் போக்கில் குறையாத சுமையை
சுலபமென்றே ஏற்றிடும் மனது
இடறிய கற்கள் படிப்பிக்கும்
அனுபவமென்பது நம்
இடர் வழிச் சொந்தம்
விதித்த வலிகளை நேசிப்பதில்
சுகம் புலப்படும் தருணம்
விதியுணர்த்திடும் தொடர் பந்தம்
அணையிட்ட ஏக்கங்களை
சிறிது சிறிதாகத் திறந்து வெளியேற்ற
அவசியம் கானலின் வெப்பம்
சிலமுறை கரைத்திட உதவும்
பலமுறை பளுவேற்றவும் செய்யும்
சிதறிடும் விழித் துளியாய் துயரம்
துடைத்திடும் விரல் நுனி மட்டும்
என்றுமே நமதாகும் பொழுதில்
துலங்கிடும் உண்மையின் தாக்கம்.
4
இறுக்கி இருத்தி வைத்திருக்கும்
காரணிகள் நிலையாதென
உணர்ந்ததுதான்
அவற்றின் பொருட்டே
இவ்வுலகில் நீடித்திருப்பதென்பது
மெய் நிகர் மகிழ்ச்சிதான்
நிரந்தர சமாதானம்தான்
அறியாத மண்டூகமா என்ன?
ஆனாலும் ரிவிட் ரிவிட்டென
வறட்டுக் குரலெழுப்பி பிடிபட்டு
சாகப்போவது
உறுதியென அல்லாடி
வினைப்பயனெனத் தொடங்கும்
ஒரு விநாடியில் தப்பி
குற்றவுணர்வு மிக
பேந்தப் பேந்த விழித்து
நிலை கொள்ளாது தாவுவது
எதில் சேர்த்தி?
5. அழுத்தம்
முடங்கிய கூட்டிலிருந்து
முழுத்தெருவின் வீச்சையும்
சலனம் ஓய்ந்த விழிகளால்
அளந்து கொண்டிருக்கிறேன்..
அனல் வாரியடித்த பகலை
ஆசுவாசப்படுத்தும் முயற்சியில்
அலை தொட்ட காற்று
மெல்ல ஆரவாரமற்று இலைகளைத் தடவ
சம்பந்தமற்ற பாவனையில் மரம் சத்தமற்ற கோபத்தில் மௌனிக்க….
பிற்பகலின் ஓய்ந்த தனிமையில்
பிரியங்களற்ற வெறுமையில்
இயக்கமற்ற எந்திரமாய்
இசை மறந்த வீணையொன்றின்
தந்திகளைச் சன்னமாய் மீட்டுகிறேன்…
தளர்ந்த கீழ்ஸ்த்தாயியில் நடுங்கி
நிச்சயமற்ற ஸ்வரங்களின் வரிசைகளை
நினைவுகளின் அடுக்குகளில் தேடியெடுத்து
தனித்து விடப்பட்ட சூழ்நிலைக்காய்
விம்மித் தவித்த ஒலியில்
தன்னியல்பிழந்த ஒரு ராகத்தை
கசிய விட்டது…
பின்னணியாய்
லயத்தில் கலந்தது
கூடுகளைத் தேடித் திரும்புகிற
கூவிக் களைத்த பறவைகளின்
சிறகொலி….
கூட்டுக் கச்சேரி அரங்கேற
கூடவே இணைந்தது
நீண்ட தெருக்களில்
மறுபடி தொடங்கிய
ஆரவாரங்கள் நீடிக்கும்
திரை மூடுகிற வரையில்..
உதிக்கும் நிலவு காயும் பொழுதில்
உடன் துணையாக வேண்டுமே?
அதுவரையில் காத்துக் கிடக்கிறேன்
அமைதியற்ற உள்ளத்தின் பிடியில்
அடங்கி ஒடுங்கி வெம்பிடும் உடலாய்.
ரத்னா வெங்கட்.