உண்மையைப் போல் ஒட்டும் ஒப்பனை
எதைக்கொண்டும் தொடங்கிவிடலாமெனும் போது
எதிர் இருப்பது எளிதாகிறது
மாபெரும் பள்ளங்கள் சாத்தானின் முக்கோணங்களன்று
அவை
திரும்பி வரும் சாத்தியங்களுக்கு உட்பட்டது
தொலைதல் கணம் கண்டுபிடிக்கப்படும் போது
கண்டுணர்கிறோம்
உண்மைக்கும் பொய்க்குமான நூலளவு
பேதங்களை
நூல் பொம்மையின் இருப்பென ஆட்டங்கள்
ஆட்படுகிற ஆள் அளவே
அசைவிற்கும் அசைவின்மைக்குமான
நாடகம்
மற்றபடி
உதட்டுச் சாயங்கள்
அழகில்லை என்றால் ஏற்கவா போகிறோம்
நாம் உச்சரிப்போம் ஒப்பனைகளை
ஒப்பனைகளாய்
வழியென்பதின் வலியற்றது
வழியற்று நிற்கும்படி செய்துவிட்டது
உன் பாதை
சராசரிகளை மீறிய சதவிகிதம்
கணக்கெடுக்கிற கண் துடைப்பில்
நீ என்பவன்
விளங்கா உயரம்
என்னை ஆள்வதில் கொண்டுவிட்ட கர்வம்
பரிசளிக்கிற மெளனத்தில் தான்
உன்னை வீழ்த்துவதற்கான ஒற்றை சொல்லையும் பத்திரப்படுத்தியிருக்கிறேன்
பதிலற்றபடி நகர்கிறது நாட்கள்
நீயோ அதன் மேல் வருடங்களை மாற்றியிருக்கிறாய்
திரைச்சீலையிட்ட மனமாகிறது
இரவு
தெளிவற்ற அதன் மேல் விழும் உன் வெளிச்சம்
பெரிதாக்கிக் காட்டுகிறது எதையும்
சிறு விட்டில் கேள்விகளோ
பதிலற்றபடி எரிந்து விழுகிறது
பரிசளித்த நிராகரிப்பின் மேல்
சொல்வதைச் செய் என்பதைப் போல்
முகம் காட்டுகிறது
உன் நளினம்
ரகசியங்களின் மேல் ஏறி நின்றுகொண்ட
உன் உச்சிக்கு
சம அளவில் இருக்கிறது
ஒரு பாதாளம்
திரும்பிடாத தூரம் தான்
உன்னை நிறுத்தியிருப்பது
நீ வழக்கம் போல் திறந்துவிடுகிற மெளனத்தை
பாதையாக்கிக் கொண்டன
கைவசமிருக்கிற மிச்ச சொற்கள்
Courtesy : Photo & Visual Creatives By Hussam Eissa
அற்புதமான கவிதைகள். எடிட்டர் டேஸ்ட் சாய்ஸ் சூப்பர் . முதல் கவிதை ஆஹா. குரலுக்கு ஹாட்டின்ஸ்
அக்கா.. செம வாய்ஸ். உங்க கவிதைய இப்போதா வாசிக்றேன். சின்ன குயில் சித்ரா.போல
நீங்க நுட்பகுயில் ரேவா