செங்கமலத்திற்கு
எல்லாமே
மாரியாத்தாதான்.
அஞ்சாயிரம் அசலுக்கு
ஆறு வருசமா
மாசா மாசம் அஞ்சு வட்டி
கட்டுற கதைய
பேச்சியப்பன் சொல்லக்கேட்டவ
“கலங்காதடா
அவன மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.
டி வி யில
வந்த செய்தியைப் பாத்துட்டு
“நாசமா போறவனுக
சனங்க
குடிக்கிற தண்ணியிலயா
பீயக் கலப்பானுக…
அவனுகள மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.
வீட்ட எழுதி வாங்கிட்டு
பெத்த அப்பன
வெளிய தள்ளுனவன
காறித் துப்பி
“பேதியில போவ
உன்ன
மாரியாத்தா கேப்பா.”
என்றாள்.
காசு குடுத்தாதேன்
கையெழுத்து போடும்
விஏஓ வ
“கட்டையில போவ
மாரியாத்தா கேப்பா..”
என்றாள்.
ஒரு
மத்தியான வெயில்ல
மாரியாத்தா பீடத்துல
தாயக்கட்டம் போட்டவளிடம்
“ஏந்தா
எதுக்கெடுத்தாலும்
மாரியாத்தா கேப்பாங்கிறியே..
அவ கேட்கலன்னா…?
என்றவனிடம்
சடாரென
உக்கிரமாகி…
“கேட்காம
போவட்டும்
மானங்கெட்ட
மாரியாத்தாவ
நான் கேட்பேன்..”
என்றாள்….
ஒரு காயை வெட்டிய படி.
நன்றி : கவிஞர் கண்மணி ராசா
கவிதை வாசித்த குரல் : வாசுகி லட்சுமணன்
Listen on Spotify :