cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கட்டுரைகள் கவிதைகள்

சாகித்ய அகாடமி நடத்திய தென்னிந்திய கவிஞர்களுக்கான கவியரங்கக் கூட்டம் : முபீன் சாதிகாவின் அனுபவங்களும் கவிதைகளும்


சாகித்ய அகாடமி சார்பாக, தென்னிந்திய கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவியரங்க நிகழ்ச்சி ஹைதராபாத்திலுள்ள ரவீந்திர பாரதி அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு டெல்லி சாகித்ய அகாடமியின் திரு.ராஜ்மோகன் அவர்கள் அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டேன். அழைப்பிதழில்தான் கவிதைகள் ‘நம்பிக்கை மற்றும் விழைவு’ குறித்த தலைப்பில் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. நான் பொதுவாக, தலைப்புகளுக்குக் கவிதைகள் எழுதுவதில்லை. உடனே திரு.ராஜ்மோகன் அவர்களை அழைத்து என் இயலாமையைக் கூறினேன். இந்தத் தலைப்பில் கவிதை எழுதுவதில் என்ன சிரமம் என்று கேட்டார். தலைப்புக்குக் கவிதை எழுதுவது படைப்பாக்கம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தேன். ஆனால் என் கவிதைகளில் சிலவற்றின் பொருள் இந்தத் தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றும் சொன்னேன். அது போதும் என்றார். நானே பயண ஏற்பாடுகளைச் செய்யும் படியும் அதற்கான செலவை சாகித்ய அகாடமி ஏற்கும் என்றும் சொல்லிவிட்டார். என் கவிதை வாசிப்பு மதியம் இருப்பதால் காலை 12 மணிக்குள் அரங்கிற்கு வரவேண்டும் என்றும் சொன்னார்.

உடனே விமானங்களில் இருக்கைகளைத் தேடிய போது ஏர் ஏஷியா காலை 9.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படுகிறது. 10.35க்கு ஹைதராபாத் போய்விடும் என்று தெரிந்து அதில் முன்பதிவு செய்துவிட்டேன். இப்போதெல்லாம் விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்தாலும் கொரோனாவில் பாதிக்கப்படவில்லை, மருத்துவமனையில் இருந்ததில்லை, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை என்ற உறுதி மொழி தரும் அரசின் இணையதளத்தில் பதிவு செய்தால்தான் பயணச்சீட்டு கைக்கு வரும். வருவதற்கான விமானம் இரவு 9.30க்குத்தான் கிடைத்தது. அது சென்னைக்கு 10.45க்கு வந்து சேரும் என்று தெரிந்தது அதிலேயே பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டேன்.

ஜனவரி 19ஆம் தேதி காலை 4 மணிக்கு எழுந்து அண்ணன் நிஜந்தன் அலுவலகம் எடுத்துச் செல்லத் தேவையான சமையலை முடித்துவிட்டு நானும் சாப்பிட்டுவிட்டு 6 மணிக்கு ஓலா வண்டியில் கிளம்பினேன். 7 மணிக்கு விமான நிலையம் அடைந்தேன். உள்ளே நுழைந்தவுடன் ஜெயமோகன் எதிர்க்க வந்தார். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்துக் கிளம்பினேன். என்னிடம் இரண்டு சிறிய பைகள் மட்டுமே இருந்தன. அவற்றை எல்லாம் சோதித்து முடித்துவிட்டு விமானத்தில் ஏறும் நுழைவாயிலுக்கு வந்து அமர்ந்துவிட்டேன். நேரடியாக விமான நிலையத்திலிருந்து விமானத்திற்குள் போகும் இணைப்பை வைத்துவிட்டதால் எளிதாக விமானத்திற்குள் அமர்ந்துவிட முடிந்தது.

ஜன்னலோரம் இருக்கைக்குத் தனித்தொகை, விமானத்தின் நடுவில் உள்ள இருக்கை என்றால் அதற்குத் தனித்தொகை என்று ஒவ்வொன்றுக்கும் தனியாகக் கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததால் மூன்று பேர் அமரும் விமானத்தின் பின்புற இருக்கையைத் தேர்ந்தெடுத்திருந்தேன். சாகித்ய அகாடமிதான் இதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் என்றாலும் அதை ஏன் செலவழிக்க வைக்கவேண்டும் என்று நினைத்து இப்படித்தான் எப்போதும் விமான பயணச் சீட்டைப் பெறுவேன்.

விமானத்தில் கொடுக்கும் உணவு வகைகளை வாங்கினால் அதற்குத் தனிச் செலவு. அதையும் வாங்கமாட்டேன். விமானத்தில் மூன்று பேர் அமர்வதில் நடு இருக்கை. இரண்டு பக்கமும் மூத்த குடிமக்கள் அமர்ந்திருந்தார்கள். இறங்கும் நேரத்தில் அருகில் அமர்ந்திருந்த பெரியவரிடம் நான் செல்ல வேண்டிய இடம், ஓலா டாக்ஸி இதைப் பற்றி விசாரித்தேன். அவர் அந்த வழியாகச் செல்வதால் என்னை விட்டுச் செல்வதாகச் சொன்னார்.

என் கல்வி, எழுத்து, ஆய்வு குறித்து விசாரித்தார். நூல் பதிப்பில் எழுத்தாளர்கள் பயன் அடைவதில்லை எனக் கேட்டுப் பெரிதும் வருந்தினார். நான் அடுத்து செய்யவிருக்கும் நனவுநிலை குறித்த ஆய்வைச் சொன்னவுடன் ஆர்வமாகக் கேட்டு பல கேள்விகளை எழுப்பினார். நான் எழுதிய, தொகுத்த நூல்களைக் குறித்துச் சொன்ன போது 40 பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்த நூல்கள் அவரை ஆச்சரியப்படுத்தின. ஒரு பெண் மற்றொரு பெண்ணைச் சகிப்பதை அதிகம் காண முடியவில்லை. 40 பெண்களை எப்படி சகித்தீர்கள் என்றார்.

11.30க்கு சாகித்ய அகாடமி நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தேன். அந்தப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இறங்கும் போது அண்ணன் வண்டியிலிருந்து இறங்கும் நினைவில் பின்புறம் வைத்திருந்த பையை எடுக்க மறந்துவிட்டேன். கவியரங்க நிகழ்வுக்குச் சென்ற பின்தான் நினைவுக்கு வந்தது. அவருக்கு உடனே அலைபேசியில் சொல்லி மாலை வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்த பின் நிம்மதியானது. இருந்தாலும் இப்படி மறந்து போனது மிகவும் உளைச்சலை ஏற்படுத்தியது.

காலையில் ஒரு கவியரங்க நிகழ்வு முடிந்திருந்தது. நான் போகும் போது அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். திரு.ராஜ்மோகன் அவர்களும் சாகித்ய அகாடமி செயலாளர் திரு.சீனிவாச ராவும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். சென்னையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிரியா கிருஷ்ணனைச் சந்தித்தேன். அதன் பின் சீன பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பயிற்றுவிக்கும் மணிகண்டன், கேரள கவிஞர் காமேஷ் பூனூர், அவருடைய நண்பர் முகமது ஆகியோரைச் சந்தித்தேன்.

மதியம் நல்ல சைவ உணவு விருந்து. நான் இரவு விமானத்தில் திரும்பவேண்டும் என்பதால் இரண்டு கைப்பிடி புலாவ் சாதத்தை மட்டும் எடுத்துக்கொணேடன். மதியம் நான் கவிதை வாசிக்கும் நிகழ்வு தொடங்கியது. அந்த்ரி நமஸ்காரம் என தெலுங்கில் சொல்லிவிட்டுத் தொடங்கினேன். என் எல்லா கவிதைகளுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்திருந்தேன். தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து வந்த தமிழ் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் மிகவும் ரசித்தார்கள். கவியரங்கம் முடிந்தவுடன் மலையாளக் கவிஞரின் நண்பர் என் கவிதைகளை அனுப்பச் சொன்னார். அவர் கணித ஆசிரியர். இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். உருது கவிஞர் என் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டார். அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தெலுங்கு பேசும் சிலர் தமிழைப் புரிந்து கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் மிகவும் அருமையான கவிதைகள் என்று சொன்னார்கள்.

டிவி9 செய்தியாளர் என்னைப்பேட்டி எடுத்தார். இஸ்லாமியர் என்பதால் அதிகம் ஒடுக்கப்பட்டிருப்பீர்களே என்றார். மதச்சார்பற்றத் தன்மை, நடுநிலை பார்வை கொண்டிருப்பதால் அதிகம் உதாசினபடுத்தப்படுவதாகச் சொன்னேன். எப்படி கவிதைகள் எழுதுகிறேன் என்று கேட்டார். நனவிலி நிலையில் வரும் படைப்பாக்கங்கள் எனக் கேட்டு ஆச்சரியமடைந்தார். என் கவிதையைப் படிக்கச் சொல்லி பதிவு செய்தார். அதை தன் அலைபேசியில் வாங்கி வைத்துக்கொண்டார். இது போன்ற மொழியைக் கேட்டதே இல்லை. ஏதோ ஒரு வினோத உணர்வும் அதிர்வும் ஏற்படுவதாகச் சொன்னார். என் ஆய்வு பெரும் ஆச்சரியத்தை அவருக்குத் தந்தது. பெரிய அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களிடம் உதவக்கேட்டு ஆய்வை முடிக்குமாறு சொன்னார். அவர்கள் மாநிலத்தில் இது போன்ற ஓர் ஆய்வைச் செய்பவர் உடனடியாக ஆதரவு பெறுவார் என்றார். அவர் மலாலாவை நேர்காணல் செய்திருக்கிறார். என் பேச்சு அது போன்ற மதிப்பைக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

மாலை அங்கிருந்து கிளம்பி காலையில் விட்ட பையை வாங்கச் சென்றேன். உடன் சுபோதயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி வந்தார். இலக்கியத்திற்காக, தனி அலைவரிசைத் தொடங்க இருப்பதாகச் சொன்னார். என் படைப்பாக்கங்களைத் தரக் கேட்டுக்கொண்டார். பையைக் கொண்டு வந்து கொடுத்தார் காலையில் சந்தித்த உடன் வந்த விமானப் பயணி. அவருடைய மகள் பரதநாட்டியக் கலைஞராம்.

திரும்பி வரும் போது பஞ்சரா ஹில்ஸிலிருந்து பயணம் தொடங்கியது. செல்வ வளம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. எதுவுமே சிறிய கடைகளாக இல்லை. அதைத் தாண்டிய பின் வந்த நகரமும் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தது. சென்னை அதில் பாதி கூட இல்லை. அங்கே பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது எனச் சொல்லவேண்டும். வாகன நெரிசல் உள்ளது. ஆனால் ஒழுக்கம் இருக்கிறது. உதவும் தாராள குணம் அமைந்திருக்கிறது.

ஹைதரபாத் விமான நிலையத்திற்கு ஒரு மணி நேர பயணம். இரவு 9.30க்குத்தான் சென்னை விமானம். இண்டிகோ விமானம் என்பதால் அதிகக் கூட்டம். பேருந்தில் ஏற்றிக் கொண்டு விமானம் அருகே வந்துவிட்டார்கள். அதில் ஏறி அமர்ந்துவிட்டேன். இதிலும் நடு இருக்கைதான். இரு நண்பர்கள் அருகில் அமர்ந்து பேசவேண்டும் என நினைத்ததால் எனக்கு ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்துவிட்டார்கள். சென்னைக்கு விமானம் 10.35க்கு வந்துவிட்டது. வெளியில் அண்ணன் எனக்காகக் காத்திருந்தார். வீட்டுக்கு 11 மணிக்கு வந்துவிட்டோம்.. மிக அருமையான அனுபவங்களைத் தந்த ஹைதராபாத் மறக்க முடியாத பயணம்.

ஹைதராபாத் சாகித்ய அகாடமி தென்னிந்திய கவிஞர்களுக்கான கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள்:

மதில்

பூனைவால் துயின்ற கட்டில்
வலிந்தலும் நீட்டலும் கதறாது
எலிதேடி கண்ணயரும் யாமத்தில்
கூந்தல்முனை வருடும் நித்திரை
சொரிந்த தெருவின் சுற்றம்
நாறிய நிலையதில் நிலை காண
கார்காலக் கவின் மரம்
துணைவிடுத்த விழாநாளில்
பாயுங்கால் இரை கண்டு
மினுங்கும் கண்மணி மதில்மேல்

அன்பின் ஆறாமொழி

மீன் படரும் நீரிலும்
கருமை புகா வானிலும்
தொட்டுணரா தீயிலும்
பிளவு காணா கல்லிலும்
வருந்தும் வருந்தா வளியிலும்
நகையோடு பகையும் துயரிலும்
மெலியதில் வலியாய் மலரிலும்
நேரில் எதிரா திசையிலும்
முகம் கலக்கும் ஆடியிலும்
முற்றோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு தூண்டா நஞ்சிலும்
ஒளிபுகா திரையின் இருளிலும்
அடரும் வெளியாய் கானிலும்
தளிரோடு துளிரும் முளையிலும்
முழுமையின் உருவாய் அண்டத்திலும்
விரைந்துழலும் ஒளியிலும்
ஒடுக்கும் துடியின் இடியிலும்
பொழிவில் வெருளா புயலிலும்
திரளும் தீரத்தின் பிணியிலும்
எம்மில் மாறா எச்சத்திலும்
நிச்சயமில்லா நிதர்சன நேசத்திலும்
தீரா வெகுளலலின் இறுதியிலும்
நிறையுமோ நெறியின் நசை.

கிளி செப்பும் காதை

பசுந்தளிர் வண்ணந்தான்
இறகில் துளிர்த்திருக்க
கோவையின் அலகாய்
ரௌத்ரம் சிவந்து
குமரியின் நடைகண்டு
கொத்தியது சிரத்தை
மிழற்றும் தத்தை

இளம் பேதை கிள்ளை மொழி அறியாது தவித்திருக்க
அதுவும் தன் காதை விளம்பியதை இச்சுவடி குறித்திருக்க…

தனியொரு தீவில்
கிளியொன்று மாமரத்தில்
வசித்திருக்க

வேருலகத்து உயிராய்
சொர்ணக் கிளியொன்று
உடனிருக்க வந்ததே

பெட்டையின் எழிலால்
மதிமயங்கும் கிள்ளை
புவனத்தை வசமாக்க
மமதை கொண்டதே

மாட்சிமை பெருக
உவகை கொண்டு
தன்னுரிமை எனவே
கிளியும் செப்ப

பொன்னாய் முகிழ்த்த
கிளியும் அச்சிறை
வதிய ஒறுத்து நிற்க

கனவின் வாசல் வந்த
காட்சியும் வலம் வாராதா
என காத்திருந்து
பொற்கிளியும் தன் ஆற்றல்
பொலிந்து கூட்டைத் திறக்க
துயிலில் மலிந்த கிளியும்
சரிந்து வீழ பாயும் அந்த
கடுவன் கவ்வி மாய.

ஆடிப்பாவை எனும் யாம்

யாம் ஆடிப்பாவை
எம்முன் அவள்
அவளெனும் யாம்
ஈங்கு இற்று
எம் பிம்பம்
கட்டி ஒட்டி
எம் நிழல்
பிரித்து விரித்து
என்றும் நிலை
பெயர் கொண்டு
எழில் முகம்
கோணாது கண்டு
துயர் மாற்றி
துய்யும் பற்றில்
மீளும் பிராயம்
மாறாது மலராது
எம்மை காட்டும்
அவளும் அவளின்றி
புகை சூழ்
பருவத்து புதிராய்
எம்மை வஞ்சிக்கும்
யாம் குலைவதாய்
எம்மிடம் வதிய
அவள் விடுத்த
அனைத்தும் துலக்கமுற
ஒளிரும் எம்முள்
அவளற்ற யாம்.

மயிலாக்கம்

நீலத்தின் பச்சையும்
பச்சையின் நீலமும்
கருமைக்குள் கிளர்ந்து
ஒயிலாய் பாதத்தில் மடிந்து
கொண்டையும் சிலிர்த்து
அலகின் வெளிறலில்
சத்தியும் உறைந்து
ஓங்காரத்தின் வளைவில்
துதிக்கும் நிறைவினது
ஆடும் ஓர் கோலம்.

கொக்குப் பாடல்

ஒக்கது கொக்கும்
இரட்டை சிலிர்க்கும்
மூக்கும் சிவந்து
நாலும் வண்ணம்
அய்யை ஆளும்
ஆற்றின் நீளம்
எழுவதின் துறை
எட்டும் காணாது
நவமணி தேடும்
பதின்ம கோலத்து

கொக்கும் நதி நீளம் பறந்து
சேரும் துறை காணாது
கொத்தும் மூக்கின் அலகது
மீனும் துள்ளி நீரில் மறைய
பூவும் நாறாது தேனில்
துவைக்கும் அலகை சுவைத்து
செங்கால் நாணலில் நவமணி
சிதற சில்லென குளிரும்
அய்யை அருளில் மீண்டு
ஓர் இரை பத்தாய் நிறைய.

காயம்

வாளும் கீறிய
ஆடிப் பிம்பம்
மறைந்தது நீரில்
தளும்பலாய்
சேரும் கணம்
உடைந்த நுனி
உயிர் மாற்றி
காயமும் உடலில்
கரைந்தது மெய்யாய்.

கிளி ஆற்றுவித்தல் கூற்று

அணங்கின் தோள் அமர்ந்த கிளி
எம் தலை முன் பறந்து வெகுளியில்
தீக்கக்கியது பச்சை மாறி அனலாக
எத்திசையும் திருகும் தன் சிரம் காட்டி
எம்மில் இயலா திறமதனை பழித்து
செவ்வாய் கொத்தும் அலகாய்
கூர்ந்த அறிவதனை பிளக்கும் வலியுடன்
எம்மை இளித்து கூறும் சொல்லோடு
உயர்ந்து திரியும் மலைகளிலும்
அச்சம் கொள் எம்மனம் சுருங்க
மாருசிக்கும் நாவற்று போனதை
இடித்துக் காட்டும் நகைப்புடன்
கொஞ்சி மிழற்றி தன்னுணர் வழியில்
எம்முன் கிளரும் பேருயிர் போலே
மருளும் சிறுபறவை பெருமிதம் கொள்ள
கூடும் அடைந்து குறுகும் தரமாய்
கவின் படு கரையெனவே ஆற்றி
எம்மை போக்கி தன்னை உணர்த்தும்
சிறுசெய்கையாம் என்றே விடுக்க
அருள் எனும் அம்சம் அகம் உரைத்து
தத்தை வாய்மை எம்மை வென்று
இறகு வேண்டி மென்முறுவலித்து
செவ்வண் இறைமதி பூணுமோ இச்சகத்தில்


 

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ஜாகீர் உசேன்

இனிய பயண அனுபவம் சிறப்பான கவிதைகள்
இனிய வாழ்த்துக்கள் 🌹❤️🌹

You cannot copy content of this Website