கிழிந்த ஆடையை மடியில்
போட்டு கூர்ந்து தைத்துக் கொண்டிருக்கிறாள்
ஒரு இசைக்கருவியை சரி செய்வது போல்
காத்திருங்கள்
தைத்தப்பின்
இசையை உங்களுக்கு உடுத்திவிடுவாள்
என் உடல் வெறும் தேயிலை
சாயத்தின் நிறம்
நானோ நிலமற்றவள்
பெருமலைக்கும் ஓயாத அருவிக்கும்
அருகில் நிற்கிறேன்
இந்நேரம் விறகுசுமந்து வீடு திரும்பியிருப்பார்கள்
தோட்டத்துப் பெண்கள்
கொஞ்சம் பொறுங்கள் என் உடல்
வெடித்துக்கொண்டு வருகிறது
வெடிக்கும் முன் எழுதி முடிக்கவேண்டும்
மழை குளிரில் உறைந்து நடுங்கி வீடு திரும்புகிறேன்
இரவில் ஒரு குவளைதேநீர்
விடியலில் ஒரு குவளைதேநீர்
உடல் போதும் போதும் என்கிறது
இறப்பரில் பால் சுரக்கும்
தேயிலையில் வியர்வை சுரக்கும்
இவ்விரு காலங்களை நான் எப்போதும்
கைவிடப்போவதில்லை
இந்த தோப்பில்தான் கனிந்த பழங்களும்
கிளி கொத்திய கதைகளும் உண்டென்கிறாள் தோழி
இதுவரை
தோப்பினுள்ளே நுழைய அனுமதியில்லை
பருவம் போய் சேருவதற்குள் கனிந்த பழங்களை மடியில் சேகரித்தல் வேண்டும்
கனிந்திடாத கிளிகளின் கதைகளோடு