cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்


நம் இறுதி சாட்டில் 8.30 க்கு என்னை
அழைப்பதாக சொல்லியிருந்தாய்
என் டிஸ்ப்ளே கடிகாரத்திற்கு
மஞ்சள் நிறச்சுவர் ஒன்றிருக்கிறது
அதன் பெருத்த வயிறு ஆர்ப்பரிக்கும்
பெருங்கடலை உண்டுச் செரித்திருக்கும்
அப்பெருங்கடலில் என்றோ மூழ்கிய கப்பலின்
உடைந்த உதிரிபாகங்கள் மிதந்தலையும்
நீயற்ற என் நாட்களைப் போன்ற அச்சிறு துண்டுகளை
சுவற்றோர பல்லிகள் நுகர்ந்துச் செல்லும்
அப்பல்லிகள் பிடிப்பின்றி கீழே விழும்
சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடக்கும்
நான் வளர்க்கும் பூனைக்குட்டிகள்
பிரபஞ்சம் எங்கும் ஓடித்திரியும் அவற்றை
எப்போதோ என் துயரக்கவிதையொன்றில் சொல்லிவிட்டேன்
இன்னும் 8.30 ஆகவில்லைதான்
ஆகவே,
எப்போதோ எழுதப்பட்டக் கவிதைகளை,
ஓடித்திரியும் என் பூனைக்குட்டிகளை
அலையும் சுவற்றோர பல்லிகளை,
உடைந்து கிடக்கும் கப்பலின் உதிரி பாகங்களை,
ஆர்ப்பரிக்கும் மனப்பெருங்கடலை,
பருவங்கள் பூக்காத மஞ்சள் நிறச்சுவரை,
எக்காலத்திலும் நகராத இக்கடிகாரத்தை
பின்னர் நூற்றாண்டுகளாக என்னை காத்திருக்கச் செய்யும்
உன் வார்த்தைகளை
நீ மோகப்புன்னகைக்கும்
என் டிஸ்ப்ளே புகைப்படத்தையும்
இப்படியே பார்த்து கொண்டிருப்பேன்
தினமும் 8.30 ஆகும் வரை.

தூரதூரத்தில் மினுங்கும் சிற்றொளியை
பேரிருளிலிருந்துப் பார்த்தேங்கும்
அற்பச் சிற்றெரும்பு நான்
என்றுமே விடியாத வானமென்று
ஒன்றுமில்லையென உரக்கச்சொல்லும்
அச்சிற்றொளியின் மென்குரல்
தனிமை ஓங்கிய அடர்வனத்திலும்
ஆழிரைச்சல் சூழவாழுமென் காதுகளில்
ஒருபோதும் கேட்பதில்லை
“நித்யம் நித்யம் ”
என்றலரும் என் மனப்பறவையை
கடந்தகால எண்ணக் கூண்டில்
சிறைவைத்துவிட்டுதான்
தூரத்தில் மினுங்கும் சிற்றொளியை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மேலுமொன்று
நானொரு சிற்றெரும்பு என்பது
நான் மட்டுமே அறிந்த இரகசியம்!


கவிதைகள் வாசித்த குரல் :   சாய் வைஷ்ணவி

Listen On Spotify : 

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website