cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

இளையோர் கவிதைகள்


  • தூங்கும் கல்

ஒரு சிறுவன்

கைக்குட்டையால் ஒரு கல்லை மூடினான்

கல் தூங்குகிறது என்று கூறினான்

உண்மையா என்று சரிபார்த்தேன்

கல் தூங்குகிறது.

  • மாற்றம்

தண்ணீரில் மிதக்கும் பொருள்கள் 

கண்ணுக்குத் தெரியாமல் நீச்சல் அடிக்கின்றன

மூழ்கும் பொருள்களுக்கு 

யார் நீச்சல் கற்றுத்தருவார்கள்

வறட்சி கற்றுதரும்.

  • அம்மாவின் விருப்பம்

சொர்க்கத்தில்

எல்லா நாளும் விடுமுறை நாள்

எனக்கு அவ்வளவுதான் தெரியும்

அம்மாவோ

அது ஞாயிற்றுக்கிழமையாக

இருக்கக்கூடாது என்கிறாள்.

 

  • சிறுவர்களே!

இந்த நிலம் உங்களைக் கவனித்துக்கொள்ளும்.

குழந்தையாக உங்கள் இரவுகளை வைத்திருக்கும்.

நிலா உங்கள் தலையணையை முத்தமிடும்

மின்மினிப் பூச்சிகள் உங்கள் தூக்கத்தைக் கவனிக்கும்

பாட்டி உங்களுக்கு சாக்லேட்டுடன்

ஒரு கதையைப் படிப்பாள்

பெரியவர்கள் நிலத்தை உழுவார்கள்

ஒரு பள்ளத்தாக்கு வழியாக உங்களை அழைத்துச் செல்வார்கள். 

இளைஞர்கள் தங்கள் கோமாளி உடையில்

உங்களை சிரிக்க வைப்பார்கள் 

அது உங்களை காற்றில் ஏற வைக்கும், 

நீங்கள் மகிழ்ச்சியில் களைத்து விடுவீர்கள்.

 

  • புதுமை

புகைப்படத்தில் இருக்கும் நான் 

ரொம்ப பழையதாக இருக்கிறேன்

கண்ணாடியில் தெரியும் நான் 

புத்தம் புதியதாக இருக்கிறேன்

 

  • புரிதல்

வீடு வெளியே போகாதே என்கிறது 

உலகம் வீட்டுக்கு திரும்பாதே என்கிறது 

எனது மூளையும் கால்களும்

மிக ஒற்றுமையாக சிந்திக்கின்றன

நான் யார் பேச்சையும் 

முழுமையாக கேட்காததால் 

வெளியே செல்கிறேன் வீட்டிற்குத் திரும்புகிறேன்

வீட்டிற்குத் திரும்புகிறேன் வெளியே செல்கிறேன்

மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

 

  • முயல்போல குதிக்கும் பசி

ஏழைகளுக்கு

ரொட்டி ஆமைபோல இருக்கிறது

அது நடக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது

அதற்குள் விலை உயர்ந்து விடுகிறது

 

  • நானே

இவ்வுலகில் 

நான்தான் 

நிறைய இரகசியங்களைப் பராமரிக்கிறேன்

ஒவ்வொரு விண்மீனும் 

எனது இரகசியம்

 

  • வாழ்க்கை இன்னும் கொஞ்சம்தான்

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 

நான் இன்னும் கொஞ்சம் சாப்பிட வேண்டும் 

இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்

எனக்கு இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்

நண்பர்களுக்கோ இன்னும் கொஞ்சம் விளையாட வேண்டும்

வாழ்க்கை என்பது இன்னும் கொஞ்சம்தான்.

 

  • அதோ அந்த மலை உடைந்துவிட்டது

சிறுவர்கள் விசித்திரமானவர்கள்

ஒரு சதுரங்க காய் போல அறிவை நகர்த்தி விடுகிறார்கள். 

ஒரு சிறுவன் ஓடி வந்து சொன்னான் 

மலை உடைந்து விட்டது என்று

எப்படியாவது மலையை மீண்டும் கட்டிவிடலாம் அல்லது ஒட்டி விடலாம் என்றேன்

சிறுவன் சொன்னான்

அந்த வேலையை நானே செய்து விட்டேன் என்று

சிறுவர்கள் விசித்திரமானவர்கள்

ஒரு சதுரங்க காய் போல நம்மை நகர்த்தி விடுகிறார்கள்


கவிதைகள் வாசித்த குரல் :  தேன்மொழி அசோக்

Listen On Spotify : 

About the author

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ்

பூவிதழ் உமேஷ் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவர். ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ என்ற கவிதை தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘சதுரமான மூக்கு’ மற்றும் துரிஞ்சி’ ஆகிய கவிதை நூல்களுக்கு தமிழின் முதல் அஃபோரிச கவிதை நூலான ‘தண்ணீரின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். எழுத்தெனப்படுவது எனும் இலக்கணம் சார்ந்த நூலையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறுவர் இலக்கியத்திலும் பங்களித்து வரும் இவர் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செளமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கிய மேடை விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். , சமீபத்தில் இவரின் “சதுரமான மூக்கு” சிறந்த கவிதைத் தொகுப்பு -2023க்கான படைப்பு இலக்கிய விருது பெற்றுள்ளது.

Subscribe
Notify of
guest
6 Comments
Inline Feedbacks
View all comments
இரா.சிசுபாலன்

சிறப்பான கவிதைகள். வாழ்த்துக்கள் தோழர்.

சிவரஞ்சனி

அருமை கவிஞரே. உங்களுக்கு என ஒரு பாணி நிறுவிவிடுகிறீர்கள்.

//சொர்க்கத்தில்

எல்லா நாளும் விடுமுறை நாள்

எனக்கு அவ்வளவுதான் தெரியும்

அம்மாவோ

அது ஞாயிற்றுக்கிழமையாக

இருக்கக்கூடாது என்கிறாள்.// அற்புதம்

துள்ளலான கவிதைகள்..உங்கள் கவிதைகளுக்கு குரல் கொடுத்தது உற்சாகமாக இருந்தது.

You cannot copy content of this Website