போனவுடன்,
இந்தாடா கைலி, கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்
பயணக் களைப்பு
நிம்மதியாய் மாறுகிறது.
போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்
சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும்
அவசியமில்லை.
சமையலறையில்
உட்கார்ந்து சாப்பிட முடிகிறது.
அங்கிள் என நம்மை விளிக்கும் குழந்தையை
மாமான்னு சொல்லு
என ஒரு குரல் திருத்துகிறது.
இன்னுமொரு தோசை வேண்டுமென
கேட்க முடிகிறது.
அங்கிருக்கும் அப்பா
நம் தோளின் மீது கைபோட்டு பேசுகிறார்.
போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டில்..
சாப்பிடுகையில் சிரித்து
பொறை ஏறுகிறது..
அவ்வீட்டு மகளோ மருமகளோ தாயோ
பதறித் தலையில் தட்டுகிறார்கள்.
திரும்புகையில் அத்தனை பேரும்
வாசல் வந்து வழி அனுப்புகிறார்கள்.
போனவுடன்,
இந்தாடா கைலி , கட்டிக்க.!
எனும் நண்பனின் வீட்டின் வாசலில்
ஒரு செல்ஃபி எடுக்கிறோம்.
வழக்கொழிந்த கேள்வியை
அவ்வீடு கேட்கிறது
“ மறுபடியும் எப்ப வருவீங்க …”