cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 விமர்சனம்

இயற்கையின் கவிதைகள் நாங்கள்


(கார்த்திகா கவின்குமாரின் அகப்பை முகங்கள் கவிதைப் பிரதியை முன்வைத்து)

 

“சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்

சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்

போகாத பெருங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்

பொதியம் நாம்; இமையம் நாம்; காலத்தீயில்

வேகாத பொசுங்காத தத்துவம் நாம்”.

– கவிஞர் மீரா

முன்னுரை: 

ஆசிரியப்பா, கலிப்பா, வெண்பா, பரிபாடல் என்ற பா வகைகளும், எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என செய்யுளின் உறுப்புகளால் அமையப்பெற்று இலக்கண சுத்தியோடு அமையப்பெறும் பாக்களே மரபுக் கவிதைகள் என வரையறுக்கப் படுகின்றன.  

ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்பன மட்டுமே மரபுக் கவிதைகளாக இன்றைக்கு எழுதப்பட்டு வருகின்றன. 

சங்க இலக்கியம், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியம், தனிப்பாடல், சித்தர் பாடல்கள் என பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் மரபுக் கவிதையின் வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. தீயாலும், பிரளயங்களாலும், கரையான்களாலும், பாதுகாப்பதில் அக்கறை இன்மையாலும் எண்ணற்ற அரிய இலக்கண இலக்கிய நூல்கள் அழிந்து போயிருப்பதை தொல்காப்பியம் சுட்டிக் காட்டுவதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த மனிதச் சமூகத்தின் சுற்றுச் சூழல் மாறுபாட்டில் சமுதாய, பொருளாதார, பாலியல் தத்துவங்கள் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில் கவிதை மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்கிற தேவையோ, கட்டுப்பாடுகளோ கிடையாது என கவிக்கோ அப்துல் ரகுமான் கூறுவது மிகவும் பொருத்தப்பாடானதே.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் 

வழுவல கால வகையினானே” 

என்ற பழமொழி கவிதைச் செயல்பாட்டுக்கும் பொருந்தும் எனலாம். 

“விருந்தேதானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என தொல்காப்பியரே புது வடிவங்களுக்கு இடம் கொடுத்து புதுப் பெயரும் சூட்டுகிறார்.  

ஈராயிரம் வருட தமிழ் கவிதைப் பரப்பில் மரபுகள் உடைத்து புதுமைகள் செய்ய காலம் உந்தியதின் விளைவாக புதுக்கவிதை என்ற வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்கு வந்தது. சொல் புதிது சுவை புதிது சோதிமிகு நவகவிதை என புதுக்கவிதை குறித்து பாரதி பாடி நூற்றாண்டுகள் ஆன பின்பும் தமிழில் கவிதையின் போக்கு மேலும் மேலும் புதிய வடிவங்களை உருவாக்கி வருகிறது. 

மரபை நீக்கி அல்ல, மரபை அணைத்து புதிய வடிவங்களில் கவிதைகளை உருவாக்குவதே தமிழ் கவிதை உலகம் உயிர்ப்போடு இயங்கும் என்ற பிரமிளின் சொற்கள் காலத்துக்கும் தமிழ்க் கவிதை மரபோடும், புதுமையோடும், இளமையோடும் பிறந்து கொண்டே இருக்கும் என்றால் மிகையில்லை. 

கார்த்திகா கவின்குமாரின் அகப்பை முகங்கள் கவிதைத் தொகுப்பு பழமையையும், புதுமையையும் இணைத்த வடிவிலான தொகுப்பு ஆகும். இப்பிரதிக்குள் மரபின் நீட்சி தன்னெழுச்சியாக புதுமையின் கூறுகள் கொண்டு வெளிப்படுதுகிறது எனலாம். அகப்பை முகங்கள் சமையற் கூடத்தில் விசும்பும் பெண்ணின் சொற்களாக இருக்குமோ என ஆவல் கொள்பவராக இருப்பீர்களானால் இறுதிவரை பொறுத்திருக்கலாம்தானே? 

 

அகப்பை முகங்களில் சமூக அவலமும் கவிஞரின் கோபமும்: 

ஒரு கவிதை என்ன செய்து விடும்? அதுவும் சமூகத்தின் மீது ஏதேனும் தாக்கத்தை உண்டுபண்ணி விடுமா? என்றால் முடியும் கவிதையால் எல்லாம் முடியும், நவரசத்தையும் கவிதையால் கொண்டுவர முடியும். அவரவர் மனங்களில் ஏற்படும் தாக்கத்தைப் பொறுத்தது என்பேன். 

 அழகியலும் அரசியலும் கலந்துவிட்டால் அது இன்னும் வீரியமாக கவிதைச் செயல்பாட்டை தனித்துவமாகித் தரும்.

 “மணல் சதைகள் (பக்:10) என்ற இக்கவிதையை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம். 

“தன் சதைப்பிண்டங்களை 

வெட்டி எடுத்த கயவர்கள்மேல் 

மண்ணை வாரித் தூற்றுகிறது 

வற்றிக் கிடக்கும் ஆற்று மணல்…” 

மணல் கொள்ளையின் அரசியல் விளையாட்டை, அவலத்தை ஒரு அழகிய கவிதையாக்கித் தந்துள்ளார். 

சிறப்புக் கட்டணம் (பக்:14) கவிதை கடவுள் தரிசனத்திற்கு அறவிடப்படும் கட்டணக் கொள்ளை பற்றிய சாடலான கவிதை. இலவச தரிசனத்தில் கடவுள் தூரமாகவும், சிறப்புக் கட்டணத்தில் கடவுள் அருகாமையிலும் அருள் பாலிக்கும் துயரை என்னவென்று சொல்வது? இவ்வளவு மோசமான கடவுள் தரிசனம் மற்ற மார்க்கங்களில் உண்டா என்ற கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை. 

ஆண்டைகள் (பக்:18) என தலைப்பிட்ட கவிதை நம்மை கல்வியின் பெயரால் மீண்டும் குலத்தொழில் செய்ய முனைகிறது என்பதைச் சாடும் அருமையான கவிதை. 

“தீட்டென்ற 

சொல்லுக்குப் 

பெயர் மாற்றி 

நீட்டென்றார்கள்…” 

என்ற வரிகள் மறுக்க முடியாத உண்மையைக் கூறும், நவீன வடிவிலான தீண்டாமை என்றே கொள்ளலாம். 

போலிப் பட்டங்கள், போலி விருதுகள் குறித்து (பக்:46-47) சாடுகின்ற இரண்டு அருமையான கவிதைகள் எனலாம். இன்றைக்கு பகட்டுக்காக பெறப்படும் பட்டங்களும் லாபி செய்து வாங்கப்படும் விருதுகளும் சமுதாயத்தில் இவற்றின் மீதான மதிப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இன்றைக்கு இவைகள் மலிவாகக் கிடைக்கின்றன என்பதால் கவிஞரின் கோபம் தார்மீகமாகவே உள்ளது. தகுதியுள்ளோரைத் தேடவே திறன் வேண்டிய சூழலில் தகுந்தோரைத் தேடி விருது வரும் நாளில் சமூகம் விழித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்வதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மறுப்பதற்கு இல்லைதானே? 

 

சுற்றுச்சூழலும் உணவரசியலும்: 

இன்றைக்கு நாம் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை கார்பரேட் நிர்வாகமே முடிவு செய்கிறது. நம் மரபான உணவு முறைகளை பூச்சிக்கொல்லி வைத்து நச்சாக்கி வைத்திருக்கிறது. நாம் எதை அணிய வேண்டும், எதைக் குடிக்க வேண்டும், எதில் பயணிக்க வேண்டும் என்ற விளம்பரங்களின் நுண்ணரசியல் விளையாட்டில் இன்றைக்கு நாம் எல்லோரும் பலியாடுகள் என்பது மிகையல்ல. 

உயிர்ப் போராட்டம் (பக்:17) என்ற கவிதை இதனை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் என்ற (பக்:37) கீழ்க்காணும் கவிதையில் 

“புவி உருண்டையை கூவமாக்கி 

நிலவு உருண்டையில் நீர் தேடி 

சோற்று உருண்டைக்குப் பதில் 

மாத்திரை உருண்டைகளை விழுங்கும் விஞ்ஞானப் பதர்களே” 

என்ற கவிஞரின் சாடல் சமகாலத்தின் அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

 

நவீன கவிதைகளில் பெண்கள் பெண்ணியம்: 

இத்தனை இத்தனை 

ஆண்களுக்கு மத்தியில் 

ஏன் வாப்பா இல்லை 

ஒரு பெண் நபி” – எச்.ஜி. ரசூல். 

மதம் பெண்கள் விடயத்தில் எப்போதும் பிற்போக்குத்தனமாகவே இருக்கிறது. எல்லா மார்க்கத்திலும் மனிதர்களைப் பிடித்தாட்டும் இந்த மதத்தை 

“மதக்கடவுள்களுக்குள்

பிடிக்காத 

மதம் 

மனிதனுக்குள் 

மட்டும் ஏன் பிடிக்கிறது” (பக்:13)

என கவிஞர் கேள்வியை முன்வைக்கிறார்.  எச்.ஜி. ரசூல் கேட்டதைப் போலவே கார்த்திகாவும் கேட்கிறார். பதில் என்னவாக அமையும் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

பெண்ணுரிமை எனும் கவிதையில் ஆண்களின் அவர்கள் எத்தகைய உயரிய நிலையில் இருந்தாலும் பெண்ணைப் பார்க்கும் பார்வை என்பது அற்பமானதாகவே இருக்கிறது. அதிலும் பெண்ணுரிமை மாநாட்டில் சிறப்பு விருந்தினரின் குரல் இப்படியாகக் கேட்கிறது என கவிஞர் பதிவு செய்கிறார். 

 “பெண்ணுரிமை மாநாட்டிற்கு 

சிறப்பு விருந்தினர் அழைப்பு 

ஏய் வந்தவர்களுக்கு 

டீ கொண்டு வாடி” (பக்:11) 

என்ற எகத்தாளமும், பெண் என்றால் எப்போதும் சமையல் வேலைகளின் பொருட்டே இருக்க வேண்டும் என்ற பார்வையும் மிக மோசமான ஒன்றாகும். 

 

தலைவர்கள்-சொல் திறம்-மகரந்தச் சேர்க்கை: 

சொல்திறம் கவிதை திருக்குறள் போல் எழுதிப் பார்க்கப் பட்டுள்ளது. மகரந்தச் சேர்க்கை கவிதையில் பெண் குழந்தையை அயல் மகரந்தச் சேர்க்கை என பிறந்தகம் நீங்குவதைச் சுட்டுவதாகவும், ஆண் குழந்தையை தன் மகரந்தச் சேர்க்கை என சொத்துக்களின் அதிபதியாக, வாரிசு என குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள முடிகிறது. பொது மகரந்தச் சேர்க்கையான குழந்தைமையை நாம் சிதைக்காமல் இருந்து விடுதலே சிறப்பாகும். மேலும் தலைவர்கள் குறித்து, 

“சுயமரியாதையைச் 

சுயமென உணர்த்திய 

சமத்துவக் கல்வெட்டு” (பக்:32) 

என வெண்தாடி மார்பில் வீழும் ஈரோட்டுப் பெரியாரை சிறப்புச் செய்கிறார். இதேபோல் இன்னுமொரு கவிதையில் 

“அம்பேத்கர்கள் 

தாழ்ந்த குலத்தில் பிறப்பதில்லை 

உயர்ந்த மனிதங்களில் 

பிறந்து கொண்டிருக்கிறார்கள்” (பக்:27) 

என சட்ட மாமேதையான அண்ணலை சிறப்புச் செய்கிறார். ஆயினும் தாழ்ந்த குலம் தாழ்த்தப்பட்ட, குலம் என்பவற்றுக்கு இடையேயான சொற்களின் பாரதூரங்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் இல்லையா?

தெற்கிலும், வடக்கிலும், பெண்ணுரிமை, தீண்டாமை, சமூக நீதி போன்றவற்றுக்காக போராடிய இரு துருவங்களைத் தன் கவிதைகளால் நன்றி பாராட்டுகிறார் கவிஞர். 

 

முடிவுரை: 

அகப்பை முகங்கள் ஒரு புதிய சொல்லாடல்தான். சோற்றுக் கரண்டி, குழம்புக் கரண்டி, பலகாரங்கள் எண்ணையில் பொரித்தெடுக்க பயன்படும் சல்லடைக் கரண்டி என அகப்பையில் பல வகையினங்கள் இருக்கின்றன. 

அன்பின் பெயரால், நம்பிக்கையின் பெயரால், உண்மையின் பெயரால் வேஷம் போட்டு கழுதறுப்புச் செய்யும் அல்லது முதுகில் குத்தும் கயமைகளை கொண்டவர்களின் முகமூடிகளிலும் பல வகையினங்கள் இருக்கின்றன. 

இந்த அகப்பை முகங்கள் நம்பிக்கையைச் சிதைத்துவிட்ட காதலர்களின் ஊடலோடும், மக்களின் வாக்கில் அரியணை ஏறிய ஆட்சியாளர்கள் சமூகத்தின் நம்பிக்கையைச் சிதைத்து விடும் செயலுக்கும் ஒப்பிடலாம். 

இப்படி அகத்தின் பையில் கிழிசல் ஏற்படா வண்ணம் இருக்க எச்சரிக்கை செய்வதாகவே ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தெறிப்பு சுட்டிச் செல்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?

இப்பிரதியில் விஞ்ஞானத்தின் மீதான நம்பிக்கையின்மை, நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கையின்மை என்பனவற்றை வாசிக்க முடிகிறது. இது பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்திய விளைவாகவே நான் பார்கிறேன். பலருக்கும் இக்காலம் விரக்தியான மனநிலைகளையே பரிசளித்துச் சென்றுள்ளது என்பதனை நாம் மறுப்பதற்கு இல்லை. அதேவேளை படைப்பாளர் என்பவர் சமூகத்திற்கு தன்னம்பிக்கை ஊட்டுபவராக இருக்க வேண்டுமே அல்லாமல் அவநம்பிக்கையை உருவாக்குபவராக மாறிவிடக் கூடாது என்பதை நினைவில் கொண்டு இன்னும் பல தொகுப்புகளை கொண்டு வாருங்கள்.


துணை நின்றோர்: 

  1. சோதிமிகு நவகவிதை, அப்துல் ரகுமான், நேசனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17
  2. முபீன் சாதிகா கட்டுரைகள், காவ்யா பதிப்பகம், சென்னை-24.
  3. கவிதையின் அரசியல், இந்திரன், அலைகள் வெளியீடு, சென்னை-24
  4. neelamegan.blogspot.com 
  5. தமிழ் விக்கிபீடியா 

 


 

நூல் விபரம்

நூல்: அகப்பை முகங்கள் 
ஆசிரியர் :   கார்த்திகா கவின் குமார்
வெளியீடு : MJ Publication House (கௌரா புத்தக மையம்)
வெளியான ஆண்டு : 2023
விலை: ₹ 100


 

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website