Getting your Trinity Audio player ready...
|
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உணர்வுகள் சார்ந்து குறிப்பிடலாம். காதல், வலி, மகிழ்ச்சி, ஆறுதல், அன்பு, அரசியல் நிலைப்பாட்டால் எதிர்கொள்ளும் துயரம், புலப்பெயர்வு உண்டாக்கும் காயங்கள் என நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது. உணர்வுகளை வெளிப்படுத்த மொழிகள் வேலிகளாக இருப்பதில்லை. அதற்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. மனித சமுத்திரத்தின் ததும்பும் அலைகளாக உணர்வுகள் உள்ளன. மொழி அதன் வடிகால் என்பதை உணர்த்துவதாக உள்ளது. மலர்விழியின் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பான ” அகாசிய மலர்கள்’.
எதுவொன்றும் தேர்வின் தன்மை பொறுத்தே அதன் பலம் வெளிப்படும். இத்தொகுப்பில் அவர் மொழிபெயர்ப்புக்காகத் தேர்வு கொண்டுள்ள கவிதைகளின் பாடுபொருள்கள் நமது சமகாலத்தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளதால் தொகுப்போடு ஒன்ற முடிகிறது.
எல்லா மொழிகளிலும் அன்பும், மனிதநேயமும் அடிப்படை ஆதாரமாக இருப்பதை இத்தொகுப்பின் கவிதைகளில் காணலாம். தனித்திருப்பு, வலி பிரதானமாக இருந்தபோதும் அதன் விடுவிப்புக்கான உணர்வை பிரதானப்படுத்தும் கவிதைகளும் உள்ளன.
நிழலையும் அந்தரத்தில் பறக்கச் செய்யும் பறவையின் பறத்தல் லயம் பற்றிய கவிதை நமக்கும். ஒரு விடுதலை உணர்வைத் தருவதாக உள்ளது.
ஒரு மனிதனின் கதை மூலம் உலகத்தாரின் கதை சொல்லும் நிக்கானோர் பர்ரா துயர்மிகு காலங்களில் மனிதர்கள் நம்மைக் கைவிடுவதில்லை என்பதை ‘கல்லறையில்…’ கவிதையில் காட்சிப்படுத்துகிறார்.
கல்லறையில்…
தாடியுடன் மதிக்கத்தக்கத் தோற்றமுடைய
ஒரு முதியவர்
கல்லறை முன் மயங்கி விழுகிறார்.
திடீரென ஒரு புருவம் திறவ
சுற்றியுள்ளவர்கள் உதவ முயற்சிக்கிறார்கள்.
ஒருவன் அவரின் நாடித் துடிப்பைச் சரிபார்க்க
ஒருவன் காகிதத்தால் விசிறுகின்றான்.
இன்னுமொரு உண்மை சுவாரசியமளிக்கக் கூடும்
ஒரு பெண் அவர் கன்னத்தில் முத்தமிடுகிறாள்.
பூக்கும் காலம், இலையுதிர் காலம் என நமக்குப் பருவங்கள் சில நினைவுகளைக் கொண்டு வரும். சில நினைவுகள் வலிகளைத் தரக்கூடியதாக இருப்பதைக் காட்டுகிறது ‘ அகாசியா மலர்கள்’
சிறு பறவை கசந்த விதைகொண்டு சிதைந்த நிலத்தில் விளைவித்த காதல் மரத்தின் நிழலில் ஆசுவாசமடையச் செய்கிற கவிதைகளும் தொகுப்பில் உண்டு.
பன்மொழி கவிதைகளை வாசிக்கும் சூழல் இது போன்ற தொகுப்புகள் வழிதான் நமக்குக் கிடைக்கக் கூடும். மலர்விழி மொழிபெயர்ப்பிலும் தனக்கான தனித்தன்மையோடு வெளிப்படுவார் என்பதை உணர்த்துவதாக உள்ளது ‘ அகாசியா மலர்கள்.
நூல்: அகாசியா மலர்கள் (பன்னாட்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
மொழிபெயர்ப்பு: : மலர்விழி
வெளியீடு : வலசை வெளியீடு
வெளியான ஆண்டு : 2024
விலை: ₹ 150
நூலைப் பெற தொடர்புக்கு : +91 96772 50213