மேரி வைத்திருந்த ஆட்டுக்குட்டி என்றொரு சிறார் காலப் பாட்டு உண்டு. அந்த ஆட்டுக்குட்டி மேரி செல்லும் இடமெல்லாம் பின்தொடரும். ஒருநாள் அவள் பள்ளிக்கும் சென்றுவிடும். அதற்கு விதிமுறைகள் தெரியாது, மேரியின் அன்பும் மேரிக்கான அன்பும் மட்டுமே தெரியும்.
‘நானே செம்மறி நானே தேவன்’ என்னும் கவிஞர் சுபியின் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் இப்படியான மறிக்குட்டிகளாக வாஞ்சையைப் பின்தொடர்கின்றன. இன்னும் கொஞ்சம் பேச, இன்னும் கொஞ்சம் நினைத்துக் கொள்ள, இன்னும் கொஞ்சம் அணைத்துக் கொள்ள, இன்னும் கொஞ்சம் எஞ்சும் சுவைக்குப் பிரியப்படுகிற மறிக்குட்டிகள்.
“இலக்கற்று உடைந்து போகும் நொடியைக்
கையில் வைத்துக்கொண்டு இருப்பவனை
பார்த்துச் சிரிக்கிறார்கள்”
என்பது வரை கணுக்கால் மட்டும் நனைக்கும் சிற்றலை,
“அவனும் பதிலுக்குச் சிரிக்கிறான்” என்று முடிக்கும்போது சட்டென்று எழுந்து தலை வரை மூழ்கடிக்கிறது. திணறும் முகத்தில் எஞ்சுவது யார் புன்னகையோ?
இந்தக் கவிதைகளுக்கு உலகை வெல்லும் ஆசையில்லை, எதையும் ஆளும் வேட்கையில்லை.. உச்சபட்ச லட்சியமே
‘யாரும் பறிக்காது மரத்தில் இருந்து
அதுவாக விடுபட்டுவிடும் மலராக’
வன்முறை இல்லாமல் ஒரு பிரிவை நிகழவிடுவதுதான்!
நினைவேக்கம், அதுசார்ந்த பரிசுப்பொருட்கள், பிரிவு, மறுக்கப்பட்ட புன்னகைகள், நசுக்கப்பட்ட சொற்கள், குறைவற்று கிடைக்கும் ஏளனம் என்று துயரின் அத்தனை கண்ணிகளும் கோர்க்கப்பட்டுள்ள கவிதைகள் இந்தத் தொகுப்பில் தொடர்ந்து வாசிக்கக் கிடைக்கின்றன. போலவே, துயருக்கு வளையாத மனங்கள், பற்றிக்கொள்ளக் கிடைக்கும் அகம், துயருக்குப் பழகிய வாழ்வு, துயருக்கென்றே பழகிய சிரிப்பு என்று அடுத்தடுத்த கண்ணிகளும் அமைந்து வருகின்றன. ஒரு கவிதை இப்படி முடிகிறது:
“துயரத்திற்கு முதுகு மட்டும்தான் இருக்கிறது
வசதியாக ஏறி பவனி வர.”
புதிதாகப் புழக்கத்துக்கு வந்திருக்கும் சில சொற்களை உருவாக்கியிருக்கும் புதுக் கூட்டத்துக்கு, அவை சுட்டும் பழைய உணர்வுகள் கேலிக்குரியவைதான். ஆனால் ‘க்ரிஞ்சாக’ அன்பின் அதீதங்களைச் சுமந்து திரியும் ‘பூமர்’களால் அவற்றைக் கைவிட முடிவதில்லை. அந்த மனம் மரணச்செய்தி கேட்டதும் அனிச்சையாய் தான் ஈடுபடும் காரியங்களைக் கண்டு தானே அயர்ந்து போகிறது. மீதமிருக்கும் பாலுக்கும் சில்லிட்ட மாவுக்கும் ஒரு வழி செய்தபின்னர்தான் துயரம் கூட முழுமையாக அணுகும் என்பதை
“இவ்வளவு நிதர்சனமாயிருக்க வேண்டாம்
இந்த வாழ்வு”
என்று சொல்கிறது.
பால்யகாலத் தோழிகள் இருவருக்கு ஒரே நாளில் திருமணம் அமைந்து, ஒருத்தியை ஒருத்தி வாழ்த்திக்கொள்ளவும் விடாத வாழ்வு சொல்லப்பட்டிருக்கிறது ஒரு கவிதையில். காலநேரக் கணக்கெடுப்புகளில் அவர்களின் இந்தக் கவலை நிச்சயம் சபையேறாது, ‘ஃபாரெவர்’ என்று, உனக்காக என்றுமிருப்பேன் என்று சொல்லிக்கொண்ட வாக்குறுதிகள் அப்போதே பொடிபடுகின்றன. எத்தனை ஆண்டுகள் என்று பிள்ளைகளின் வயதைக் கொண்டு கணக்கிட்ட கையோடு, வாட்ஸாப்பில் வருகிறது அப்படி ஒரு பழைய கல்யாணப் பத்திரிகையின் புகைப்படம். ‘க்ரிஞ்சும் பூமருமாக’ இருவரும் கதைக்கத் தொடங்கும் வேறொரு அத்தியாயம் இப்படியாக ஆரம்பிக்கிறது. அப்படி இருவரைப் படர்க்கையில் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. இந்தக் கவிதையை வாசிக்கும் யாருக்கும் இப்படிச் சில முகங்களை, சில மறிக்குட்டிகளை நிச்சயம் நினைத்துக்கொள்ளத் தோன்றும்.
அம்மாவும் அப்பத்தாவும் உலவும் கவிதைகளில் வரும் அமிர்தாஞ்சன் டப்பாவுக்கும், ‘எதுக்காச்சும்’ உதவும் என்று பத்திரப்படுத்தப்படும் பழஞ்சீலைக் கிழிசல்களுக்கும் குறைவற்ற வாஞ்சையை அருளத் தெரிகிறது. “மக்களைப் பெற்ற மகராசிக்கு சில வீடுகள் பல இடிபாடுகள்” என்ற சொற்களைத் தாண்டும் முன்னர் எத்தனை மகராசிகளின், எத்தனை இடிபாடுகளின் முகங்கள் எழுந்து எழுந்து அமைகின்றன!
உத்தரத்து உறிப்பானை நிழலுக்கு அஞ்சிய பால்யம், சுற்றிச் சுற்றி விளையாடிய தூண்கள், சண்டையிட்ட திண்ணை, காபி அருந்தும் முற்றம் என்று எல்லாமே தன்னுடையதான வீட்டில்,
“இந்த அறையில் இதை எல்லாம்
நாங்கள் வைத்துக்கொள்ளலாமா”
என்று கேட்கவேண்டி வரும் துயரத்தை சுபியால மிகத் துல்லியமாகச் சொல்ல முடிகிறது, வாசிக்கையில் அந்த அவஸ்தையை, அது அவஸ்தைதான் என்று சொல்லக்கூட முடியாத திணறலை நன்றாக உணர்ந்துகொள்ளவும் முடிகிறது.
கவிதைகளை வாசித்து முடிக்கையில், ‘தேவ, இந்த மறிக்குட்டிகளுக்கு இன்னும் கொஞ்சம் கருணை காட்டுங்கள், நிதர்சனத்திலிருந்து, வறட்டுப் புன்னகையிலிருந்து இவற்றைக் காபந்து செய்து, இவை எப்போதும் பின்தொடரும் வாஞ்சையை தாராளமாக அருளுங்கள்’ என்று இறைஞ்சத் தோன்றுகிறது. சுபியின் மறிக்குட்டிகள் துள்ளித் திரியும் காலம் கைகூடட்டும், ஆமென்!
நூல்: நானே செம்மறி நானே தேவன்
ஆசிரியர் : சுபி
வெளியீடு : தமிழ்வெளி
வெளியான ஆண்டு : டிசம்பர் -2023
விலை: ₹ 100
நூலைப் பெற “ +91 90 9400 5600