என் ஆன்மா
வானுக்கும் கடலுக்குமாய் அலைவுறுகிறது.
வானெங்கும் என் ஆன்மா இசைக்கும் உன் பெயரை,
பகலில் மேகமாகவும்,
இரவில் விண்மீனாகவும்
வானம் கண் சிமிட்டுகிறது.
வழியெங்கும் தாமிர நிற அரசிலைகளில்
உன் பெயரைத்தான் எழுதி வந்தேன்.
எழுத்தற்ற ஓர் உற்சவ இசையாய் இலையும் காற்றும் கூடி
உன் பெயரை இசைக்கிறது.
நீரலையென உன் பெயரை ரகசியமாய்
வேர்களெங்கும் முணுமுணுத்து வந்தேன்,
கிளைகள் தோறும்
தேன்சிந்தும் மலரென உன்பெயரைப் பூக்கிறது.
அன்பே ! ரகசியா!
மேகம் மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் பெயரின் நறுமணம் வீசுகிறது.
நறுமணத்தில் நனைந்த பறவையொன்று
உன் பெயரைக் கதகதப்பிற்குக் கூட்டில் வைக்க
உன் பெயரே பறவைகளின் மொழியாகிறது.
கடலின் அலைகள் உன் பெயரைச்
சலங்கையெனப் பூட்டிக்கொண்டு
ஆர்ப்பரிக்கும் நடன அசைவுகளில்
உன் பெயர் மிளிர்கிறது.
என்னைப் போலவே உன் பெயரைக்
கடலும் பத்திரப்படுத்துகிறது ஒரு சிப்பிக்குள்…
சிப்பி பலவண்ண நிறத்தில் ஒய்யாரமாய்
உன் பெயரை மினுங்குகிறது.
யாரின் பெயர் என்கிறார்கள்?
ரகசியா என்பது
நம்மிருவருக்கும் இடையிலான
ரகசிய பெயர் என்பதால் மரமென்றேன்.
ஏளனமாய்
ஞானம் தேடுகிறாயா என்கிறார்கள்?
ரகசியா !
போகட்டும் விடு மரம் என்பதே ஞானம்தானே!
வேராய் நீயிருக்க…
வேறென்ன வேண்டுமெனக்கு.
வருவேன் விரைவில்
உனக்கான புனித முத்தமொன்றோடு.!
Art Courtesy : deviantart.com