cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

தினேஷ் பாரதி கவிதைகள்


ஷிவானி குட்டியும் பன்றிக் குட்டிகளும்…

ஸ்டேட் பாங்க் காலனியின்
முதல் தளத்தில் வசிக்கும்
கூட்டுக் குடும்பமொன்றின்
சந்தோஷ கிளியாய்
வாழ்ந்து வருகிறாள்
ஷிவானி குட்டி.

அந்த வீட்டின் அருகாமையில்
வளர்ந்திருக்கும்
சீமைக்கருவேல
மரங்களின் மறைவில்
வசித்து வருகின்றன
பன்றிக் குட்டிகள்.

நிலாவைக் காட்டி
சோறூட்டுவதற்குப் பதிலாகத்
தேங்கிய தண்ணீரில்
பன்றிக்குட்டிகள் குதூகலமாய்
குளிப்பதைக் காட்டி
சோறூட்டுவாள் அவளம்மை.

சோறு உண்டபடியே
சித்தி மொபைலின்
வாட்ஸ்-அப் வீடியோக்களை
பார்த்துக் கொண்டிருப்பவள்
“குடிக்கலன்னா செத்துருவேன் சார்”
என்ற டயலாக்கிற்கு இடையே
ஒலிவரும் வடிவேலுவின்
“சேகர் செத்திருவான் சார்”
என்கிற டயலாக்கை
தன் மொழியில்
சொல்லிச் சொல்லிச்
சிரித்து மகிழ்வாள்.

அவளம்மை பார்க்காத நேரம்
பால்கனி வழியாக
எச்சில் சோற்றைக் கீழே துப்பி
பன்றிக் குட்டிகள் சண்டையிட்டு
உண்பதைச் சுட்டிக் காட்டி
“அம்மா இஞ்ச பாரு பன்னிகுட்டிய…”
எனக் கெக்களித்துச் சிரிப்பாள்.

அடம்பிடித்தலின் போது
அவளம்மை அடிக்கும் போதும்
மாமனோடு விளையாடும்போது
முட்டியில் அடிபடும் போதும்
அவளின் ஆச்சி
நெஞ்சில் அணைத்தபடி
அவள் அழுகையை நிறுத்த
பால்கனி வழியாகக் காட்டுவாள்
பன்றிக் குட்டிகளின்
மகிழ்ச்சியான சண்டைகளை….


பேரன்பின் சாளரம்

உன்னை நினைக்குந்தோறும்
இருதயம் இனிக்கிறது.
உன்னை நினையாத
நொடிப்பொழுதில்
இருதயச் சுவர்களில்
நகக்கீறல் வலி.
உந்தன் விழிகளின்
ஞாபக ஒளியால்
காயம் ஆற்றுகிறேன்.
பேரன்பின் நிழல்
தேடி அலைந்து
வந்தடைகிறேன்
உன் வாசலுக்கு.
எப்போது திறப்பாய்
அன்பே சாளரம்.


சொல்லப்படாத காதலொன்று.

உன்னிடம்
சொல்லப்படாத காதலொன்று
இன்னும் பத்திரமாய்
இருக்கிறது என்னிடம்.

உன் கொலுசொலியின்
அலாரங்களால்
விடியல் உணர்ந்த
காலைப் பொழுதுகள்.

உன் கண்கள் வழி
கொஞ்சம் உயிர் வாங்கிடக்
கால்கடுக்கக் காத்திருந்த
தெருமுனை வீதிகள்.

உன் தோழிகளோடு
திருவிழா காலங்களில்
சேலை கட்டி நீ சென்ற
தெய்வீக கணங்கள்.

ஊர் பொதுக்கிணற்றில்
நீ குளிக்கையில்
எதேச்சையாய்
உன் நெஞ்சம் பார்த்த
மஞ்சள் நினைவுகள்.

வார்த்தைகளைச் சேகரித்து வந்து
உன்னிடம் என் காதலை
ஒப்புவிக்க முயல
விழி அம்புகளால்
மொழி உடைத்த
மௌனப் பொழுதுகள்.

என என் இருதய அறையின்
அடி ஆழத்தினுள்
பத்திரமாய் இருக்கிறது
உன்னிடம்
சொல்லப்படாத காதலொன்று…


 

About the author

தினேஷ் பாரதி

தினேஷ் பாரதி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website