cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

அவளும் நீயும்


வளின் முதல் அறிமுகத்தை
கண்களில் ஒளிசூடி விவரித்தாய்.
அவளை எங்கெல்லாம்
கூட்டிச்சென்றாய் என்றும்,
அவள் உனக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டு வந்தாள் என்பதையும்
ப்ரியத்தின் வேரில் நின்று
சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

நீ அவளை எப்படியெல்லாம்
காதலித்தாய்.. காதலிக்கிறாய் என
என் மீதான
உன் காதலை வைத்து
நானே புரிந்துகொள்கிறேன்.

காற்று கலைத்துபோடும்
கோலத்தின் வண்ணங்களை போல
சிலவேளைகளில், உங்கள் இருவருக்குமிடையில்
ஊடல் உண்டாகி இருக்கலாம்.

உனது ஏதோவொரு அவமானத்தை
அவள் குத்திக்காட்டாமல் இருந்திருக்கலாம்,
உனது தனிப்பட்ட தோல்வியின் கோபத்தை
நீ அவள்மீது காட்டாமல் இருந்திருக்கலாம்.

ஊடலை பலூனாக்கி
ஊதி ஊதி தூர தள்ளுவதற்கு பதில்
எரிதழலாக்கி
நீங்கள் இருவரும் எரியாமல் இருந்திருக்கலாம்.

உன்னோடு இருக்கும் பல சமயங்களில்
நிரம்பி வழியும் உனது அன்பை
எங்கே நிரப்புவது என்று தெரியாமல்
மலைத்து மயங்கிச் சரிகிறேன்.
விழிக்கும்போதெல்லாம் தவறாமல்
அவள் நினைவுக்கு வருகிறாள்.

எனக்கு தோன்றுகிறது..
ஒருவேளை,
நான் உன்னைப்போலவே அவளுக்கும்
உற்ற தோழியாக இருந்திருந்தால்,
உன்மீது அவள் கோபம் கொள்ளும்போது
அதை குறைத்திருக்கலாம்.
அவளுக்கும் உனக்குமான
இடைவெளியை இல்லாமல் செய்திருக்கலாம்.
யாருமில்லாமல் அவள் தனித்து அழும் நாட்களில்
அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கலாம்.

அதனால்
நீங்கள் இருவரும் இன்னும் முழுமையாய்
ஒருவரை ஒருவர் காதலித்திருக்கலாம்..
அதனால்
நீ இன்னும் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம்..
அதனால்
நீ காயங்களின் வடுக்களை தடவி பார்க்காமல்
தினமும் தூங்கச் சென்றிருக்கலாம்..

எல்லா ‘லாமும்’ நடந்திருந்தால்
நீ மகிழ்ச்சியாய் இருந்திருப்பாய். – நிச்சயம்
என்னை தேடி வந்திருக்க மாட்டாய்.
தெரியும்.. !
ஆனாலும்,
நீ என்னுடன் இருப்பதைவிட
மகிழ்ச்சியாய் இருப்பதே எனக்கு பிரதானம்.

அன்பே ,
இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு
காதல் எனப் பெயர் சூட்டுவதே
எனக்கு உவப்பாயிருக்கிறது.


 

Arts Courtesy :  

Feature Image : DeviantArt

Inside :  Laila

About the author

வித்யா.மு

வித்யா.மு

Subscribe
Notify of
guest
4 Comments
Inline Feedbacks
View all comments
அன்பழகன் ராஜா

அற்புதமான குரல். சினிமாவிற்கு பின்னணி குரல் கொடுக்கலாம் . கவிதை வெகு அழகுங்க

மனோகரன்

அற்புதமாக இருக்கிறது. வித்யா அவர்களுக்கு பாராட்டுக்கள். எழுதியவரின் குரலிலே கவிதை கேட்க வைப்பது புதிய முயற்சி. தொடரட்டும் நுட்பம் இதழாசிரியரே.

Kingsley davadass

Poetry does something intuitive. mesmerism voice. is she a well-known poet or not?

ரூபன்

படிக்கும் போது சர்வ சாதாரண கவிதை போல இருந்தது. ஒலி வடிவத்தில் கேட்டால் நல்லதொரு கவிதையாக இருக்கிறது. வாழ்த்துகள்

You cannot copy content of this Website