cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

பிரபுசங்கர் கவிதைகள்


1) துரத்தும் குற்றவுணர்வு

 

சாலையின் குறுக்கே

திடீரென ஓடிவந்த நாய்க்குட்டி மேல்

எத்தனை முயன்றும்

தவிர்க்க முடியாமல்

மகிழுந்தை ஏற்றி விடுகிறேன்

உள்ளேயிருக்கும் மகன்கள்

வாகனத்தை நிறுத்துமாறு

கூக்குரலிகிறார்கள்

விழுந்து கிடக்கும் குட்டிக்கு அருகே

அழுகையினூடே குரைத்துக் கொண்டிருக்கும்

தாய் நாயின் கண்களைச் சந்திக்க முடியாமல்

மீண்டும் வேகமெடுக்கிறேன்

மௌனம் நிறைந்திருக்கும் மகிழுந்தை

நான்கு கால் பாய்ச்சலில்

துரத்தி வருகிறது

அத்தனை சீக்கிரம் விடுபடமுடியாத

“குற்றவுணர்வு”

 

2) காற்றின் இசை

இரவு பெய்த மழையில் வந்த

சிறு வெள்ளம்

ஒரு பழைய டி.டி.கே ஆடியோ கேசட்டொன்றை

அடித்து வந்திருக்கிறது

முற்றிலும் டிஜிட்டலாக

மாறிவிட்ட இன்றைய உலகத்தில்

யார் இன்னமும்

அந்த கேசட்டை கேட்டுக் கொண்டிருப்பார்கள்??

நகக்கண் அளவிருக்கும்

சிறிய மெமரி கார்டில்

ஆயிரம் பாடல்களைச் சேமிக்கும் காலத்தில்

பன்னிரண்டு பாடல்களுக்காக

இத்தனை காலம் யார் அதைப்

பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்??

பாடல் கேட்கும் டேப் ரிக்கார்டர்

பழுதானால் யார் அதைச்

சரி செய்து தருவார்கள்??

மனதில் தோன்றும்

இத்தனை கேள்விகளை

மௌனமாக உள்வாங்கியபடி

அந்த ஆடியோ கேசட்

காற்றில் இசைக்கத் தொடங்க

சரியான தாள லயத்தில்

பின்னணி இசையைச் சேர்க்கிறது

கோடை மழை……

 

3) கயலின் மனது

 

மிக அழகான செதில்கள்

தத்ரூபமான கண்கள்

மனதைப் பறிக்கும் வண்ணங்களென

அரைமணியில் தங்கமீனை

வரைந்துவிட்டு

தொட்டி வரைவதா??

இல்லை

கடல் செய்வதா??

என மகனிடம்

ஐயம் கேட்கிறேன்

“அதையேன் என்னிடம் கேட்கிறாய்

மீனிடம் அல்லவா கேட்க வேண்டும்??”

சட்டென வந்து விழும்

அவனின் பதிலைக் கேட்டு

கடல் வேண்டுமென

உதடுகளைக் குவிக்கிறது

உயிர் துளிர்த்த கயல்…..

 

4) இளைப்பாற மறந்த உலகம்

பளபளவென்று போடப்பட்டிருக்கும்

தேசிய நெடுஞ்சாலையிலிருந்து

பிரிந்து செல்லும்

அந்த கிராமத்து சாலையில்

சரியாக பதினோரு வருடங்களுக்கு பிறகு

நுழைகிறேன்

அப்போது பார்த்த

அதே குண்டும் குழியுமான சாலை

அதே பழைய வீடுகள்

அதே மிதிவண்டிகள்

கொஞ்சம் வயதான

அதே சமயம் வாஞ்சை குறையாத

வெள்ளந்தி மனிதர்கள்

இப்போது போல அப்போதும்

ஒரு இறப்புக்கு தான் சென்றிருந்தேன்

அரை மைல் உள்ளிருக்கும்

கிராமத்திற்குள் நுழைய

யாராவது ஒருவர் இறக்க வேண்டியிருக்கிறது

பரபரப்புகளின் மத்தியில்

இப்படித்தான் இளைப்பாறும் நிழலை

மறந்து போயிருக்கிறோம்…..

 

5) மது வாசம்

ஞாயிறு விடுமுறைக்குப் பின்

திறக்கப்பட்ட பள்ளிக்கூடத்தின்

விளையாட்டு மைதானம் முழுக்க

நிரம்பிக் கிடக்கின்றன

போதையின் உச்சத்தில்

உடைத்து எறியப்பட்ட

மது போத்தல்களின் சீஸாக்கள்

கவனிக்காமல் ஓடிச்சென்று

காலை கிழித்துக்கொண்ட

சீருடை அணிந்த தெய்வங்களின் பாதங்களிலிருந்து

குபுக்கென்று வெளியேறுகிறது செங்குருதி

வழிந்த செங்குருதியைத்

துடைத்த பஞ்சை

முகர்ந்து பார்க்கையில் வீசுகிறது

சர்க்கார் நடத்தும்

டாஸ்மாக்கின் துர்நாற்றம்….

 

 

About the author

பிரபு சங்கர்

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
M. M. Bysel

படிப்பதற்கு சுகமாகவும் நுட்பமாக இருக்கிறது கவிஞருக்கு நன்றி

You cannot copy content of this Website