அறையினுள் நுழைந்ததுமே
உள்ளுணர்வு
அரிக்கத் தொடங்கிவிட்டது
சிகை கலைந்து
மீப்பெரும் சோர்வுடன்
கண்களால் ஏற்பட்ட கீறல்களை
மறைக்க முனைந்து தோற்று
முகம் சிவந்து
நான் எப்போது வருவேனெனக் காத்திருந்து
மேசையின் இழுப்பறையைத்
திறந்ததுமே வலுவின்றி
என் கால்களைக் கட்டிக் கொண்டு
கதறத் துவங்கியது
என் டைரி.
பூக்காடென மண்டியிருக்கிறது ஊதாப்பூச்செடி
அதில் கம்பளமாய்
போர்த்தியிருக்கிறது
ஊதாப்பூக்கள்
ஒவ்வொரு பூவைக் கொய்யும்போதும்
அதன் காம்புப் பகுதியில்
தேனருந்துகிறாள்
தித்திப்பு சன்னமான தேனை
சுவையரும்புகளில் படரவிட்டு
களிக்கிறாள்
புல்லிவட்டத்தின் சிலாம்பு குத்துவதைப் புறந்தள்ளி
அவளின் தேனருந்தும் ஆவலைப் புரிந்ததுபோல
இன்னுமின்னும் சுரந்துகொண்டிருக்கிறது
ஊதாப்பூ.
உதடுகளை அகல விரித்து எல்லாரிடத்தும்
சிரித்து வைக்கிறேன்
யாவரும் வன்மம் கொள்ளுமளவு
வாழ்வைக் கொண்டாடிக் களிக்கிறேன்
காதலில் இன்புற்றுத் திளைப்பதாய்
பிறர் பொருமுமாறு
கவிதை புனைகிறேன்
உள்ளிலொரு சிறுமி
பச்சாதாபத்துடன்
என் கண்வழி
தப்பித்திடத் துடிக்கிறாள்.
சடலத்தின் பக்கச் சுவரில்
ஓய்ந்திருப்பவளின்
ஓங்கரித்த ஓலத்தை
மீண்டும் பற்றவைப்பதாய்
உன் வருகை.