cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

ஹேமா கவிதைகள்

ஹேமா
Written by ஹேமா

  • பால்வெளித் துகள்கள்

அகண்ட அண்டத்திலிருந்து
குவிந்து விழும்
ஒரு நீலச்சொட்டு
பூமி

நீலக்கடலின்
தலைபிளந்து ஓடும்
பழுப்பு நிலம்

இருபத்து நான்கு மணியின்
கனம் தாளாமல்
நொடிகளாய்த் திரிந்து
விழும் நாள்

அதன் காற்கடையில் பூத்த
இரவின் அடர்த்தியில்
முயங்கிச் சுழல்கிறது பூமி.

  • போதி

யசோதரை இருக்கும் துணிவில்
பொறுப்பு துறந்து
போதிமரம் தேடுகிறான் புத்தன்
அவன் விட்டுச் செல்லும்
வெற்றிடமே போதியாகிறது
யசோதரைக்கு.

  • பறத்தல்

எல்லையற்ற நீலவெளியில்
நீள்கால்களை யொடுக்கி
வெண்சிறகை விரித்துச்
சல்லென்று பறக்கிறது கொக்கு,
அது பறக்கிறதென்பதைத் தவிர்த்து
சொல்வதற்கு ஒன்றுமில்லை.


 

About the author

ஹேமா

ஹேமா

சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது முதல் புத்தகமான ‘வாழைமர நோட்டு’, சிங்கப்பூர் இலக்கிய பரிசு 2020, படைப்பு இலக்கிய விருது, திருப்பூர் சக்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் கவிதைகள், தங்கமுனை விருது, சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி, படைப்பு.காம் நடத்திய மகளிருக்கான சர்வதேசக் கவிதைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது கதைகள் கணையாழி, கல்கி, சிராங்கூன் டைம்ஸ், தமிழ் முரசு, கனலி, வல்லினம், அரூ, திண்ணை, மலைகள்.காம் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website