சிவந்து கிடக்கிறது
நந்தி கடலின் நீலத்தண்ணீர்
முகமிழந்து கிடக்கும்
சிதைந்த உடலங்களில்
சீழாய் வடிகிறது
பேரினவாதம்
முலை சிதைந்த
வறண்ட மார்பில்
பால் தேடியழும்
பிஞ்சொன்றின் ஓலம்
காதேறாமல்
அசைவற்று கிடக்கிறது
தாயின் பிணம்
வன்புணர்ந்து வீசப்பட்ட
நிர்வாண உடலங்கள்
கடந்து வருகையில்
வறண்டு போன
கண்ணீர் சுரப்பிகளில்
பிசுபிசுக்கிறது
இயலாமையின் ஆறா வடு
வெறியேறிய சிரிப்பொலிகள் தாண்டி
காப்பாற்றக் கோரியெழும்
பெண் குரல் கேட்டும்
நிற்காமல் நடக்கின்றன
வலுவிழந்த பாதங்கள்
நீண்ட வரிசையொன்றில்
வாங்கி கொண்ட
உப்புக்கஞ்சிக்குள்
தெறித்து விழுந்த
மனித இரத்தத்தால்
பட்டினியைத் தின்று
பசியாறிக் கொள்கிறோம்
எந்த பிணத்துக்கு
ஒப்பாரி வைப்பதென்று
ஓங்கியழுத தாயொருத்தியின் சாபத்தின் தீ
காலி முகத்திடலில்
கொழுந்து விட்டு எரிய
முள்ளி வாய்க்காலின் மேகங்கள்
சோகமாய் அழுத மழையின் துளிகளில்
வற்றாமல் இருந்தது
மானுட நேசம்.
Art Courtesy : saatchiart.com