சடைவிரித்தாடும்
இச்சுடலை மாடன்
எப்போதாவது தான்
மாறுவேடத்தில்
நகர்வலம் வருகிறான்
ஒருமுறை கால்களற்ற
சாலையோரத்து முதியவராக
வந்தவன் புன்னகைத்ததில்
இந்நகரத்தின் மேல் மேகம் பூத்தது
மற்றுமொருமுறை
கூளம் பொறுக்கும்
சிறுவனாக
வந்தவனின் பசித்த
கண்கள் பாதி நிரம்பியதில்
‘ஒலி’மின்னல் வெட்டியது
முன்னிரவில் சேலை கட்டி
வீதியில் வந்தவனின்
கரங்கள் தட்டிய
கரகரத்த குரலில்
பெய்த மழையில் தான்
இன்னும் நனைந்து கொண்டிருக்கிறது
இந்நகரம்.
வீடுகள் கட்டப்பட்டது கட்டப்பட்டதாகவே
புடைத்து நிற்கின்றன காலத்திற்கும்
வருவதும் போவதுமாகச் சந்தடி தரும்
மனிதக் காலடிகளுக்குக் கதவுகள்
எப்போதும்
திறந்தேதான் கிடக்கின்றன.
எவ்வளவு தட்டியும்
திறந்துகொள்ளாதது மனம் மட்டும்தான்.
தாத்தா ஊரிலிருந்து மஞ்சள் நிறப் பைக்குள்
அடைத்துக் கொண்டு வரும் புளித்த
கிளிமூக்கு மாங்காய்கள் பெரும்பாலும் இனிக்கவே செய்தன..
தாத்தா மாங்காய்கள் கிடைக்காத சமயங்களில்
அதே நிறத்தில் கிளிகளைப் பிடித்து வந்து
புழுதியற்ற நகரச் சாலைகளில் பறக்கவிடுவார்.
தாத்தா சில நேரங்களில்
கிளியும் இல்லாமல் மாங்காய்களும் இல்லாமல்
வெறும் பச்சை நிறத்தைப் பொட்டலம் கட்டி வந்து
மாடியில் தெளித்து விடுவார்..
மாங்காய்களும் கிளிகளும் பச்சைகளும்
தாத்தாவைத் தேடிப் புறப்பட்ட நாளில்
தாத்தா மேகங்களுக்குப் பச்சை அடித்துக்கொண்டு இருந்தார்..
குழந்தைகளின் மிதிவண்டிகள்
அவர்களோடே வளர்கின்றன
விதவிதமான வடிவங்களில்
தேவைக்கேற்ற அளவுகளில்
வண்ண வண்ணப் பூச்சுகளில்
மிதிவண்டிகள் எப்போதாவது
மோட்டார் பைக்காகவோ
மகிழுந்தாகவோ மாறும் வரை
பின்னிருக்கையில் தாராளமாக
இடம் இருக்கிறது பெற்றோருக்கு.
Art Courtesy : Artist Sivabalan