ஒரு ஆம்புலன்ஸ் கடந்த
அடுத்த நிமிடம்
பாதியில் விட்ட
இனிப்பைச் சுவைக்கத்
துணியாத நான்,
இறுதி ஊர்வலத்தின் எச்சமாய்
மலர்கள் நசுங்கிய சாலையைக்
கடக்க முற்படும் போதும்
முணுமுணுத்த பாடலை
தொடரத் துணியாத நான்,
இறந்த நட்பின், உறவின்
எண்ணைக் கைப்பேசியில்
அழிக்கத்துணியாத நான்,
தலைப்பு செய்தியோடு
உணவருந்திப்பழகி பின்
சிறுமி பாலியல் வன்கொடுமை
லாக் ஆப் மரணங்கள் எனக் கடந்து
இதோ விளைவித்தவர்கள்
தடியடிப்படுகிறார்கள்
விளைந்ததைக்
கவளம் கவளமாய் உருட்டி
மனசாட்சியின் குரலையும்
சேர்த்து விழுங்குகிறேன்.
மைதிலி கஸ்தூரிரெங்கன்
புதுக்கோட்டை
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் மக்களுக்கு எதிரான கொடுமைகள் மனித மனத்தின் இயல்பான இரக்க உணர்வை எப்படி மரத்துப் போகச் செய்கின்றன என்பதை வலிக்கும்படி சொல்லியிருக்கிறார் கவிஞர்! இப்படித் தரமான கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட நுட்பத்தை வேண்டுகிறேன்!