சமாதானங்களைச்
சொல்லிக்கொண்ட பின்
ஏற்புடைய மனதுக்கு
பாரத்தைக் கழற்றி
வைக்கத் தான் ஆசை
கொஞ்சம் வலி அல்ல அது
துரோகத்தின் சாம்பலைக்
கரைத்துப் பூசி பின்னொரு
கிண்ணத்தில் எனக்குப்
பசியாற்றிப் போனாய்.
நலிவுற்ற தினங்களின்
நலம் நாடுதலின் தொழுகைக்கு
உன் கரம் பற்றியிருந்த நாட்கள்
நினைவில் உண்டு இப்பொழுதும்
நான் பசியோடு இருக்கிறேன்
செமித்து உண்ணும் சர்ப்பம் ஒன்று
என்னை நோக்கி வருகையில்
அதன் பசிக்கு இரையாகும் நோவு
அறிவாயா நீ
உன் நினைவுகளால்
சூல் கொண்ட மனதினை
எப்படிக் காத்துக் கொள்வது?
முன்னேறும் அந்த அரவத்தின் கண்களில்
இரக்கத்தை எப்படித் தேடுவது?
என நகர முடியாத சூழலில்
எனை நிறுத்தியிருப்பது அது
நான் கொண்ட பற்றின்
வேரறுத்த நிலை
உன் பிம்பம் உடைத்து நீ
காட்டிய உன் சுயதரிசனம்.
ஒரு பிரார்த்தனைகூட
நீள் வரிசையில் அமர மறுத்து
எதிர் தெரியும் சோதி
உனை காணும் வரிசைக்கான
கால்கள் எனது
நாள்பட்ட தவம் கலைத்து
அருகில் இருக்கும் ஒரு குவளை
நீரன்பு பருகி முடித்து விடு
உன் மௌனத்தைச் சேகரித்துச்
சுமந்த குறிஞ்சித்தேன் என
அரிதாய் உன் முன்னே பார்வைக்குப்
பூத்திருக்கும் மலைக்காட்டுப்
பிரிய அருவிகளில் மீன்களின் உறக்கம்
கலையாதொரு நாழிகை உண்டு
அந்த தேவநேரம் எனக்கு
போதுமானதாய் தந்து விடு
துருவ நட்சத்திரம் ஒன்று
பூரண நிலவொளியில்
கீழிறங்கும் போது
ரகசியமாய் கேட்ட வேண்டுதல் பலிதம்
உனக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது
உன் அண்மையில்
எனதான தருணத்தில்
எவருக்கும் கேட்காத
ஒரு சொட்டுக் கண்ணீரின்
ஆனந்த தொடுகையில்
அதை உணர்த்திப் போவேன்
நீ அறியாத உன் மீதான
என் அன்பென்பது
வெறும் வெள்ளைக் காகித அளவிடுதலில்
அல்லவே அல்ல.
உமா மஹேஸ்வரி பால்ராஜ்.
Art Courtesy : dribbble.com