காற்றில்
மிதந்த சட்டையின்
தொளதொளப்புக்கள்
அவரை விட்டுவந்த
திசை நோக்கியே
பறந்தன
அவ்வடர்ந்த குடிலில்
கோழிகளின் இரைச்சல் மத்தியில்
அரித்துவரும்
இரும்புக் கட்டிலில்
ஆஸ்பெட்டாஸ் கூரையின் கீழ்
என் வரவுக்காக
அவர் காத்திருப்பதையே
பார்க்கிறேன்
எதிரே வரும்
லாரிகள்
பேருந்துகள்
கார்கள் என
அனைத்தின் கண்ணாடியிலும்
அவர் பீடி பிடிக்கும்
காட்சியே விரிகிறது
அதன்
காந்த நெடி
என் நாசியில்
என்றும் போலன்றி
சுகந்த வாசனையாய்
நிறைகிறது
முதன்முறை மார்பில்
பசியிருப்பதாய் உணர்கிறேன்
சுணங்கி அது விம்மிச் சரிவதில்
தாகமும் சேர்ந்துகொள்ள
இன்னும் ஓரடி
இன்னும் ஓரடி என
அறைக்குள்
அழுதிட விரைகிறேன்
என்
சக்கரங்கள்
எப்போதோ நின்றுவிட்டதை
அறியாமல்.
Courtesy : Painting By Indian Artist Rajkumar Sthabathy