- மீட்சி
ஞாபகங்களின் குளத்தில்
கல்லெறிவது
அவனுக்கு உவப்பானதாயிருக்கிறது
ஒரு
சின்ன மீட்டலில்
சேர்ந்து விடும் சுதி போல
பெரும் தித்திப்பு அது
அவனுக்கிருக்கும் பேரச்சம்
உங்களை
உங்கள்
அற்பத்தனங்களை
பூரிப்படைய வைக்கிறது
பிரயோகித்தும் தீராத
மாளாத வேட்கையை…
செய்து கொண்டேயிருக்கிறீர்கள்
நான்
சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம்
அவனிடம்
உங்களிடம்
சொல்லாததன்றி
வேறொன்றுமில்லை.
- இரு நிலைகள்
விசயம் ஒன்றிற்குத்
தாழ்ப்பாள் போட்டு வைத்தேன்
தட்டிக் கொண்டே
இருந்தார்கள்
மறுபுறமிருந்து
ஒரு திறப்பைச் செய்தேன்
சாவி செய்பவர்கள்
சின்ன க்ளுக்
சிரிப்போடு
எதிரில் நிற்கிறார்கள்.
* இருந்துவிட்டுப் போகட்டும்
இந்தப் பொய்
என நினைத்திருந்தோம்
உண்மையாகி
இருந்து கொண்டிருக்கிறது
நம்மிடையே….
- பச்சை அன்பு
அசூயையான
இந்த உலகத்தைத்
தினமும் பாடுவேன்
நதியின் உலர் மணம்
உறைந்த மணல் வெளிக்கு
புதுப் புனல் தந்து
கரையெங்கும்
வெட்சிப் பூக்களை மலர்த்துவேன்
தகிக்கும்
சூடென்ன செய்யும்?
உள்ளூர குளிர்ச்சிக்கே
உருள்கின்றேன்
பச்சைப் பரப்புகளைப்
பசியற்ற உயிர்களைப்
பெருகச் செய்வேன்
கசடுகள் தள்ளும்
என் பாடலுக்குக்
காயங்கள் ஆற்றும்
பண்பு உண்டு
அறிக
என் பாடல்
விருத்திப் பாடல்.
- சூடித் தந்த வாசம்
வில்லிபுத்தூர் தேர் நிலைக்கு
எப்போதும்
இரண்டு காவலர்கள்
வடபத்ரசயனாரின்
கோபுரப் புறா
உங்கள் விலாஸ் உணவகத்தை
தாழ வட்டமடிக்கிறது
வடக்கத்தி
சுற்றுலா பேருந்துக்கு
ஐம்பத்து நான்கு
ஆவின் பால்கோவா கடைகளும்
கையசைக்கின்றன
ஸ்ரீ ஆண்டாள் பெயருக்கு
அநேக வியாபாரங்கள்
நிறைவேறா காதலை
நினைந்துருகும் பெண்கள்
துளசி மாலையை
கணவனிடம்
கைதந்து விட்டு
மாங்கல்யத்தை
கண்ணொத்தி வணங்குகிறார்கள்
திருமுக்குளத்தில் நீராடிப்
படியேறியவர்கள்
தொட்டு மீண்டு
காற்றில் வரும்
பாசுரப் பாடல்களை
ரத வீதிகளில் விட்டு விட்டு
தேரடி நிறுத்தத்தில்
பேருந்தை
கை மறிக்க நிற்கின்றேன்.