1. துயரங்களை வளர்க்கும் கலை
இந்த மாபெரும் நகரில்
அவள் தன்னைத் தனியாக உணர்ந்தாள்.
யாரும் தன்னைப் போலத் துயரப்படவில்லை
என்ற நினைவு அவளுக்குத் தாங்க முடியாததாய் இருந்தது
தன் துயரம் என்னவென்றே
அறிய முடியாமல் இருந்தது
அவளை மேலும் துயரத்திற்குள்ளாக்கியது.
பறவைகள் விலங்குகள் ஒன்றோடொன்று
பிணைப்பாய் இருப்பதைப் போல
மனிதர்கள் இல்லை
மரங்களும் செடிகளும் ஒரு சமூகமாய் இருக்கின்றன
மனிதர்கள் சமூகமாய் இருந்தாலும்
அவர்கள் தனியாய் இருக்கின்றனர்
மற்ற உயிரினங்களிடம் துயரம் இல்லை
நாய்கள் பூனைகளின் துயரம்
மனிதர்களிடம் இருந்து தொற்றிக் கொண்டவை என்கிறாள்
ஒரு மாயக் கரத்தை உருவாக்கி
தன் துயரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தாள்.
பின் அதே இடத்தில் அதே போன்றதொரு துயரம்
புத்தம் புதிதாய் வளர்ந்து நின்றது
மீண்டும் ஒரு மாயக் கரத்தை உருவாக்கி மீண்டும் அதைப் பிடுங்கி…..
உங்களுக்குத் துயரங்களை வளர்க்கும் கலை தெரிந்துவிட்டால்
அவற்றை அழிக்கும் கலையும்
தானே தெரிந்துவிடும்
2- சர்வம் சாதாரணம்
நான் அப்போது கவிதையின் கடலில்
மூழ்கியிருந்தேன்.
எல்லையற்ற வார்த்தைகள்
எல்லையற்ற அர்த்தங்கள்
சிறு மீன்களின் மேகமென
தொல் படிம வார்த்தைக் கூட்டங்கள்
என்னைச் சூழ்ந்து கொண்டன
நான் அவற்றை விலக்கிக் கொண்டு
உள்ளே சென்றேன்
சரியாய் தெரியாத இருளில்
ஒளிரும் சொற்கள் வசீகரித்தன
குதூகலமுடன் அவற்றைச் சேகரித்தேன்.
கர்வமுடன் அவற்றைக் கோர்த்தேன்
எல்லாம் நேர்த்தியாகத் தான் இருந்தன
ஆனாலும் என்ன நடந்ததென்று தெரியவில்லை
வார்த்தைகளின் ஒளிர்வுகள் அடங்கியிருந்தன.
3-கண்ணீரைப் பற்றும் நெருப்பு
கோபித்துக் கொள்வதில்லை
புகாரும் செய்வதில்லை
ஒரு கவிதை வாசிக்கிறாய்
அதில் அத்தனை கூர்மையை எங்கிருந்துதான்
தீட்டி வருவாயோ?
என்னை எத்தனை இரும்பாக்கிக் கொண்டாலும்
தண்ணீராய் உருகி
ஜன்னலுக்கருகே ஓடுகிறேன்
வெளியே விரிந்திருக்கும் கடலில்
தீப்பிழம்பாய் இறங்குகிறது சூரியன்
அவ்வளவு தண்ணீரும் அதைக்
குளிர்விக்க முடியவில்லை
மாறாகக்
கடல்நீரில் தீப்பிழம்பு பரவுகிறது
4-அம்பு விடுதல்
நான் அம்பொன்றை எய்தேன்
அவை எருதுகளை விட்டு
மலர்களில் பாய்ந்தன
பின் நான் அம்புகளைக் கூர்தீட்டினேன்
அதன் உடலை நுட்பமாக்கினேன்
ஆய்ந்தேன் காத்திருந்தேன்
நிதானமாகக் கவனித்து எய்தேன்
இந்தமுறை அவை
எருதுகளையும் சாய்க்கவில்லை
மலர்களையும் தைக்கவில்லை
5-பல வண்ண ரத்தம்
நான் முதலில் பார்த்த ரத்தம்
கருஞ்சிவப்பு நிறத்தில்
அச்சத்தையும் நடுக்கத்தையும் தருவதாய்
இருந்தது
பின் அது மெல்ல மெல்ல நிறம் மங்கத்
துவங்கியது
அடர் சாம்பல் நிறத்தில் இருந்து
வெளிர் சாம்பல் நிறத்துக்கு மாறியது
பின் அது பளபளக்கும்
பச்சை மஞ்சள் நிறங்களுக்கு மாறியது
பின் ஒருநாள் அது தண்ணீரின்
நீல நிறத்துக்கு மாறியது.