cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

சுபி கவிதைகள்

சுபி
Written by சுபி

1.ஒரு கைதி அல்லாதவன் டைரி!!

சாலையோரம் சென்று கொண்டு இருந்தேன்.
திடீரென வேகமாக வந்த வண்டியில் பிக்பாக்கெட் அடிப்பவன்,
சாட்சி சொல்பவன் என்று யார் யாரையோ
ஏற்றும்போது எதற்கும் இருக்கட்டும் என்று
என்னை ஏற்றினார்கள்…

என் முகத்தில் வழிந்த பெருங்கருணை
அப்படி?!!!

எனக்கு என்ன நடந்தது என்று புரியத்
துவங்கும் போது என்னை மட்டும் தனி
செல்லில் போட்டார்கள்…

கசாப்புக் கடை ஆடு போலத் தொங்க விட்டு
எந்த நேரத்திலும் தலை வெட்டப்படும்
என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்…

நான் இருந்த வரை
வெளியே ஒரு கொலையும் நடக்கவில்லை
போலிருக்கிறது…

அவ்வப்போது வார்த்தை சவுக்கடிகள்
வந்து விழும்
ஒரு நாள் மாலை பசி மயக்கத்திலிருந்தேன்
தேநீர் வேண்டுமா என அன்பொழுக கேட்டார்கள்…
பசி எதையும் அறியாதல்லவா
ஆமாம்,ஆமாம்! வேண்டும் என்றேன்!

கம்பி வரை நீண்டது என் கைகள்…
கொண்டு வந்தவர் திடீரென உக்கிரமாகி
தேநீரைக் கம்பி வழியே முகத்தில் ஊற்றினார்கள்…

என்னைத் தேடி யார் வந்தாலும் பார்க்க முடியாது…
மீறி வந்தாலும் என்னிடம் பேச முடியாது…

ஏன் இப்படிப் படுத்துகிறீர்கள் என்று
ஈனஸ்வருத்தில் ஒரு நாள் முனகினேன்.
கெட்ட கேட்டுக்கு பேச்சப்பாரு என்ற
வார்த்தை லத்தி வந்து விழுந்தது…

யாரோ ஒரு புண்ணியவான் எவரென்றே
தெரியாமல் என்னை ஜாமீனில் எடுத்தான்…
அவனை இன்னும் பார்த்தது கூட இல்லை…

நான் போகிறேன் என்ற கடுப்பில்
ச்ச சோத்துக்கு தான் தண்டம் என்று
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்…

அவர்களாக ஏற்றினார்கள்
அவர்களாக அடைத்தார்கள்
அவர்களாக அடித்தார்கள்
அவர்களாக விடுவித்தார்கள்
அவர்களாகத் தெருவில் தள்ளி விட்டார்கள்…

இனி தினமும் மன்னித்து விடச் சொல்லி
நான் வந்து கையெழுத்துப் போட வேண்டும்…
அவர்கள் காலாட்டிக் கொண்டு ஒய்யாரமாக
அதை ரசித்த வண்ணம் அமர்ந்து இருக்கிறார்கள்…

வெளியே வந்த பிறகு
நான் சிறையிலிருந்து வந்து இருக்கிறேன் என்று
எங்கெல்லாம் செல்கிறேன் என்று
வேவு பார்த்தார்கள்…

வெளியே இருப்பவர்களோ பரிதாபப்பட்டு
“உச்”கொட்டி வேலை இல்லை என்றார்கள்…
நீ என்ன செய்தாய் என குறுகுறுவென
பார்த்தார்கள்…
ஒன்றும் செய்யாமலா உன்னை வண்டியில் ஏற்றி இருப்பார்கள்
என்று பகடி செய்தார்கள்…

நான் இனிதான் கொள்ளை செய்வேனோ
என்று பயமாயிருக்கிறது.
என்னை ஜாமீனில் எடுத்தவரை நேரில் கண்டால்
ஒரு நன்றி மட்டும் சொல்லி விட்டு.


2.

வழியெங்கும் பூக்களை
எதிர்பார்த்து நடப்பதில்லை
என் பாதங்கள்…
முட்களின் கோரக்கீறிடலுக்கு
பழக்கப் படுத்தி விட்டிருக்கிறேன்…
கவனங்கள் மீதான காதலில்
நான் கவனிக்க மறந்து போகிறேன்
குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் முட்களை…
குருதிப் பிசுபிசுப்பின் சில்லிடலை
மருதாணி வைத்த பிறகு வரும்
சில்லிடலாய் எண்ணி எட்டேறி
நடைபோடும் கால்களின் காதுகளில்
ஓர் விண்ணப்பம் மட்டும்…
எத்தனை முட்கள் கீறினாலும்
வலித்தாலும், வீறிட்டாலும்,
குருதி கசிந்தாலும் நின்றிடாமல்
நடந்து கொண்டே இரு
பாதை முடிவுறும் வரை!!


3.

சிதைந்து போன கனவுகளை
ஒன்றாக்கி ஒரு நெல்மணிக்கு
உயிர் கொடுத்து அதை வறண்ட
பாலையொன்றில்
எத்தனையோ யுகங்களுக்கு முன்
நட்டிருக்கிறேன்…

ஒரு காதலைப் போலத் தான்
கனவுகளும் சொல்லிக்கொண்டு
நம் கதவுகளைத்தட்டுவதில்லை…

அப்படித் தட்டி கனவுகள் என்னைக்
கேள்வி கேட்ட ஒரு நாளில் தான்
சாவகாசமாய் கிளம்பி இருந்தேன்
உங்களைத் தேடி வருவேன் என்று….

தாகந்தீர்க்கத் தோதாய்
சில புத்தகங்கள்,
விழுங்க சில கண்ணீர்த் துளிகள்,
என்னைச் சுமக்கவென ஒரு ஒட்டகம்,
கிளம்பி வெகு நாட்களாகிவிட்டது…

மரமே இல்லாத பாலையில்
கண்ணுக்குத் தெரியாத நிழலைத்தேடி
ஓய்ந்து போயிருக்கிறது கால்கள்…

இப்போது பிரச்சினை என்னவென்றால்
நட்டநடுபாலையில் வந்த பிறகு
தான் மனதைக் குடையும் கேள்வி ஒன்று!

உயிர் கொடுத்த நெல்மணியை
போயும் போயும் ஒரு பாலையிலா
புதைத்து வைத்தேன்???


 

About the author

சுபி

சுபி

சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி; வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரின் எழுத்தாக்கத்தில் காலடித் தடங்கள் , தேம்பூங்கட்டி, தோமென் நெஞ்சே ஆகிய தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website