1
பிஞ்சுக்கைகளுக்குள் சில நொடி பொதியப்பட்ட
பொன்வண்டைச் சொத்தென்று
மகிழ்ந்து கொண்ட சில நொடிகள்
வாழ்க்கையைப் பொன்வண்டாக்கி மூடிக்கொள்ள
அந்த சில நொடிகளும் வாய்க்காத போதெல்லாம்
ஒழுகிய மூக்கைத்துடைக்கவா
பொன்வண்டைப் பிடிக்கவா எனத்தடுமாறிய
பருவத்தின் குகைக்குள்.
2
சத்தம்போடாதே
சத்தம்போடாதே
கிஞ்சித்தும் மதிப்பதில்லை
கடல்
காகம்
சாலை
மனசு
பழகிப்போன கடல்
பழகிப்போன காகம்
பழகிப்போன சாலை
பழகாத மனசு
3
அரிவாள்மணையின்
கூர் போதவில்லையென்று
வருந்துவாள் அம்மா
மாங்காய் வெட்டுகையில்
தடுக்கி
லேசாய்த்தான் கையை வெட்டியதைச்சொல்லி
அழுத்தமாய் வெட்டியபோதும்
வராத ரத்தம் பற்றி அவளுக்கேதும் புகாரில்லை
மிளகாய்ப்பொடியை வைத்து அமுக்குவாள் ரத்தத்துக்குக்
குறைந்தபட்ச மரியாதையுமின்றி
அவளுக்கு வந்தால் அது தக்காளிச் சட்டினிதான்
4
சாலையில் உருகி ஓடும்
நீரைப் பருகிக்கொள்ள
ஒரு குருவி கூட அமர்வதில்லை
உனக்கு மட்டும்
கானல் நீர்
அட என் சமர்த்தே
ஏமாறுவதென்றாலும்
பெரிதினும் பெரிது கேட்டுத்தொலை
ஊர் உலகம் திரும்பிப்பார்க்கும்
5
வறட்டுப்பிடிவாதங்களில்
மூச்சு முட்டவில்லையா
வேனலுக்குக்கட்ட
அசல் பட்டுக்குக்கூட
இடமில்லை
நீ ஏன் இன்னும்
காக்காப்பொன் சரிகையைக்
கட்டிக்கொண்டு அழுகிறாய்.