அர்த்தமற்ற சடங்குகளைச் செய்!
திரும்பத் திரும்பச் செய்!
செய்.. செய்.. செய்..
மரிக்கும் வரை வேறு கதியில்லை என சதிராடும் மாய அசரீரிக்கு
மனச்செவி சாய்த்து
அதன் தொடர் ஏவல்களை நிறைவேற்றும் வரையிலும்
பொங்கும் ப..த..ப..தை..ப்..பு
ஒரே பிரசவத்தில்
ஆயிரம் குட்டிகள் ஈன்ற
பூனையின் அல்லாடல்.
மூளை செல்கள் தோறும்
தோன்றும்
எண்ண இரைச்சல்களின்
இடைவிடாத நாராச கானம்
குள்ளநரியொன்றின்
தொடர் ஊளையா
பல நரிகளின் ஒருமித்த ஓலமா?
சிக்கிய மனதைத்
தந்திர வசியம் செய்து
சுழன்றாட்டுவிக்கும்
எண்ணச் சுழற்சி நோய்.
தாறுமாறான நியுரோட்ரான்ஸ்மீட்டர்
ஜீன்களின் வழியே வந்த பிழை
வளர்ந்த சூழல் என்று
அது வந்தடைந்த வழி எப்படியிருப்பினும்
கழுத்தை உறுத்தறுக்கும்
கனத்த சங்கிலியின்
ஏதேனுமொரு கண்ணியைத் தகர்த்தால் போதும்
புத்தம் புது விடுதலை.
*O.C.D – Obsessive Compulsive Disorder