காந்தி பார் சோப்பின் நிறம் பிடிக்கும் அவளுக்கு.
திப்பிகளோடு கிண்ணியில் இருக்கும்
இலுப்பைத்தூளின் வாசமும் தான்.
இரும்பு வாளி தரை உரசும் சப்தம் எரிச்சல் வரும்
உள்சுவற்று செவ்வகத்துளையிலிருந்து
விருட்டென்று பறக்கும் குருவி பார்த்து குதூகலிப்பாள்
பாத வெடிப்பு நீக்க இருக்கவே இருக்கும்
தளத்தின் சொரசொரப்பு
அம்மா புழங்கியதில் எதற்கு விடவேண்டும்
கிறீச்சிடும் சகடை சுற்றும் கிணற்றடியை.
சரிந்த முக்குக் கண்ணாடியின்
பைஃபோக்கல் சமன் செய்ய கழுத்து நிமிர்த்தி
கணினி சுட்டி அசைத்து கர்சர்ஐ
நிலை நிறுத்தப் போராடும் நேரத்திற்கும்
நகம் நீண்ட மென்விரல்களால்
தொடுதிரையில் விரைவாகத்
தட்டச்சு செய்யும் மகளுக்காகும் நேரத்திற்குமான காலம் தான்
தலைமுறை இடைவெளி போலிருக்கிறது
நேற்று உடுத்திய சட்டையை
அலமாரியில் வைக்கலாம்
பாதியிருக்கும் காலர்பவுடர் யாருக்கேனும்
காகிதக்குறியட்டை செருகிய
எதோ ஒரு இஸம் எடைக்குப் போகும்
நசிந்த தாள்களோடு இருக்கும்
தொலைபேசி அடைவு பிற்பாடு பயன் தரும்
அனாதை தெருக்கிழவனுக்கு கிடைத்துவிடும்
செருப்பு ஜதைகள்.
கதவுக்குப் பின்னிருக்கும்
இறந்தவனின் கைத்தடி இனி என்னவாகும் ?
கடலோடியின் பாடல் கேட்கிறது
என இடம் மாற்றி வைத்தேன் அலமாரி சங்கை.
இதை கற்பனாதீதக் கூறல் என்று ஒதுக்கிவிடாதீர்கள்
சிதிலமடைந்த கலங்கரை விளக்கத்திலிருந்து
விலகிய கடற்பறவையின்
இறகசைப்பும் கேட்டதை நான் சொல்லவேயில்லை
அருமை. மகள் தட்டச்சு செய்யும் வேகம், உண்மையில் தலைமுறை இடைவெளிதான்.