cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

பிருந்தா இளங்கோவன் கவிதைகள்


  • பனிக்குடக் குளுமை

“சாப்பிட்டாயா..?”

உன்னுடனான
தொலைப்பேசி உரையாடலின்
முதல் பத்து வினாடிகளுக்குள்
தவறாமலென்னை
வந்தடைந்து விடுகிறது
இந்தப் புராதனக் கேள்வி.

அன்று நீயென்னைப்
பிரசவித்த அறையில்
தாதிப் பெண்
என் தொப்புள் துளையிலிருந்து
அரிந்து வீசிவிட்டாளென்றே
எண்ணியிருந்தேன்.

ஆனால்
அந்த உன் நஞ்சுக்கொடி
அறுநூறு மைல் தொலைவுக்கு
நீண்டு கிடக்கிறது
உலராத குருதியோட்டத்துடன்.

  • இறை

இறுதித் தீர்ப்பு நாளில்
வலக்கையில் பரிசுப் பொட்டலங்களும்
இடக்கையில் தண்டனைகளுமாய்க்
கடவுள் என் முன் காட்சியளித்தபோது
என்னிடம்
பிரார்த்தனைகள் ஏதுமில்லை.
நான் உம்மையொரு முறை
கட்டிப்பிடித்துக் கொள்ளட்டுமா
என்றேன் தயக்கத்துடன்.
ஓடிவந்தென்னை
வாரியணைத்துக் கொண்டார்.
அவர் கைகளில்
இருந்தவையெல்லாம்
நழுவி விழுந்தன கீழே.

  • விடையறியா கேள்வி

ஒரு பெருமழையைப் போல்
உன் பொழிதலிலென்னைக்
கரைத்தாய்.

என்னுள் உன் மூச்சனுப்பி
எனதான்மாவின் இசை எழுப்பினாய்.
ஒரு புல்லாங்குழலை மீண்டும்
மூங்கிலாய்க் கிடத்திவிட்டு
சொல்லாமலேன் மறைந்தாய்.

“அடுத்த சந்திப்பு எப்போது”
தூண் சாய்ந்து நின்று
நீ விழி மலர்த்திக் கேட்ட
உன் இறுதிக் கேள்வி
இவ்வெயில் படர்ந்த முற்றத்தில்
உயரமான உன் நிழலைப் போல்
நீண்டு கிடக்கிறது.

நீ விரல் மடக்கி
ஒலியெழுப்ப
வேண்டிநிற்கும்
என் வாயிற் கதவுகள்
வேதனையுற்று முனகுவதைப்
பார்க்கிறேன்.

வந்து விடுவாயல்லவா?


 

About the author

எஸ். பிருந்தா இளங்கோவன்

எஸ். பிருந்தா இளங்கோவன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website