- இனி உன்னிடம் என்னத்தச் சொல்ல….
முதியோர் இல்லத்தில்
நீ விட்டுச் சென்றதில் எழும் துயர் ஒன்றும் எனக்குப் புதிதில்லை.
அன்று என் தந்தை
எனை மழலையர் பள்ளியில் விட்டுச் சென்ற பின்
தனிமை உணர்ந்து கத்திக்கதறி அழுதேன்.
இன்று நீ இங்கு விட்டுச்செல்கையில் விம்மி அழுகிறேன்
அன்று அழுதுதேம்பி நிற்கையில்
மாலை வந்து அப்பா நிச்சயம் கூட்டிச்செல்வார்..
ஆனால் இன்றோ
நீ கூட்டிச் செல்வதென்பது கனவிலும் நிகழா…
இங்கு உடல் தெம்புக்கென்றும் குறைவில்லையானாலும்
மனம்தான் தெம்பின்றித் தடுமாறுகிறது
அதற்குக் காரணம்
நீ தான்
இருபத்தைந்து ஆண்டுகள்
உன் நலனொன்றே
என் வாழ்வாக்கிக் கொண்டவள்
இன்றும் உன் நலனெண்ணியே நொந்து சாகிறேன்.
வீட்டிற்குக் கூட்டிப் போய்விடு மகனே!
எனச் சொல்ல வாய் திறக்கையில்
நீயோ
“வீட்டிற்கு வந்து என்னம்மா செய்யப் போகிறாய்,
துணி துவைக்கக்கூட வாசிங்மிசின் வாங்கியாச்சு,
அங்கு வந்தும் சும்மாதான் இருக்கப்போகிறாய் ”
என்கையில் இனி உன்னிடம் என்னத்தச் சொல்ல…
இது தான் என் நிரந்தர வீடு என்று உணர்கிறேன்
மீண்டும் இந்த இல்லம் நோக்கியபடி..
- நதியாகவே இரு!
நதியே !
அன்றோ நீயோர் காட்டாறு… கரைபுரண்டாய்
பாறை உடைத்தாய் உன்வழியில் தடையாய் இருந்ததெல்லாம்
வாரிச் சுருட்டி சுக்கு நூறாக்கித் துவைத்தெடுத்தாய்…
அதே இறுமாப்பை இன்றும் காட்டாதே ஏனெனில் இன்றோ
நீ சாந்த சொரூபி கரைகள் தழுவும் கட்டுடல்
அப்பழுக்கற்ற தூய்மையின் மறுவடிவு
வண்டலையும் கூழாங்கற்களையும்
வாரிதரும் வள்ளல் உள்ளம் உனது.
நீ காட்டாறாய் இருந்ததற்கும்
நதியாய் சங்கமிப்பதிலும்
காலமும் சூழ்நிலையும் தான் காரணமேயன்றி நீயல்ல.
காட்டாறாய்
நீ இருக்க விரும்பலாம்..
உன் அழகே
நீ நதியாய் இருப்பதில் தான்.!