cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

தாடிக்காரன் கவிதைகள்


  • பேசாதே

தாயின் மார்பில் சுரக்கும்
தாய்ப்பாலுக்கு முன்
கள்ளிச்செடியில் கள்ளிப்பால்
சுரக்கும்…
பேசாதே.

நுனிப்புல்லாய் முளைக்கும்
கனவுச் சிறகுகளைப்
பிற்போக்குத்தனமென்னும் கல்லால் அடிக்கக் கூடும்…
நீ பேசாதே.

மண் விட்டு முளைக்காத
விதையாய்
உன் முலைக் காம்புகளில்
சில பாம்புகள் சீறக் கூடும்…
பேசாதே.

அவனின் மகளுக்கும்
அதே அளவு தான் யோனி
இருப்பினும் உன் யோனியில்
மிருகத்தின் விஷம் கக்க முயற்சித்திடுவான்…
பேசாதே.

சிறகுகளின் மீது
எதிர்பார்ப்பெனும் உலக உருண்டையை வைத்துப்
பறக்கச் சொல்வார்கள்…
பேசாதே.

அதோ பார் வானம்
அதோ பார் மேகம்
அதோ பார் பறவைக் கூட்டமெனக்
காட்டுவார்கள்
கூண்டுக்குள் அடைத்து விட்டு…
பேசாதே.

உன்னுள் கோபத்தைக் கொட்டித் தீர்க்க நினைப்பாய்…
தயவு செய்து பேசாதே.

பேசினால் பெண்ணியவாதி
அடங்காப்பிடாரி பஜாரி
ஏன் தேவடியாயென்று கூட மெல்லும் ஊரின் வாய்…
தயவு செய்து பேசாதே.

அங்கும் இங்கும் எங்கும்
பேசாதே
பேசியது போதும்…

ஏறி மிதித்து விடு அவ்வளவு தான்.


  • நண்பரில்லாத சென்னை_வாழ்க்கை

எந்த உயிரும்
வந்தமராத மரம் போல் தான்…
நண்பரில்லாத
சென்னை வாழ்க்கை.

வயிற்றுப் பசியில்
இறுக்கிப் பிடிக்கையில்
அவனுக்கும் அந்த நிமிடம்…
ஓர் மாதவிடாய் நிகழ்வு.

கடந்து போகும் எண்ணற்ற மனிதரில்
அவனுக்கான ஆறுதல்…
யாருமற்ற சாலையோ
கழிவறையோ…
கொட்டித் தீர்த்து விடுகிறான்
கண்ணீரை.

சில சமயங்களில் சாப்பிட மறுத்து
சிறுபிள்ளை போல்
அடம்பிடிக்கிறது தொண்டைக்குழி.

நண்பனிடம் கடனாய் பெற்ற
சட்டையும்…
வலுக்காட்டயமாய்த் திணித்த
ஐந்நூறு ரூபாயும்…
அவனின் நினைவு கூண்டுக்குள்
சிறகடித்துப் பறக்கிறது.

ஆக்சிஜனில்லா உயிர் வாழும்
விநோத உயிரினமாய்
சுற்றித் திரிகிறான்…
பட்டணத்து வாழ்க்கையில்.

அவன் எடுக்கும் செல்பிகளும்
பதிவு செய்யும் காமெடி ஸ்டேட்டஸ்களும்
யாரையோ மகிழ்விப்பதற்கான
ஒரு யுக்தி.

அவனின் ஒரே ஆறுதல்
அன்பாய் தவமாய் அழைக்கும் அழைப்பில்
சந்தோஷமோ துக்கமோ…
ஆலங்கட்டியாய்
பொழிந்து விடுகிறான்.

அடுத்த நாளை எப்போது போலவும் கடந்து போகிறான்…
நண்பரில்லாத
சென்னை வாழ்க்கையில்.


  • ஞாயிறு பள்ளிக்கூடம்
பாதி தூக்கத்துச் சூரியனைக் கூட்டிக்கொண்டு
7.30க்கு பள்ளிக்கூடம் செல்வோம்

வியப்பாகிப் பார்க்கும் பள்ளிக்கூட கேட்.

காய்ந்த சருகுகள்
பஞ்சு மெத்தையாய்.
கூட்டி பெருக்கங்களென்று கட்டளையிடத்
தலைமை ஆசிரியர் இல்லை.

கைலி சாட்ஸ் லோயரென
விருப்பமான உடை
கண்டிக்க உடற்கல்வி ஆசிரியரில்லை.

கிரிக்கெட் வாலிபால் கபடியென்று
வகுப்பு பாடத் திட்டம் போடப்பட்டது.

சியர்ஸ் கேர்ள்ஸாய் ஆடுகிறது
நாவல் மரமும் சப்போட்டோ மரமும்.

பாப்கார்னாய் பழங்களைக் கொத்தித் தின்று
கீச் கீச்சென்று ஆரவாரம் செய்கிறது ஆடியன்ஸ் சிட்டுக் குருவி

உணவு இடைவேளை எதுவுமில்லை.
தண்ணீர் இடைவேளை உண்டு.
அவர்களின் சௌகரியத்திற்கு ஏற்றாற் போல்.

ஜாக்பீஸ் இல்லா கரும்பலகையாய் விரல்கள்
கூட்டிக் கழித்தலென ரன்னை கணக்கிடுகிறோம்

பூஜ்ஜியம் வாங்கிய காகிதம்
வேடிக்கை பார்க்கிறது .
என்ன ரன் எடுக்கிறானென்று.

டக் அவுட் ஆகி வெளியேறுகையில்
சத்துணவு அடுப்பு
கெக்க பெக்க கெக்க பெக்கென
சிரித்துக் கொண்டிருக்கிறது.

கை தட்டி உற்சாகப்படுத்துகையில்
தீபா மிஸ் ஞாபகம் வருகிறாள்
அழகான டீச்சர்.

கணக்கு வாத்தியார்
வருகிறார்.
உச்சி மண்டையில் சுரீரென
கத்தரி வெயில் .

விளையாட்டில்
சகுனி வருவான் சில சமயம்.
கண்டுபிடிக்க கிருஷ்ணன் இல்லை.
க்ளாஸ் லீடர் நினைவுக்கு வந்தான்.

மேகத்தின் வண்ண உருமாற்றம்
வெள்ளை கருப்பு நீலமென
டேப்பணிந்த வகுப்பு பெண்கள் கண்முன் வருகிறார்கள்.

யாருக்கும் பாதகமில்லாமல்
ஸ்பாட் பிக்சிங் செய்கிறது
ஆங்காங்கே கட்டப்பட்ட சுவரும்
சிறிதாய் முளைத்த மரங்களும்.

கிழக்கில் உதித்து
மேற்கில் மறைவான் சூரியன்
சிறு வயதில் படித்தது.
உண்மையென அனுபவத்தில்
தெரிந்து கொண்டோம்.

10 ஏ அரசு பேருந்து
ஹார்ன் அடித்துச் செல்கையில்
நேரமானதை அறிந்து கொண்டோம்.

வீடடையும் குருவிகளாய்
நாங்கள் வெளியேறுகையில்
பள்ளிக்கூட கேட்டும் காய்ந்த சிறகும்
நக்கலாய் சிரிக்கிறது

நாளை திங்கட்கிழமையென்று.

– தாடிக்காரன்

About the author

தாடிக்காரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website