1. தொன்ம விரல்
மஞ்சள் பூவினங்களின் தொனி பற்றிய
சிரிப்பைப்
பற்கள் முளைக்கா ஈறுகளுக்குள்
அடக்கிய புன்னகை
குழந்தையின்
சிறு நீர்க் கோலங்களில் பிரள்வதைத்
தியானித்திருந்த பார்வை மலரில்
ஒரு ஞானம் அடர்கிறது
தவழ்தல் -முகம் கவிழ்தல்- நிமிட்டி பார்த்தல்
வயலினிஸ்ட் மொழிகளாய் சில கீச் கீச்களும்
செவி மேவுகிறது
அஞ்ஞான மலர் முதல் முதலாக நிலத்தின் பாதங்களை
ஊன்றி பால் பற்களில் நனைக்கத் துவங்கியது
ஒரேயொரு ரொட்டித்துண்டை உடைத்து நூறாகச்
சிறுநீர் பிசுபிசுப்பில் கொட்டியும்
கைகள் இரண்டாலும் பிணைந்தும்
எவரும் விரும்பப்படாத டிஸ்கள் தயாராகிக் கொண்டிருந்தது
செல்லத்தின் புறவெளியில்
பாதி மறந்த பால்குடியின் வாலை ஆட்டிக் கொண்டே
ஓங்கி முதுகில் தட்டிய குழந்தையின்
தண்டுவடத்தில் தாளாத கோபம் இறங்கியது
அப்பேரிக்காய் கன்னத்தைப் பிதுக்கிப் பிதுக்கி
ஆரஞ்சு சுளைகளை வெளி தள்ளி
விசும்பிக் கொண்டே இருந்த குஞ்சுப்பறவை
சிறுநீர் நனைய ரொட்டியொன்றைப்
பத்திரப்படுத்தி நீட்டுகிறது
அம்மாவின் தொன்ம விரல்களும் நீளுகிறது
இடைவரும் இறைவனின் கைகளைத்
தட்டி விட்டிருப்பவர் எவரோ.
2. போத்தல்
குங்காயி கிழவியும் அவள் கிழத்தியானும்
ஐந்து மணிக்கே ஒரு சாக்குப்பையுடன்
வந்துவிடுவார்கள்
ஐந்து மணிக்கே துவங்கிவிடும் அவர்கள் பிரார்த்தனை
யாரையும் எழுப்பி விட்டு விடாதே
இறைவா என்பதாகவே இருக்கும்
மண்ணை கிளறிப் புழு திங்கும்
கோழியின் கால்கள் போல
இருவரும் கிளறத் துவங்கினார்கள்
சில சமயம் உடைந்த மதுக் கோப்பைகளும்
தூக்கி விசிறியெறிப்பட்டிருந்த
பிள்ளையின் தூம துணியுடன் ஒட்டியிருந்த
இரும்புக் கம்பிகளும்
பீர் பாட்டில் மூடிகளும்
பழைய கரண்ட் கம்பிகளும்
விசிறி எரிந்திருந்த பால்பாக்கெட் கவர்களும்
ஏதோ ஒரு பயத்தில் தூக்கி எறியப்பட்டிருந்த கத்திகளும்
இப்படிச் சொல்லிக் கொண்டு
போகுமளவிற்கு ஒவ்வொன்றையும்
மூட்டை கட்டி கொள்ளை புறத்தில்
அதன் அடையாளங்களை அழித்து
காயலாங்கடைக்குத் தரம் பிரித்தார்கள்
கிலோவின் எடைகளும் கிராம் எடைகளும்
சில்லரையாக வந்து விழுந்தது இருவருக்கும்
வேடிக்கை பார்த்த படி நின்றிருந்த
என் அதிகாலை நேரம்
இப்போது சிந்தித்துக் கொண்டிருப்பதெல்லாம்
தினமும் நான் தூக்கியெறியும் அப்பாவின்
எத்தனை மதுக்கோப்பைகள்
விலைபோயிருக்கும் என்பதைப் பற்றியது தான்
3. அப்பாவைக் கூறு போடும் நான்கு பெண்கள்
முதலானவள் கால்களைக் கட்டினாள்!
இரண்டாமானவள் வாயை அடைத்தாள்!
மூன்றாமானவள் கைகளை இறுக்கினாள்!
நான்காமானவள் குரல்வளையை நெறித்தாள்!
அப்பா இறந்து போகவில்லை?
அரை மணி நேரம் தாழ்ந்து
மரணமேக முடிவெடுத்துக் கெஞ்சினார்
கருணையால் மரணம் அரை மணிநேரம்
ஒத்திவைக்கப்பட்டது…
அப்பா வயதிலிருக்கும் எல்லோரையும்
கருணை அப்பாவென்றே அழைக்க வைத்தது
நிகழும் இக்கொலையைச் சற்று அங்கீகரிக்கத்தான் வேண்டும்.
வன்புணர்வு தேசத்தின் கொலையாளிகள்
கருணையாக மீட்கப்படுவதற்குள்
தோழியின் அப்பாவைக் கொன்றுவிடுவதென்றோம்.
உயிரச்சுறுத்தல் நிகழ்ந்து மறைகிறதொரு மாயகணத்தில்
அப்பாக்கள் தோழியின் அப்பாவாக
ஏதுமொரு கணத்திலும் மாறாமலிருக்க வேண்டிக் கொண்டோம்!
அரை மணி கடந்தபின்பு
“எங்கள் கைகள் வேறொரு கழுத்திற்கு
இடம் பெயர்ந்திருந்தது”