தனிமையின்
பேரிருள்
தகிக்கும்
முப்பொழுதும்
சிற்றகல்
சிறு தீபங்களாய்
எரிந்து சுடர்கின்றன
உன் தீரா அன்பின்
பெரு நினைவுகள்!
நீ
என் உயிரின்
செவி மடல்களில்
இதழ் தீண்டி உதிர்த்த
பித்தேறிய
நேசத்தின் சொற்கள்
நிகழ் பிரிவின்
தாகம் தணித்து
குளிர்விக்கிறது
பகிர்ந்து அருந்திய
ஆரஞ்சு கனிச்சாறாய்.
சிரிப்பிசையாய்
அதிர்ந்தொலிக்கும்
உன் ப்ரியத்தின்
விரல்களைப் பற்றி
பின் தொடர்கிறேன்
நாம் நடந்த
நதிவெளியின்
நினைவுக் கரையில்.
ஒரு பாடலோ
ஒரு கவிதையோ
ஒரு ஓவியமோ
ஒரு திரைப்படமோ
நாய்க் குட்டிகளுடன்
நீ விளையாடும்
காணொலியோ
ஜன்னலுக்குள் நுழைந்து
உன் போலவே
தோள் சாய்ந்து பறந்த
மஞ்சள் நிற
வண்ணத்துப்பூச்சியோ
ஏதோ ஒன்று
எப்போதும்
உன் அண்மையை
எனக்கு
நினைவூட்டியபடியே
இருக்கிறது.
தூரத்தில் இருப்பினும்
அருகில் இருப்பது போலவே
தடுமாற வைப்பாய்
உயிர் குலைய வைக்கும்
சிரிப்பின்
நச்சு தோய்த்த
சிருங்காரத்தின்
உன்மத்த வார்த்தைகளால்.
மழைக் குளிருக்கு
சூடேற்றும்
உன் உரையாடல் இன்றி
நடுநடுங்கி
கழிகின்றன
உறைந்து நிற்கும்
கார்காலம்.
இறுகப் பற்றி இருக்கும்
உனது கைகளை
விலக்க முடியாமலே
விழித்துக் கொள்கிறேன்
அதிகாலைக் கனவுகளில்.
ஈர உதடுகளின்
வெப்பம்
கனன்றபடியே
இருக்கிறது.
இடைவேளையை
பிரிவென நினைத்து
துயர் கொள்ளாதே
என்பாய்.
விடுபட்ட நாட்களின்
முத்தக் கணக்கை
மொத்தமாய்
தருவேன்
காத்திரு என்பாய்.
இதழ்களிலும்
இமைகளிலும்
காத்திருக்கிறேன்
கூட்டுக்கு வெளியே
தலை நீட்டிக்
காத்திருக்கும்
சிட்டுக்குருவிக்
குஞ்சைப் போல்.
தாமதமாகவேணும்
வந்து விடு
இந்தக்
கார்காலத்தின்
கடைசி மழை
பெய்து
ஓய்வதற்குள்!
இனிமை