எப்போதும் கேட்கும் பாடல்தான்..
இன்று மட்டும் அதன் பொருள் உன்னைச் சார்ந்து இருக்கிறது..
எப்போதும் நடக்கும் சாலைதான்
இன்று மட்டும் கண்கள் உன் காலடித் தேடி
அலைகிறது..
எப்போதும் பார்க்கும் வானம்தான்..
இன்று மட்டும் நிலவையும் மீறி
உன் முகம் தெரிகிறது..
எப்போதும் பார்க்கும் ஆறுதான்
இன்று மட்டும் எப்படி உன் வளைவு நெளிவுகளை ஞாபகப்படுத்துகிறது..
எப்போதும் இருக்கும் நான்தான்..
இன்றெப்படி முழுவதுமாய் நீ நீ நீ..
புத்தகத்தை எடுத்துப் பிரித்தாய்..
தேவதையைக் காணும்
குழப்பத்தில் எழுத்துகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன..
தாளின் வெண்மை உன் முன்பு
நிறம் மங்கியது…
சிதறிய எழுத்துகள் மயங்கி மயங்கி
தடுமாறித் தடுமாறி..
ஒரு வாக்கியத்தை உருவாக்கின..
“உன் முகம் பார்க்க அஞ்சியவன்
காதலுக்குள் போய் ஒளிந்திருக்கிறான்..
பத்திரமாக அவனை மீட்டு
உன்னிடம் ஒப்படை
அவன் உனக்கானவன்”என
இப்போது புத்தகத்தை சடாரென்று மூடினாள்
என்னுருவம் அட்டைப்படத்தில்
இருந்தது..
புத்தகத்தின் தலைப்பு..
கண்ணாடி..
உதிர்ந்து கீழே
விழும் இலை..
நொறுங்கிய கண்ணாடி..
சிலந்தி வலை..
சிதிலமடைந்த பழைய கோயில்
பாவம் போல மறைக்கப்பட்ட புண்ணியம்…
கடைசிச் சொட்டு மழை..
மரண பயம்..
இவற்றில் எதை வேண்டுமானாலும்
என் காதலுக்கு
உவமையாக்கிக் கொள்ளுங்கள்.
– லெனின் எர்னெஸ்டோ