cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்


1. அத்தாட்சி 
அவள் கோயிலில் ஒற்றை அகல்விளக்கை
ஒருபோதும் ஏற்றுவதில்லை
ஏற்றுவதெல்லாம் ஜோடி விளக்குகள்
ஏற்றிவிட்டு
ஒன்றுக்கு ஒன்று
துணையாக இருக்கட்டும் என்பாள்
அப்படி ஏற்றும்
இரண்டு விளக்குகளையும் கூட
இரண்டும் ஒரே திசையைப்
பார்த்த வண்ணம் வைக்க மாட்டாள்
இரண்டும் எதிரெதிர்த் திசையைப்
பார்த்த வண்ணம்
இரண்டும் நேருக்கு நேர்
சந்தித்துக் கொள்ளும் வண்ணம் தான்
வைப்பாள்
அப்படி இருக்கும் இரண்டு விளக்குகளுக்கும்
திரி என்பது மேல் உதடு
விளக்கின் முன் விளிம்பு கீழ் உதடு
சுடர் என்பது முத்தம்
காற்று என்ற காதல் அரும்பி
இரண்டும் மாறி மாறி
முத்தமிட்டுக் கொள்வதைப் பார்த்து
விதிர்விதிர்த்துப்போவாள்
அவளைப் பொருத்தவரை
கடவுள் இருக்கிறார் என்ற
அவளுடைய நம்பிக்கை தான்
கடவுள் இருப்பதற்கே அத்தாட்சி.


2. நிச்சலனம் 
மௌனத்திற்கு ஓசை சலனம்
அசைவற்றுக் கிடக்கும்
கிளைகளுக்கும் இலைகளுக்கும்
காற்று சலனம்
தேங்கிக் கிடக்கும்போது நீருக்கு
அதில் விழும் இலையோ கல்லோ
இல்லை வேறெதுவோ சலனம்
சப்தமிட்டபடி
வழியும் அருவிகளுக்கும்
ஓடும் நதிகளுக்கும்
அலைகள் ஓயாத கடலுக்கும்
இல்லை நிச்சலனம்
அதுபோல்தான்
ஆசைகள் சலனம் மனதிற்கு
ஆசைக்கு வேண்டுமானால்
நீ என்னை நிர்மால்யா என்றும்
நான் உன்னை நிர்மலா என்றும்
மாறி மாறி அழைத்துக் கொள்ளலாம்.


3. கடவுச்சீட்டு 
தலைவன் தலைவியைக் கண்டு
அணங்கோ என்று ஐயுற்ற பின்
பெண் தான் என்று
உறுதி செய்து கொள்கிறான்
வள்ளிக்கொடியால் எழுதிய
தொய்யிலை வைத்து
வண்டு அரற்றும்
பூங்குழலை வைத்து
ஐயம் தீர்ந்தால் தானே
மெய்தொட்டு களவைக் கற்க முடியும்
வள்ளிக்கொடியால்
எழுதிய தொய்யில்
பின் மருதாணிச்செடியால்
எழுதும் மருதோன்றியானது
இதுபோல ஒன்றுதான்
பச்சை குத்துவதும்
பாட்டியின் இடதுகையின் உட்புறம்
புயத்திற்குக் கீழ்
பின்னிப் பிணைந்த பாம்புகளை
அவள் பச்சையாக குத்தியிருந்தாள்
அம்மா அப்படி எதுவும் குத்தவில்லை
ஒருதலைமுறையில்
கைவிடப்பட்ட வழக்கம்
இப்போது மீண்டும் தொற்றிக் கொண்டது
பாட்டி பச்சை குத்தியதைப் பற்றி
நிறைய கதைகள் சொல்லியிருக்கிறாள்
புரட்டாசி நோன்பின் போது
பச்சை குத்த குறத்திகள்
தெருவழியே வருவார்களாம்
திருவிழாவின் போது
பலூன் விற்கும் குறத்திகளையும்
மருதாணி அச்சு வைக்கும் குறத்திகளையும்
எனக்கும் தெரியும்
குத்தூசியால் வலிக்க வலிக்க
இரத்தம் வழிய வழிய
பச்சை குத்திவிடும் குறத்திகள்
கூலியாக வாங்கிச் செல்வார்களாம்
சுடச் சுட சுட்ட சோள தோசைகளை
பாட்டியைப் பொருத்தவரை
உடம்பில் குத்திய பச்சை என்பது
சொர்க்கத்திற்கு எளிதில் சென்று விட
வழிவகை செய்யும்
கடவுச்சொல் அல்லது கடவுச்சீட்டு
அழிக்க முடியாத கடவுளும் கூட.

About the author

மு.ஆறுமுகவிக்னேஷ்

மு.ஆறுமுகவிக்னேஷ்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website