அணைத்துக் கொண்டு படுக்கிற
வாகுக்கென்றே செய்யப்பட்டதுபோல்
அகலமுடையது நம் கட்டில்.
சுனை அனுமதிக்கிற
பாறையாய்க் கொஞ்சி கொஞ்சி
வெட்க தூரத்தைச்
சொற்களால் நெகிழ்த்தி
முதன்முதலில் நீ என்
உடல் பருகியது அதில்தான்.
கோடிப் பூக்களால்
கிளைகளுக்கு உதட்டுச் சாயம் பூசி நிலம்
தனக்குத் தானே
அலங்கரித்துக்கொள்ளும் காலம் தீர்ந்து
தீயாய்ச் சுடுங் கோடையில்
சருகு உதடுகளால் சத்தமிட்டு அழுகின்றன மரங்கள்.
நீ அயற்சியுற்று
உறங்கியபின் வரும் பிறையை
யன்னலின்வழி பார்த்தபடி பயணிக்கிற
நினைவுத் தடங்களில்
எப்படியும் இடறிவிடுகிறது
வாக்குவாதங்களின் இடையே
தவறாமல் ஒலிக்கிற ‘உங்கப்பன்’ என்கிற சொல்.
மாப்பிள்ளையும் மகளும் மிக
நெருங்கிப் படுக்க என்று
கச்சிதமான அளவுக்கு என்
அப்பா செய்த தேக்குக் கட்டிலில்
அதன்பின்
தினந்தோறும்
நிகழ்ந்தபடி இருக்கிற தாம்பத்யம்
தேரைவிழுந்த தெங்கு.