ஊரிலுள்ள ஆண் குழந்தைகளை எல்லாம்
அறுத்துக் கொன்றிட
ஆணையிட்ட மன்னனின் படைவீரன் நான்
அன்றைய தினம் நூறு கொலைகள் செய்தேன்
நூறும் பச்சை இரத்தம்
எதற்காகக் கொல்லப்படுகிறோமென அறியாமல்
மடிந்து போன தலைகள்
முதல் அறுப்பு மட்டுமே நினைவிலுள்ளது
தூளியில் கிடத்திவிட்டு தானியத்தை
அரைத்துக் கொண்டிருந்த அத் தாயானவளிடமிருந்து
கழுத்தை அறுக்கும் போது
உரலும் உலக்கையும் குருதியாகக் காட்சியளித்தன
என் பாவமும் கடமையும்
மத்திய வேளையில்
பிறந்து மூன்றே நாட்களான மகன் ஒருவனை அறுத்தேன்
அவனுக்கென செதுக்கப்பட்ட
மரப்பாச்சி ஒன்று
அவனது மரண ஓலத்திற்கென
கைகளைத் தட்டி வழியனுப்பியது
உறங்கிக் கொண்டிருந்த
குழந்தைகளை அறுக்கும் போது
எதிர்ப்பற்ற பெண்ணை அடைவது போல
சுவாரசியமற்றுள்ளது
நூறாவது கழுத்தை அறுக்கும் போது
எனது கட்டை விரலுக்கும்
ஆட்காட்டி விரலுக்குமிடையே
காப்பு காய்த்திருந்தது
எச்சிலால் உதறிக்கொண்டேன்
நாளை அரசவையில்
சிறந்த வீரனென அறிவிக்கப்படலாம்
நாளை இருநூறு கொலைகள் செய்ய உந்தப்படலாம்
இனி
வாழ்வில் எங்கு குழந்தைகளைப் பார்த்தாலும்
என் கைகள் தாமாக
உடைவாளை உருவ முற்படலாம்
சித்தம் தடுமாற
வாளைப் புதைக்க எடுத்தேன்
வாளில் மார்புக் காம்பொன்று காய்ந்து கிடந்தது
பால் குடித்துக் கொண்டிருந்த
எந்த குழந்தையைப் பிடுங்கி இழுத்தேனென தெரியவில்லை
அந்த மார்புக் காம்புக்கு
நாக்கும் கண்களும் இருந்தன
என் அம்மாவின் முகச்சாயலை ஒத்திருந்தது
” என்னை ஏன் கொய்தாய்
என்னை ஏன் கொய்தாய் “
அவை பேசத் தொடங்கின
அந்த குரல் வளர்ந்தது
நூறு நாக்குகளுடன் பெருங்குரலாக
நூறு குரல் வளையமும்
பெருந்துளையாக
பெருந்துளையாக
பெருந்துளையாக.