நாலைந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை
பத்து நாய்களுக்குப் பங்கிட்டு வீசி
நடையோடு தன் கருணையை
உறுதி செய்கிறார் வயதான ஒருவர்..
மருமகளின் அட்டகாசங்களை
வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டே
வீடு திரும்ப மனமில்லாமல்
மெல்ல நடக்கிறார்கள்
பாட்டிகள் இருவர்..
க்வீக் க்வீக் என்ற சத்தத்துடன்
கலர் கலராக லைட் எரியும் புதிய
காலணியை ரசித்தவாறே
குதித்துக் குதித்து நடக்கிறது ஒரு குட்டி நிலா..
வீட்டில் காத்திருக்கும்
மலையளவு வேலைகளை நினைத்தவாறே
நடையை ஓட்டமாக்க முயல்கிறாள்
சற்றே வயிறு பெருத்த இல்லத்தரசி..
குழுவாக அரட்டை அடித்தவாறே
அடுத்தவர்களுக்கு வழி விடாமல்
தெருவையே அடைத்து நடப்பதாக
அலைகிறது அங்கிள்களின் கூட்டம்..
மூன்றரை மணிக்குக் கடைசி சரக்கு
லாரி கடந்தபின் சற்றே கண்ணயர்ந்த
தார்ச்சாலை அதற்குள் விடிந்ததை
எண்ணிச் சலிப்புடன் புரள்கிறது..
ஷெண்பா
சிறப்பு மிகச் சிறப்பு சகோதரி…
தங்கள் கவிதை படைப்புகள் தொடரட்டும் ⭐🌈🌷🍀🤝🌲🎁🙏…
பூபதி