அவ்வளவு பழக்கமில்லாத
அந்த தூரத்துப் பணக்கார உறவின்
கல்யாணத்துக்கு
குடும்பசகிதமாகப் போக மனமின்றி
தான் மட்டும் புறப்பட்டு
நூறு ரூபாய் மொய் எழுதி
பள்ளிக்கூடத்துக்குப் போன புள்ளைக்கு
ஒரு வாய் இனிப்பு கொண்டுவரலாம் எனச்
சிறிய டப்பா ஒன்றைப்
பையில் மறைத்துக் கொண்டு போன
அமுதாவின் காதில்
“யாருக்கும் பொட்டலம் கொடுக்காதீர்கள்” எனச்
சமையல்காரரிடம் யாரோ சொன்ன வார்த்தை
காதில் வந்து விழ,
செய்வதறியாது பந்தியில் அமர்ந்து
தனக்கு வைத்த இனிப்பைப்
பிள்ளையின் பொருட்டு
சேலையின் தலைப்பில் முடிந்துகொண்டாள்
யாரும் பார்க்காத அந்நிகழ்விற்கு
ஒட்டிக்கொண்ட
சிறுநூல் மட்டும்
சாட்சியாகிப்போனது..!!